Published : 15 Jun 2016 11:54 AM
Last Updated : 15 Jun 2016 11:54 AM
பாண்டு: வாண்டு… என்னப்பா, உங்க வீட்டுல இருந்து பறவைகளோட பேரா கேட்டுக்கிட்டே இருந்துச்சு. பறவைகள் பேரை மனப்பாடம் செய்யுறியா?
வாண்டு: அதெல்லாம் இல்லப்பா. என்னோட குட்டித் தம்பியை ஸ்கூல்ல சேர்த்திருக்காங்க. அவனுக்குப் புத்தகத்தைக் காட்டி பறவைகளோட பேரைச் சொல்லிக்கிட்டு இருந்தேன். அது உனக்கு மனப்பாடம் செஞ்ச மாதிரி தெரிஞ்சதா?
பாண்டு: சரி, எந்தப் பறவையைப் பார்த்தாலும் நீ அதோட பேரை கரெக்டா சொல்லிடுவியா?
வாண்டு: ரொம்ப நல்லாத் தெரிஞ்ச பறவைகளோட பேரை உடனே சொல்லிடுவேன். மற்ற பறவைகளைப் பார்த்தா கொஞ்சம் கஷ்டம்தான்.
பாண்டு: ம்… மேற்கு வங்காளத்துல இருக்குற ஒரு குட்டிப் பையன்கிட்ட பறவையோட போட்டோவைக் காட்டினால் போதும், அவன் ஒரு நொடிக்குள்ள அதோட பேரைச் சொல்லிடுவான்.
வாண்டு: அப்படியா? அவ்ளோ வேகமா பேரைச் சொல்றான்னா ரொம்ப ஆச்சரியமா இருக்கே. யாருப்பா அந்தப் பையன்?
பாண்டு: அந்தப் பையன் பேரு வேதானஸ் குப்தா. கொல்கத்தாவுல இருக்கான். அவனுக்கு மூன்றரை வயசுதான் ஆகுது. அந்தக் குட்டிப் பையன்கிட்ட பறவைகளைக் காட்டினாலே டக்கு... டக்குனு பேரு சொல்றானாம்பா. ஒரு நிமிஷத்துல 55 பறவைகளோட பேரைச் சொல்லிடுவானாம்.
வாண்டு: ஒரு மணி நேரத்துல 55 பறவைகள் பேரா? அம்மாடியோவ், ரொம்ப வியப்பா இருக்கே.
பாண்டு: ஆமாம்மா… ரொம்ப சின்ன வயசுல ஒரு நிமிஷத்துல 55 பறவைகளைப் பார்த்தவுடன் பேரைச் சொல்றது இந்திய அளவுல சாதனையாம். அதனால், இந்தக் குட்டிப் பையனோட பேரு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடிச்சிருக்கு.
வாண்டு: நிச்சயமா பெரிய சாதனைதான் இது. இந்தக் குட்டிப் பையன் மாதிரியே அமெரிக்காவுல ஒரு சின்னப் பையன் நேஷனல் ஜியாகிராஃபிக்கில் போட்டோகிராபரா இருக்குறதையும் சாதனையா சொல்றாங்கப்பா.
பாண்டு: நேஷனல் ஜியாகிஃராபிக்னா காடு, மலை, கடல், பள்ளத்தாக்கு, பாலைவனம், விலங்குகள், பாரம்பரிய இடங்களைப் பத்திச் சொல்லுவாங்களே அந்த சேனலா? அதுல எப்போ பார்த்தாலும் ஆபத்தான விலங்குகளைத்தானே காட்டிக்கிட்டு இருப்பாங்க?
வாண்டு: அதே சேனல்தான். அந்த சேனலில் ஒரு சின்னப் பையன் போட்டோகிராபராயிருக்கான்.
பாண்டு: ரொம்ப சின்ன வயசுல எப்படி போட்டோகிராபரா ஆக முடியும்? அதைப் பத்தி கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்.
வாண்டு: அந்தச் சின்னப் பையனோட பேரு ஹாக்காய் ஹியூய். அவனுக்கு இப்போ ஆறு வயசு ஆகுது. இந்தப் பையனோட அப்பா நேஷனல் ஜியாகிராஃபில போட்டோகிராபரா இருக்காரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஹாக்காயை வட அமெரிக்கா பகுதிக்கு அவங்க அப்பா கூட்டிட்டுப் போயிருக்காரு.
அப்போ உடனடிப் படங்களை அவன் நிறைய எடுத்துருக்கான். அந்தப் படங்களை இண்டர்நெட்டுல அவுங்க அப்பா போட்டிருக்காரு. அதுல ஒரு போட்டோ நேஷனல் ஜியாகிராஃபிக்ல வந்துச்சாம். அதுக்கப்புறமா அவுங்க அப்பாகூட ஆயிரக்கணக்கான போட்டோகளை ஹாக்காய் எடுத்துருக்கான்.
அந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு அவனை நேஷனல் ஜியாகிராஃபிக்ல போட்டோகிராபரா சேர்த்துக்கிட்டாங்க. ரொம்ப சின்ன வயசுல நேஷனல் ஜியாகிராஃபிக்ல போட்டோகிராபரா ஆனவன்ற பெருமை ஹாக்காய்க்குக் கிடைச்சிருக்கு. இப்பவும் காடு, மலைன்னு ஆபத்தான பகுதிகளுக்குப் போய் ஆர்வமா போட்டோ எடுத்துக்கிட்டே இருக்கானாம்.
பாண்டு: ஆபத்தான பகுதிகளுக்குப் பயமே இல்லாமல் எப்படித்தான் போட்டோ எடுக்கப் போறானோ அந்தச் சின்னப் பையன்.
வாண்டு: எல்லாமே ஆர்வமும் முயற்சியும்தான் காரணம். இப்போ அமெரிக்காவுல இவனோட பேரு ரொம்ப பிரபலம் ஆயிடுச்சாம்.
பாண்டு: ரொம்ப பெரிய விஷயம்தான். சரி… உலகிலேயே வயதான ஆமை ஒண்ணு முட்டைகளைக் குஞ்சு பொரிச்சதும்கூடப் பிரபலமாயிடுச்சு. அதைப் பத்திக் கேள்விப்பட்டியா?
வாண்டு: இல்லையே பாண்டு. உனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லேன்.
பாண்டு: சுவிட்சர்லாந்துல ஜூரிச் நகரில இருக்குற விலங்குகள் காட்சிச் சாலையில கலாபாகோ வகையைச் சேர்ந்த ஒரு ஆமை இருக்கு. இந்த ஆமைக்கு 80 வயசு ஆகுது.
இந்த ஆமை கொஞ்ச நாளைக்கு முன்னாடி 9 முட்டைகளை இட்டுச்சாம். அந்த முட்டையிலிருந்து 9 ஆமைக் குட்டிகளை அந்த ஆமை குஞ்சு பொரிச்சிருக்குது.
வாண்டு: இதுல என்னஆச்சரியம்?
பாண்டு: பொதுவா வயதான ஆமைகள் முட்டை போட்டு குஞ்சு பொரிக்காதாம். இந்த ஆமையோ 80 வயசுல முட்டை போட்டு குஞ்சு பொரிச்சிருக்கறது இப்போதான் முதல் முறையாம்.
வாண்டு: அப்போ, இது அபூர்வ ஆமைன்னு சொல்லு.
பாண்டு: அப்படியும் சொல்ல வேண்டியதுதான். சரிப்பா, ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அம்மா தேடுவாங்க. நான் போறேன்.
வாண்டு: சரிப்பா, டாட்டா… பை…பை…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT