Published : 29 Oct 2014 09:51 PM
Last Updated : 29 Oct 2014 09:51 PM
சோப்பு போட்டுக் குளிக்கும்போதோ அல்லது அம்மா துணி துவைக்கும் போதோ ஒன்றைக் கவனித் திருக்கிறீர்களா? சோப்புகள் பல வண்ணங்களில் இருக்கும். ஆனால், அதிலிருந்து வரும் நுரை மட்டும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். இது எப்படி?
ஒரு பொருளின் நிறம், அது எந்த நிறத்தை எதிரொளிக்கச் செய்கிறதோ அதைப் பொறுத்ததே இதற்குக் காரணம். உதாரணமாக, பச்சை இலை தம் மீது விழும் எல்லா நிறங்களையும் உட்கவர்ந்து கொண்டு, பச்சையை மட்டுமே எதிரொளிக்கிறது இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
நுரை என்பது ஏராளமான மிகச்சிறிய நீர்க் குமிழிகள் ஒன்று சேர்ந்ததுதானே. இந்தக் குமிழிக்குள் காற்று அடைபட்டிருக்கும். நீர்க்குமிழிகளின் வடிவம் உருண்டையாக இருப்பதால், இதன் மீது விழும் ஒளி எல்லாத் திசைகளிலும் எதிரொளிக்கும். இப்படி எதிரொளிக்கப்படுவதால் அவை எல்லாமே ஒன்றாகக் கலந்து, வெள்ளையாகக் காட்சி தருகின்றன.
இதை எளிமையான ஒரு சோதனையின் மூலம் உணரலாம். சிவப்பு நிறமுள்ள ஒரு கண்ணாடி வளையலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு துண்டுகளாக உடையுங்கள். இப்போது இந்தத் துண்டுகள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறதல்லவா? இப்போது அந்த அத்துண்டுகளைச் சன்னமாகப் பொடித்து விடுங்கள். இப்போது உங்கள் கண்களுக்குச் சிவப்புப் பொடி தெரியாது. வெள்ளைப் பொடியாகவே தெரியும். அப்படித்தான் சோப்பு பல வண்ணங்களில் இருந்தாலும், நுரை வெள்ளை நிறத்திலேயே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT