Published : 28 Sep 2016 11:48 AM
Last Updated : 28 Sep 2016 11:48 AM
இரவு நேரங்களில் கரைகளில் நின்று கடலை ரசித்திருக்கிறீர்களா? ஒளி விளக்குகளின் பிரதிபலிப்பால் இன்று சொர்க்கமாய் மின்னுகிறது கடல். மிக வேகமாக வளர்ந்துவரும் கடற்கரையோர ஓட்டல்களும், சாலையோர உயர்கோபுர விளக்குகளும் கடலை ஒளி வெள்ளத்தால் அழகாக்குகின்றன. இந்தக் காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள்.
ஆனால், நகரத்தை விட்டு வெகு தூரத்தில் உள்ள கடற்பகுதிகளில் இது போன்று ஒளி வெள்ளக் காட்சிகளைப் பார்க்க முடியுமா? நிச்சயம் முடியும். இது செயற்கை ஒளி அல்ல. இயற்கையாகவே ஒளி அலைகள் கடல் நடுவில் தோன்றி மறைகின்றன. இதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, இது இயற்கையின் மாயா சக்தி என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு.
ஒளிரும் கடல்
கடலில் ஆங்காங்கே ஒளி அலைகள் எழுவதைப் படகோட்டிகளும் மாலுமிகளும் முதலில் பார்த்து அதிசயித்துப்போனார்கள். நெருப்பு இல்லாமல், மின்சாரமும் இல்லாமல் கடலில் எப்படித் திருவிழா சீரியல் பல்புகள் போல வெளிச்சம் பாய்கிறது எனக் குழம்பிப் போனார்கள். இது ஏதோ மர்ம தேசத்தின் மகத்தான சக்தி என்று சொல்லி மறந்தும்விட்டார்கள்.
ஓர் உண்மையைக் கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கும் அல்லவா? கடலில் தோன்றும் ஒளி அலையைப் பற்றியும் அப்படித்தான் நடந்தது. பின்னர் ஒரு வழியாகக் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், இது கடலில் மிதக்கும் பாசியின் தன்மை என்று கண்டுபிடித்தார்கள்.
ஒளிக்குக் காரணம்
உயிரினங்கள் இப்படி ஒளியை உமிழ்வதற்குப் பயோலூமினேசென்ஸ் (BIOLUMINESCENCE) என்று பெயர். இந்த வகைப் பாசிகளும், உயிரினங்களும் உலகமெங்கும் உள்ளன. இந்த ஒளிப்பாசிகள் பல சமயங்களில் அலைகளோடு சேர்ந்து மேலெழும்பி ஒளிக்கோபுரமாக உயரும். இதைக் கடல் ஒளி அலைகள் என்று சொல்வார்கள்.
இந்த ஒளி அலைகளின் ஒளி சாதாரணமாக இருக்காது. கண்ணைப் பறித்துச் செல்லும் அளவுக்குத் தண்ணீர் வைரமாய் மின்னும். வானத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கடலில் விழுந்து, அலைகளில் மிதக்கின்றனவோ என்ற சந்தேகம்கூட இதைப் பார்ப்பவர்களுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு ஒளி வீசக்கூடியவை.
நாம் வீட்டருகே பார்த்து ரசிக்கும் மின்மினிப் பூச்சிகள் மாதிரி இவை மின்மினிப் பாசிகள். இவை எல்லா நேரங்களிலும் ஒளியை உமிழ்வதில்லை. மனிதர்கள் இந்தப் பாசிகளைக் கலைக்கும்போதோ, படகோட்டிகள் துடுப்புகளால் இந்தப் பாசிக்குத் தொந்தரவு செய்யும்போதோதான் இவை ஒளிர்கின்றன. மேலும் அலைகளிலும், நீர்ச்சுழல்களிலும் இவை ஒளிரும்.
ஏன்?
இவ்வகைப் பாசிகள் ஏன் ஒளியை உமிழ்கின்றன? பாசிகள் தங்கள் பாதுகாப்புக்காகவே ஒளியை உமிழ்கின்றன. மனிதர்களாலும் பிற நீர்வாழ் விலங்குகளாலும் ஆபத்து நெருங்கிவரும்போது இவ்வகைப் பாசிகள் ஒளியை உமிழ்ந்து மற்ற பாசிகளை எச்சரிக்கும். துடுப்புகளால் தாக்கப்படும்போதும், ஒன்றன் மீது ஒன்றாக மோதி ஒளியை உமிழ்கின்றன.
எப்படி?
சரி, எப்படி ஒளியை உமிழ்கின்றன? பொருள் ஒன்று எரிவதற்குத் துணை நிற்கும் வாயுவான ஆக்சிஜன்தான் உயிரினங்கள் ஒளியை உருவாக்கவும், உருவாக்கிய ஒளியை உமிழ்வதற்கும் காரணம். தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும்போது, இந்தக் கடல்வாழ் பாசிகள் தங்களது சிறப்பு உறுப்புகள் மூலம் ஆக்சிஜனைச் சேமித்து வைத்துக்கொள்கின்றன. தேவை ஏற்படும் போது ஒளியை உமிழ்கின்றன.
உணவின்றிப் பசியோடு இருக்கும்போது இவை ஒளியை உமிழ்வதில்லை. இந்தப் பாசிகளைத் தவிர ஒளிவிளக்கு மீன், சில வகைக் காளான்கள், ஜெல்லி மீன்கள் போன்றவையும் ஒளியை உமிழ்வதற்கான சிறப்பு உறுப்புகளைப் பெற்றுள்ளன.
ஒளி விளக்கு மீன்கள் (Lantern Fish) தங்கள் ஒளி வீசும் தன்மையை இரை தேடப் பயன்படுத்திக்கொள்கின்றன.
நமக்கும் இப்படி ஒளிவீசும் உறுப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? நமக்கு இருக்கும் மூளையைவிடவா வேறொரு ஒளி வீசும் உறுப்பு வேண்டுமா என்ன ?
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT