Published : 20 Jan 2016 11:29 AM
Last Updated : 20 Jan 2016 11:29 AM
சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்த 13-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘ரான்னாஸ் சைலன்ஸ்’ எனப்படும் ஈரானியத் திரைப்படம் திரையிடப்பட்டது. பெஹ்சாத் ரஃபியீ இயக்கிய, குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜெர்மன் குழந்தைகள் திரைப்பட விழாவில் பரிசை வென்றுள்ள இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் இது. |
ஏழு வயதுச் சிறுமி ரான்னா ஒரு மலை கிராமத்தில் வாழ்கிறாள். அவளுக்கு ஒரு அண்ணன். அவர்களுடைய அப்பா அருகிலுள்ள நீர்ப்பறவை சரணாலயத்தில் ரேஞ்சராக வேலை பார்க்கிறார். அந்த கிராமத்திலேயே இருக்கும் சிறிய பள்ளிக்கூடத்தில் ரான்னா, அவளுடைய அண்ணன், அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனான குண்டுப் பையன் ஆகிய மூன்று பேரும் படிக்கிறார்கள்.
பள்ளி சென்ற கோழி
ரான்னா ஒரு கோழியை வளர்த்து வருகிறாள். கறுப்பு நிறம் கொண்ட அந்த அரிய வகைக் கோழிக்கு வெள்ளை நிறத்தில் அழகான கொண்டையும் உண்டு. அந்தக் கோழியின் பெயர் காகோலி. அந்தக் கோழியை ரான்னாவுக்குக் கொடுத்தது அவளுடைய பாட்டி. காகோலி என்றால் ரான்னாவுக்கு ரொம்பப் பிரியம். பக்கத்தில் இருக்கும் காட்டிலிருந்து வரும் நரி பிடித்துப் போய்விடும் என்று பயந்து, ஒரு நாள் பையில் வைத்து காகோலியை பள்ளிக்கூடத்துக்கே எடுத்துப் போய்விடுகிறாள் ரான்னா. பள்ளிக்கூடத்துக்கு கோழி எடுத்துவரப்பட்டதை அறிந்து ஆசிரியர் கண்டிக்கிறார்.
ரான்னாவின் அம்மாவோ, “ரான்னாவுக்கு ரொம்பவும் பிடித்த காகோலியைக் காணவில்லையே, அவள் வீட்டுக்கு வந்த பிறகு கேட்டால் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லையே” என்று தவிக்கிறார். ரான்னா வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிகிறது, கோழியை பையில் வைத்து அவள் பள்ளிக்கு எடுத்துச் சென்ற விவகாரம்.
காகோலியும் ரான்னாவும்
காகோலி சாப்பிடவில்லை என்றால், ரான்னாவும் சாப்பிடுவதில்லை. காகோலிக்கு ஒன்று என்றால், ரான்னா துடித்து விடுகிறாள். இப்படியாக காகோலியை ரான்னா பிரிவதேயில்லை. இந்நிலையில் காகோலி சரியாகச் சாப்பிடாமல் இருக்கிறது.
அதற்கு உடல்நலம் சரியில்லாததால், சாப்பிடுவதற்கு மறுக்கலாம் என்று ரான்னாவின் அப்பா நினைக்கிறார். அதனால் கால்நடை மருத்துவரிடம் கூட்டிச் செல்ல உதவுமாறு ரான்னாவின் அண்ணனிடம் அப்பா சொல்கிறார். பறவை சரணாலயத்தில் யாரோ சிலர் பறவைகளை பிடித்துச் செல்வது தெரிய வருவதால், அங்கே அவருக்கு வேலை அதிகமாகிவிடுகிறது.
கோழிக்கு சிகிச்சை
அண்ணன், நண்பனான குண்டு பையனுடன் காகோலியை எடுத்துச் சென்று கால்நடை மருத்துவரிடம் காண்பிக்கிறாள் ரான்னா. அவர் அந்த அரிய வகைக் கோழியை பாராட்டுகிறார். அதற்கு ஒரு மருந்து கொடுத்து, சீக்கிரம் அது குணமாகிவிடும் என்கிறார். இதைக் கேட்டு, “அந்தக் கோழி போட்டிருக்கும் ஏழு முட்டைகளில் குஞ்சு வரும்போது டாக்டருக்கும் ஒன்று தருவதாக” ரான்னாவின் அண்ணன் மகிழ்ச்சியுடன் சொல்கிறான்.
இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சண்டைக் கோழி வளர்க்கும் ஃபெரிதூன் என்ற பையனும் அங்கே வருகிறான். சண்டைக் கோழிகளை பார்க்க கால்நடை மருத்துவர் மறுத்துவிடுகிறார். “தேவையில்லாமல் அந்தக் கோழிகளை நீ கஷ்டப்படுத்துகிறாய்” என்று ஃபெரிதூனைத் திட்டுகிறார். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து குண்டுப் பையன் திரும்பத்திரும்ப சிரித்துக்கொண்டே இருக்கிறான். அது ஃபெரிதூனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
பேச்சிழந்த ரான்னா
வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட காகோலியை நன்றாக கவனித்துக்கொள்ள, அதற்கென்று தனி மரக்கூண்டு உருவாக்குமாறு அப்பா சொல்கிறார். அதைக் கேட்டு ரான்னாவின் அண்ணனும் குண்டுப் பையனும் மரப்பலகையை கூடாக அடித்து, கூண்டின் மேல் சேற்றைப் பூசுகிறார்கள். அதற்குள் இரவில் காகோலியை விடுகிறார்கள்.
ஒரு கடுமையான மழை நாள் இரவில், ரான்னாவை வீட்டுக்குள் கொண்டுவர ரான்னாவும் அவளுடைய அண்ணனும் வெளியே போகும்போது காகோலியை கூண்டில் காணவில்லை. அதன் சில இறக்கைகளும், ரத்தமும் மட்டுமே இருக்கிறது. ‘காகோலியை நரி தூக்கிச் சென்றிருக்கலாம்’ என்று அதிர்ச்சியுடன் கூறுகிறான் அண்ணன். இதனால் பயங்கரமாக அதிர்ச்சியடையும் ரான்னா பேச்சிழந்து போகிறாள். அதற்குப் பிறகு மிகவும் சோகத்தில் ஆழ்ந்துவிட்ட அவள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.
அவளுடைய அண்ணன், குண்டுப் பையன், பள்ளிக் குழந்தைகள், பள்ளி ஆசிரியர் என எல்லோரும் அவளைப் பேச வைக்க என்னென்னவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், அவள் பேசவேயில்லை. இதனால் அவளை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். “பயங்கர அதிர்ச்சியில் இதுபோல சிலர் பேச்சிழந்து போகலாம். காகோலி காணாமல் போன சம்பவத்தை ரான்னாவுக்கு ஞாபகப்படுத்துவது போன்ற எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டால், திடீரென பேச்சை இழந்ததுபோல, திடீரென பேசவும் ஆரம்பிக்கலாம்” என்கிறார் டாக்டர்.
தேடும் படலம்
காகோலி போட்ட ஏழு முட்டைகளில் ஸ்கெட்ச்சால் ரான்னா படங்கள் வரைந்து வைத்திருந்தாள். ஆனால், அந்த முட்டைகளை அவளுடைய அம்மா அவசரப்பட்டு முன்னதாகவே ஒரு கடைக்காரரிடம் விற்றுவிட்டாள். அந்த முட்டைகளை அடைகாக்க வைத்து, குஞ்சுகளை ரான்னாவுக்குக் கொடுக்கலாம் என்று நினைக்கிறான் அவளுடைய அண்ணன். அதனால், அவற்றைத் தேடி அவனும் குண்டு பையனும் கிராமம் கிராமமாக அலைகிறார்கள், யார் யாரிடமோ கேட்டுப் பார்க்கிறார்கள்.
மற்றொருபுறம் பறவை சரணாலயத்துக்கு வரும் பறவைகளைக் காப்பாற்ற ரான்னாவின் அப்பா முயற்சிக்கிறார். இதில் ஒரு நாள் இரவு பறவை வேட்டைக்காரர்கள் தாக்கியதில் அவர் காயமடைகிறார். அப்போது வேட்டைக்காரர்களுக்கு உதவும் சேவல் சண்டைச் சிறுவன் ஃபெரிதூன், அவரைக் காப்பாற்றுகிறான். “நான் நிறைய தப்பு செய்துவிட்டேன். அதிலிருந்து மீள முடியாதா?” என்றும் அப்போது அவன் கேட்கிறான். “எல்லோரும் எல்லா நேரமும் தவறு செய்வதில்லை. இப்போது நினைத்தாலும் சரணாலயப் பறவைகளைக் காப்பாற்றி, நீ நல்லது செய்ய முடியும்” என்கிறார் ரான்னாவின் அப்பா. அவன் மனம் மாறுகிறான்.
வீடு திரும்பிய காகோலி
கொஞ்ச நாளைக்குப் பிறகு ஒரு நாள் காலையில் ரான்னா வெளியே வந்து பார்க்கும்போது, கூண்டின் மேல் காகோலி உட்கார்ந்திருக்கிறது. அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. காகோலி எப்படி வந்தது என்று தெரியாவிட்டாலும், “அம்மா! காகோலி வந்துடுச்சு” என்று கத்துகிறாள். காகோலி காணாமல் போன பிறகு அவள் பேசும் முதல் வாக்கியம் அதுதான். இதைக் கேட்டு அவளுடைய அம்மாவும் அண்ணனும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்.
காகோலி அவ்வளவு நாள் யாரிடம் இருந்தது? யார் அதை அங்கே கொண்டுவந்து விட்டது? அவ்வளவு நாள் கோழிச்சண்டை, பறவை வேட்டையாடுதல் என்று திரிந்துகொண்டிருந்த ஃபெரிதூன்தான் காகோலியை பிடித்து வைத்திருந்தவன். எல்லா நேரமும் எல்லோரும் தவறு செய்வதில்லையே. ஃபெரிதூனுக்கும் அது பொருந்தும். இந்த முறை அவன் நல்ல காரியம் ஒன்றைச் செய்துவிட்டான். ரான்னாவிடம் காகோலியை கொண்டுபோய் சேர்ந்துவிட்டான். ரான்னா பேச ஆரம்பித்துவிட்டாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT