Published : 29 Mar 2017 10:02 AM
Last Updated : 29 Mar 2017 10:02 AM
நீங்கள் ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான பதவியில் இருக்கலாம். அல்லது, மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பில் உள்ளவராகக்கூட இருக்கலாம், மிகப்பெரிய பலசாலியாகக்கூட இருக்கலாம். ஆனால், எப்போது உங்கள் வீட்டில் ஒரு சுட்டிப் பையன் / குட்டிப் பையன் வந்துவிடுகிறானோ, அப்போது உங்கள் வீட்டின் ‘பாஸ்’ யாரென்பதில் சந்தேகமே வரக்கூடாது. அதன்பிறகு உங்கள் வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு செயலையும் முடிவு செய்வது அந்த ‘குட்டி பாஸ்’தான், நீங்கள் இல்லை.
அதன்பிறகு, நமக்கான நேரம் முற்றிலுமாக மாறிவிடும். சாப்பிடுவது, தூங்குவது என்று எதற்கும் தனியாக நேரம் ஒதுக்க முடியாது. எப்போது நம்ம வீட்டு ‘பாஸ்’ தூங்குகிறாரோ, அப்போது நாமும் தூங்கப் பழகிக்கொள்ள வேண்டியதுதான். இப்படி நம் அனைவரின் வீட்டிலுமே நடக்கும் அழகான சம்பவங்களை, போராட்டங்களை மிகவும் அழகாக ஒரு சிறுவர் கதை புத்தகமாக எழுதினார், மார்லா ப்ரஸி. அதுதான் ‘பாஸ் பேபி‘.
புதிய கதாநாயகர்
2010-ல் வெளியான மார்லாவின் ‘பாஸ் பேபி’ புத்தகம் உலக அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் வழக்கமான விஷயங்களை மாறுபட்ட பார்வையில், அட்டகாசமான ஓவியங்களுடன் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாக, அதன் இரண்டாம் பாகத்தையும் கொண்டுவந்தார் மார்லா.
முதல் பாகத்தில் ஒரு குழந்தையின் வருகை எப்படிப் பெற்றோரின் உலகத்தையே மாற்றிவிடுகிறது என்று எழுதி இருந்தார். இரண்டாம் பாகத்தில், இரண்டாவது குழந்தையின் வருகை மூன்று பேரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது (அப்பா, அம்மா + முதல் குழந்தை) என்று ஜாலியாகச் சொல்லி இருந்தார். இந்த இரண்டு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வாரம் வெளியாக இருக்கும் ‘பாஸ் பேபி’ அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மும்முனைப் போட்டி
குழந்தைகள் இருக்கும் வீட்டில் பலவிதமான போராட்டங்கள் இருக்கும். விதம் விதமான சண்டைகள் வரும். ஆனால், இப்படி ஒரு மோதல் உருவாகும் என்று நாம் யாருமே நினைத்திருக்க மாட்டோம். சொல்லப்போனால், இது ஒரு நேரடியான மோதல்கூட இல்லை. இது ஒரு மும்முனைப் போட்டி.
இதுநாள்வரை வீட்டில் ஒரே ஒரு செல்லப்பிள்ளையாக இருந்த மூத்த வாரிசுகளுக்கு, திடீரென்று தம்பிப் பாப்பாவோ, தங்கச்சிப் பாப்பாவோ வருவதைப் போட்டியாகவே நினைக்கத் தோன்றும். ஏழு வயது டிம்முக்கும் அப்படித்தான். அப்பா, அம்மாவோடு ஜாலியாக இருந்துவந்த அவனுக்குத் திடீரென்று கோட், சூட் அணிந்த நான்கு வயது தம்பி ஒரு போட்டியாகவே தெரிந்தான். அவன்தான் ‘பாஸ் பேபி‘ இது முதல் போராட்டம் என்றால், இரண்டாவது போராட்டம் இன்னமும் வேடிக்கையானது.
சுட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் செல்லமும் அன்பும் முழுவதுமாக அவர்களைச் சேராமல், மற்றவர்களுக்குப் பகிரப்பட்டால், அவர்களால் அதைத் தாங்க முடியாது. அப்படிப் பகிரப்படுவது நாய்க்குட்டிகளுக்கு என்றால், அவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது.
நாய்க்குட்டிகள் தங்களது இடத்தைப் பிடித்துக்கொண்டு, பெற்றோர்களின் அன்பைப் பெறுவதை விரும்பாத ஒரு ரகசிய அமைப்பு, நாய்க்குட்டிகளின் அடுத்த கட்டப் படைப்பான ஒரு புதிய வகை நாய்க்குட்டியைப் பற்றிய தகவலைச் சேகரிப்பதற்காக ‘பாஸ் பேபி’ பெற்றோரின் வீட்டுக்கு வந்திருக்கிறான்.
குட்டி ஜேம்ஸ்பாண்ட்
டிம்முக்கும் அவனது தம்பியான ‘பாஸ்’ பேபிக்கும் இடையே ஆரம்பத்தில் நடக்கும் போட்டிகள், பின்னர் நட்பாக மாறி அவர்கள் இருவரும் இணைந்து, நாய்க்குட்டிகளின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கச் செல்லும் சாகசமே இந்தத் திரைப்படத்தின் ஹைலைட். அதிலும் குறிப்பாக, சகோதரர்கள் இருவரும் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் துப்பறிவது காமெடியின் உச்சம்.
பாஸ் பேபிக்கு, தனது தனித்துவமான குரல் மூலமாக உயிர் கொடுத்து இருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின். ஜாலியாக ஒரு கார்ட்டூன் படத்தை ரசிக்க விரும்பினால், ‘பாஸ்’ பேபி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்.
எட்டு வயதில் புத்தகம் எழுதிய மார்லா
மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பார்சல் கட்டி தருவார்களே, (Happy Meal Box) காகித அட்டையிலான அந்தப் பார்சல் பெட்டியின் டிசைனை உருவாக்கியதற்காகப் புகழ்பெற்றவர்தான் இந்த மார்லா. அசாத்தியத் திறமைசாலியான இவர், மூன்றாவது படிக்கும்போதே கதை எழுதி, ஓவியம் வரைந்த ‘நட்பு வட்டம்’ என்ற புத்தகம் மாகாண அளவிலான பரிசைப் பெற்றது. அதன் பின்னர், வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் ஜாலியாக, சந்தோஷத்துடன் எதிர்கொண்டு முத்திரையைப் பதித்தார். நாமெல்லாம் வியந்து பார்க்கும் ஹீமேன் பொம்மைக் கம்பெனியிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார், மார்லா.
ராட்டினக் கதை
ஒரு ஓவியராகத் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். ஏகப்பட்ட புத்தகங்களுக்கு ஓவியங்கள் வரைந்து வந்த அவர், ஒரு கதைசொல்லியாக மாறியது ஒரு சுவையான சம்பவம். தனது மூன்று மகன்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்கள் தொடர்ந்து ராட்டினத்தைப் பற்றியே பேசியது வியப்பை அளிக்க, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ராட்டினத்தை மையமாக வைத்து அவர் எழுதிய கதைக்கு, அவரே ஓவியம் வரைய, அந்தப் புத்தகம் ஹிட் ஆனது, அதன்பிறகு மார்லா தொடர்ச்சியாகப் பல கதைகளை எழுதி, ஓவியம் வரைந்துவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT