Published : 27 Jul 2016 11:35 AM
Last Updated : 27 Jul 2016 11:35 AM
வாண்டு: பாண்டு, இன்னைக்குப் பள்ளிக்கூடத்துக்குச் சீக்கிரமா வரச்சொல்லியிருக்காங்கள்ல.
பாண்டு: சொன்னாங்க. ஆனா, ஏன்னு சொல்லலையேப்பா? உனக்குத் தெரியுமா?
வாண்டு: நல்லா கேட்குறியே கேள்வியை. இன்னைக்கு என்னான்னு மறந்துபோச்சா?
பாண்டு: சத்தியமா எனக்கு எதுவுமே தெரியல. ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.
வாண்டு: இன்னைக்கு அப்துல் கலாம் தாத்தாவோட முதல் நினைவு நாள். போன வருஷம் நாமெல்லாம் எவ்ளோ துயரத்துல இருந்தோம். மறந்திட்டியா பாண்டு?
பாண்டு: அட, ஆமா! எனக்கு ஞாபகமே இல்லப்பா? நேத்திக்கு விளையாட்டு போட்டியில கலந்துக்கிறதுக்காக வெளிய கூட்டிட்டுப் போய்ட்டாங்க. அதான் எனக்குத் தெரியாமபோச்சு.
வாண்டு: எப்போ பார்த்தாலும் உனக்கு விளையாட்டுத்தான். இன்னைக்குப் பள்ளிக்கூடத்துல உங்க வகுப்புக்கு அப்துல் கலாம் பத்தி பேச்சுப் போட்டி வைச்சுருக்காங்க. நீயும் கலந்துக்கோ.
பாண்டு: அப்படியா? ஒரு போட்டின்னா கொஞ்சமாவது தயாராகணுமே. திடீர்ன்னு எப்படித் தயாராகுறது?
வாண்டு: அவரோட வாழ்க்கை வரலாறு சம்பந்தமாத்தான் பேசணும். உனக்குத்தான் அவரைப் பத்தி நிறைய தெரியுமே. நான் கொஞ்சம் தகவல் சொல்றேன். அதையும் சேர்த்து உன்னோட பாணியில நல்லா பேசு.
பாண்டு: அவரோட ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் படிச்சுருக்கேன். படிச்சது கொஞ்சம் ஞாபகம் இருக்கு. நீயும் கொஞ்சம் சொல்லு. பேசிடுறேன்.
வாண்டு: ம்...சரி. நாம் இப்போ ஈஸியா பணக் கஷ்டம் இல்லாம படிக்குற மாதிரியெல்லாம் அப்துல் கலாம் சின்ன வயசுல படிக்கலை. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. சின்ன வயசுலேயே ராமேஸ்வரத்துல விடியற்காலையில எழுந்து நியூஸ் பேப்பரெல்லாம் போட்டிருக்காரு.
பாண்டு: இந்த விஷயங்கள் எனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் தெரியுமே. வேற ஏதாவது தகவல் சொல்லுப்பா?
வாண்டு: அப்துல் கலாம் தாத்தா கல்லூரிக்குப் போன பிறகுக்கூட எப்போதுமே படிப்புன்னுதான் கதியா இருப்பாராம். இப்பவே நாம எவ்ளோ அரட்டை அடிக்கிறோம். ஆனா, கல்லூரியில சேர்ந்த பிறகுகூட அவரு யாருடனும் அதிகம் பேச மாட்டாராம். நண்பர்கள் ரொம்ப கலாட்டா செஞ்சா லேசாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுவாராம். நண்பர்கள் சினிமாவுக்குப் போனாகூட வரமாட்டாராம். இப்படிப் படிப்பு...படிப்புன்னு... எப்போதுமே ஒரே குறிக்கோளோட இருந்திருக்காரு.
பாண்டு: ம்... அப்புறம், நம்மள மாதிரிக் குட்டிப் பசங்களுக்கு எட்டு உறுதிமொழிகளை அவர் உருவாக்கித் தந்திருக்காருல்ல. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லேன். இது வைச்சு ஈஸியா பேசிடலாம்.
வாண்டு: அந்த எட்டு உறுதிமொழிகள் எனக்குத் தெரியுமே. ‘எனக்கு ஒரு பெரும் சக்தி புதைந்திருக்கு. வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, என் சக்தியைக் கொண்டு நான் வெற்றி பெறுவேன்’. இதுதான் முதல் உறுதிமொழி பாண்டு.
அப்புறம், ‘ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அன்றைக்கே படித்து, அந்த அறிவை உள்வாங்கி, புரிந்து எழுதிப் படிப்பேன். முறையான படிப்பின் மூலம் என் உள்ளத்தின் ஆழ்மனதில் பதிந்துவிடும்படி நான் கற்று உணர்ந்து, தெளிவேன்’. இது இரண்டாவது உறுதிமொழி.
பாண்டு: அப்படியே ஒண்ணொன்னா சொல்லுப்பா.
வாண்டு: ‘அறிவுப்பெட்டகமாகத் திகழும் ஆசிரியர்களின் வாழ்வுமுறையைத் தெரிஞ்சு அவர்களை மதித்து என்னோட வாழ்வைச் செம்மைப்படுத்துவேன்’. அப்புறம், ‘பெற்றோர்களிடமிருந்து நல்லொழுக்கத்தைக் கற்பேன், ஆசிரியர்களிடமிருந்து அறிவுள்ள லட்சியத்தை அடைவேன்’ன்னு சொல்லியிருக்காரு. ஐந்தாவதா, ‘என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை உள்ளத்தில் உருவாக்குவேன். நான் பெற்ற அறிவை எல்லோருக்கும் கொடுப்பேன்’ன்னு சொல்லியிருக்காரு அப்துல் கலாம் தாத்தா.
பாண்டு: இன்னும் மூணு உறுதிமொழி பாக்கியிருக்கு வாண்டு.
வாண்டு: சொல்றேன் பாண்டு. ‘நான் வெற்றி பெறுவேன், மற்றவர்கள் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வேன்’ன்னு சொன்னது ஆறாவது உறுதிமொழி. ஏழாவதா, ‘பெற்றோர் உதவியுடன், வீட்டில் சிறு நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்களைப் படிப்பேன்’ன்னு சொன்னாரு.
பாண்டு: இன்னும் ஒண்ணே ஒண்ணு.
வாண்டு: கடைசி உறுதிமொழி என்னான்னா, ‘இன்றிலிருந்து என் மனதில் உன்னத லட்சியம் உதயமாகிவிட்டது. அறிவைத் தேடித்தேடி போவேன். கடினமாக உழைப்பேன்; பிரச்சினைகளைக் கண்டு பயப்படமாட்டேன். தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வியைக் கொடுத்து, விடாமுயற்சி செய்து உன்னத லட்சியத்தை வெல்வேன்’.
பாண்டு: இது போதுமே. இதை வைச்சு ஜாம்ஜாம்ன்னு பேசிடுவேன். ரொம்ப நன்றி வாண்டு. உனக்கு என்ன போட்டி?
வாண்டு: எனக்குக் கட்டுரைப் போட்டிப்பா.
பாண்டு: அப்போ ரொம்ப தயாராகியிருப்ப. ஆல் தி பெஸ்ட்ப்பா. அப்போ பள்ளிக்கூடத்துல இன்னிக்கு நமக்கு ரொம்ப பிடிச்ச அப்துல் கலாம் தாத்தாவைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கப்போறோம்னு சொல்லு.
வாண்டு: ஆமா, சீக்கிரமா பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு. இதோ நான் வந்திடுறேன்.
பாண்டு: சரிப்பா, நானும் கிளம்பிடுறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT