Published : 28 Jun 2017 11:14 AM
Last Updated : 28 Jun 2017 11:14 AM

காரணம் ஆயிரம்: கோமாளி மீன்கள் தப்பிப்பது எப்படி?

கடலில் வாழும் விஷமுள்ள உயிரினம் கடல் தாமரை (Sea anemone). தாமரைப் பூவின் வடிவத்தைப் போன்று இருப்பதால் இந்தப் பெயர். இதைக் கண்டாலே கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி ஓடிவிடுகின்றன. ஆனால், இந்தக் கடல் தாமரைக்குள்தான் பெரும்பாலும் வசிக்கிறது கோமாளி மீன் (Clown Fish).

கடல் தாமரை உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டுண்ணிகளையும் கோமாளி மீன்கள் சாப்பிட்டு வளர்கின்றன.

ஏன் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை ஒன்றும் செய்வதில்லை?

கோமாளி மீன்களால் இரண்டு நன்மைகள் கடல் தாமரைகளுக்குக் கிடைக்கின்றன. கடல் தாமரையின் ஒட்டுண்ணிகளைக் கோமாளி மீன்கள் சாப்பிட்டு விடுவதால் நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றன. கோமாளி மீன்கள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருப்பதால், கடல் நீர் தூய்மைப்படுத்தப்பட்டுப் புதிய காற்று சுவாசிக்கக் கிடைக்கிறது.

இந்த இரண்டு காரணங்களால்தான் கடல் தாமரைகள், கோமாளி மீன்களை விட்டு வைத்திருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உதவி செய்யும் பண்போ உணர்வோ கடல்வாழ் உயிரினமான கடல் தாமரைக்கு இருக்க வாய்ப்பில்லை.

கடல் தாமரை அப்படியெல்லாம் பார்க்காது. தனக்கு உதவுபவர், உதவாதவர் என்றெல்லாம் அதற்குத் தெரியாது. கடல் தாமரையை யார் தீண்டினாலும் மரணம்தான்.

அப்படியென்றால் கோமாளி மீன்கள் எப்படிக் காப்பாற்றப்படுகின்றன? தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வளையத்தைத் தாங்களே தயார் செய்துகொள்கின்றன கோமாளி மீன்கள்.

இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலியக் கடற்கரை, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கோமாளி மீன்கள் காணப்படுகின்றன. இவற்றில் முப்பது வகைகள் இருக்கின்றன. கொஞ்சம் வெப்பமான பகுதிகளை விரும்புகின்றன.

கோமாளி மீன்கள் 18 செ.மீ. வரை வளரக்கூடியவை. தாவரங்களையும் பிற உயிரினங்களையும் சாப்பிடக்கூடியவை. கடல் தாமரை மிச்சம் வைக்கும் உணவும் கழிவும் இவற்றின் முக்கிய உணவு. கடல்வாழ் விலங்குகளின் லார்வாக்களையும் சாப்பிடுகின்றன.

பெண் கோமாளி மீன்கள் ஒரு தடவைக்கு 600 முதல் 1500 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஆண் மீன்கள் எடுத்துக்கொள்கின்றன.

கோமாளின் மீன்கள் கண்கவர் வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. இவற்றின் வண்ணங்களால் கவரப்பட்டு அருகில் வரும் சிறு உயிர்களைக் கடல் தாமரை உணவாக்கிக்கொள்கிறது. கடல் தாமரையில் வசிப்பதால் இந்தக் கோமாளி மீன்களை எதிரிகள் நெருங்குவதில்லை.

கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து, தங்களைச் சுற்றி ஒரு கவசம்போல உருவாக்கிக்கொள்கின்றன. இந்தச் சளி போன்ற திரவம்தான் கடல் தாமரையிடமிருந்து கோமாளி மீன்களைக் காப்பாற்றுகிறது. இந்தத் திரவத்தின் உள்ளே இருக்கும் கோமாளி மீன்களைத் தங்களுடைய உணர்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் கடல் தாமரைகள் ஏமாந்து போய்விடுகின்றன.

கட்டுரையாளர்அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x