Published : 01 Jun 2016 11:54 AM
Last Updated : 01 Jun 2016 11:54 AM
ஜூன் மாதம் வந்துவிட்டது. பள்ளியும் திறக்கப்போகிறது. பழைய வகுப்பு நண்பர்களை மீண்டும் பார்க்கலாம். புதிய நண்பர்களையும் நம் செட்டில் சேர்த்துக்கொள்ளலாம். விளையாட்டு, உறவினர்கள் வீடு, சுற்றுலா என்று ஜாலியாக விடுமுறையைக் கொண்டாடிவிட்டு திரும்பியிருப்பீர்கள். பள்ளி திறக்கும் இந்த நேரத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள், பள்ளியைத் தாண்டி அவர்கள் எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்று பார்ப்போமா?
கிழக்கு ஆப்பிரிக்காவில் காலோ
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சவானா புல்வெளிக்கு அருகில் வசிக்கிறான் காலோ. அவனுடைய அப்பா ஒரு குயவர். மண் பானைகள், சட்டிகள் எல்லாம் செய்பவர். மிகப் பெரிய, பரந்த சவானா புல்வெளியில் நிறைய பறவைகள், உயிரினங்கள் வாழ்கின்றன. யானை, ஓட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, சிவிங்கிப்புலி, நெருப்புக்கோழி என பல்லுயிர்கள் நிரம்பிய நாடு ஆப்பிரிக்கா. இந்த உயிரினங்கள், பறவைகளை சிறு வயதிலிருந்தே கவனிக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் குழந்தைகள், அந்த உயிரினங்களுக்கு அருகே வாழ்வது எப்படி என்பதை மட்டுமல்லாமல் அந்த உயிரினங்களிடமிருந்தும், அவற்றின் வாழ்க்கையிலிருந்தும்கூட நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பாவில் மாஷா
குளிர்காலத்தில் மழையைப்போல் பனி பொழியக்கூடிய ஒரு கிழக்கு ஐரோப்பிய கிராமத்தில் வசிக்கிறாள் மாஷா. இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மரத்தால் வீடுகளைக் கட்டியிருப்பார்கள். அப்போதுதான் வெளியே பொழியும் பனியின் குளிர் முழுமையாகத் தாக்காமல் இருக்கும். அதேநேரம் பனிக்காலம் வந்துவிட்டால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவதில்லை. பனியில் சறுக்கி விளையாடுவார்கள்; பனிவண்டி (ஸ்லெட்ஜ்) ஓட்டுவார்கள், பனியில் பொம்மை செய்து விளையாடுவார்கள். அவர்களுடைய ஊரில் பொம்மைகள், கையுறை பொம்மைகளை வைத்து பொம்மலாட்டக் கதைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த பொம்மலாட்டம் மூலம் புதிய கதைகள், கருத்துகள், விஷயங்களை குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொள்கிறார்கள்.
வடஇந்தியாவில் ராதா
வடஇந்தியாவில் ஒரு சிறிய மலை கிராமத்தில் வசிக்கிறாள் ராதா. ஆலமரத்துக்கு அடியில் இருக்கும் பள்ளியில், அவர்களுடைய ஆசிரியை கரும்பலகையில் ஒரு விடுகதையை எழுதிப்போட்டு விடை தெரிந்தவர்களை, வரைந்து காட்டச் சொன்னார். அந்த விடுகதை: 'நான் ஒரு ஆண் பறவை! தலையில் கிரீடம் சூட்டியிருப்பேன்! வால் முழுக்க காசுகள் இறைந்து கிடக்கும்! நான் யார்?'. இந்த விடுகதை கொஞ்சம் எளிமையானதுதான். ராதாவுக்கு அதன் விடை தெரிந்துவிட்டது. அவர்களுடைய ஆசிரியை போட்ட விடுகதைக்கான விடை, நம்முடைய தேசியப் பறவையான மயில். இந்தியாவில் கிராமத்துக் குழந்தைகள் விடுகதைகள், பழமொழிகள், பாட்டுகள் மூலமாகவே புதிய புதிய சொற்கள், கருத்துகள், விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.
பசிஃபிக்கில் தாஸ்பினா
உலகின் மிகப் பெரிய கடலான பசிஃபிக் பெருங்கடலில் சிதறிக் கிடக்கும் தீவு ஒன்றில் வசிக்கிறாள் தாஸ்பினா. அங்கு வாழும் மக்கள் இன்னமும் பழங்குடிகளைப் போன்றே வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூட்டாகச் சேர்ந்து 'கூட்டுப் பாடல்' நிகழ்ச்சி ஒன்றை இரவில் நடத்துவது அவர்களுடைய வழக்கம். அந்த கூட்டுப் பாடல் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார மக்கள் அனைவரும் வருவார்கள். நம்ம ஊர் திருவிழாவைப்போல நிகழ்ச்சி களைகட்டி விடும். அந்த நிகழ்ச்சியில் தங்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும், வாழ வைக்கும் கடலைப் பற்றி; அதன் அற்புதங்களைப் பற்றியெல்லாம் பாடுவார்கள். இதில் பங்கேற்கும் குழந்தைகள் பாடல்கள் மூலமாகவே கடலைப் பற்றியும், அங்கு வாழும் உயிரினங்களைப் பற்றியும், அதன் ஆச்சரியங்கள் பற்றியும் தெரிந்துகொள்கிறார்கள்.
வடஅமெரிக்காவில் சூசன்
வடஅமெரிக்காவில் ஐ.நா.வின் தலைமையகம் அமைந்திருக்கும் நியூயார்க் நகரில் வசிக்கிறாள் சூசன். ஐ.நா.வில் யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற பல்வேறு துணை அமைப்புகள் இருக்கின்றன. குழந்தைகள் மேம்பாட்டுக்காக யுனிசெஃப் செயல்பட்டு வருகிறது. எழுத்தறிவைப் பரவலாக்குவது, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுப்பது, குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்துவது, கல்வி மேம்பாடு என குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, உலக நாடுகளில் அவற்றை செயல்படுத்திவருகிறது யுனிசெஃப். குழந்தைகளுக்கு இன்னும் சிறந்த உலகத்தைத் தருவதற்கு இந்த முயற்சிகள் உதவுகின்றன.
நன்றி: என்ன செய்கிறேன்... கண்டுபிடி,
என்.பி.டி. வெளியீடு,
தொடர்புக்கு: 044-28252663
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT