Last Updated : 21 Feb, 2017 04:38 PM

 

Published : 21 Feb 2017 04:38 PM
Last Updated : 21 Feb 2017 04:38 PM

வாங்க, நிலவுக்குப் போகலாம்: விண்வெளியில் பல் துலக்க முடியுமா?

விண்கலத்திலே போகும்போது எப்படி இருக்கும்? ஓர் உயரமான கட்டிடத்திலிருந்து விழும்போது எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு உணர்வு உங்களுக்கு இருக்குது இல்லையா? கொஞ்ச நேரம் கழித்து இந்த உணர்வு சரியாயிடும், கவலைப்படாதீங்க. சில விண்வெளி வீரர்கள் வருஷக் கணக்கில் விண்வெளியில் தங்கி வேலை செய்றாங்களே! சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதான்.

உங்களுடைய விண்வெளி உடையை முதல்ல பார்த்தபோது உங்களுக்கு விசித்திரமா இருந்திருக்குமே? உடையை போட்டுகிட்ட பிறகும் அப்படித்தான் தோணுதா?

கடுமையான குளிர், விண்வெளியில் வெற்றிடம் இதெல்லாம் உங்களைப் பாதிக்காம இருக்கணுமே. தவிர ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பும் இதிலே உண்டு. மேலும் தகவல் தொடர்புக்காக ஒரு ரேடியோவையும் இதிலே இணைச்சிருக்காங்கன்றதை கவனிச்சீங்களா?

நாள் முழுவதும் என்ன செய்வது? கொஞ்ச நேரம் தூங்கலாமே. ஆனால், தூங்கும்போது மறக்காமல் சீட் பெல்ட்டைப் போட்டுக்குங்க. இல்லேன்னா விண்வெளிப் பெட்டிக்குள்ளேயே மிதக்கத் தொடங்கிடுவீங்க.

‘ராத்திரி வந்ததும் தூங்கலாமே. அதுதானே வழக்கம்’ன்னு அசட்டுத்தனமாக சொல்லாதீங்க. விண்வெளியில் பகலும் கிடையாது. இரவும் கிடையாது. ராத்திரி வந்திடுச்சுன்னு நீங்களா கற்பனை பண்ணிக்கணும். தூங்குங்க. நல்ல கனவுகளா வரட்டும்!

அட முழிச்சிட்டீங்களே. ஜன்னல் வழியாக விண்வெளியைப் பார்க்கறீங்க. அதுக்காகப் பூமி எங்கே இருக்குன்னு பார்க்காதீங்க. ரொம்பத் தனிமையா உணருவீங்க.

எழுந்தவுடனே பல் துலக்கணுமா? நல்ல பழக்கம்தான். ஆனா, நீங்க இப்போ இருக்கிறது விண்கலத்திலேங்கிறது ஞாபகம் இருக்கில்ல?

விண்கலத்துக்குள்ளே பல்லை எப்படித் தேய்க்கிறது? பூமியில் இருக்கும்போது ஏதோ கடமையேன்னு செய்ததையெல்லாம்

விண்கலத்திலே இருக்கும்போது ஒரு உற்சாகத்தோடு செய்யத் தோணுது இல்லையா? என்னதான் வித்தியாசம்னு தெரிஞ்சுக்கிற ஆர்வம்தானே.

வாய்க்குள்ளே தண்ணியை விட்டுக்கலாம். பிரச்சினையில்லை. ஆனா, ஸ்ட்ரா மூலம்தான் உறிஞ்சணும். அவ்வளவுதான். பற்பசையை பிரஸ்ஸூல பிதுக்க முடியும். பற்பசை பிரஸ்ஸூலே நல்லாவே ஒட்டிக்கும். பல்லைத் தேச்சுக்குங்க. ஆனால், அதுக்கு முன்னே இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும்.

பல் தேய்க்கும்போது வாயிலே நுரை வரும். தண்ணீரைக் கொப்பளித்து வாஷ்பேசினில் துப்புவீங்க இல்லையா? ஆனால், இதை விண்கலத்திலே செய்வது கஷ்டம். வெளியே துப்பினா அது விண்கலத்தோட உள் சுவர்கள்ல வேகமாகப் பட்டு காற்றிலே பரவும். சொல்ல சங்கடமா இருக்குன்னாலும் சொல்லித்தான் ஆகணும். உங்களைச் சுற்றிலும் உங்கள் எச்சிலும், அசுத்தமான நுரையும்தான் இருக்கும்.

அதுக்காகப் பூமிக்குத் திரும்பிய பிறகுதான் பல்லைத் தேய்க்கணும்னு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. சில விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் பல நாட்கள் விண்கலத்தில் இருந்திருக்காங்க. அவங்க பல் தேச்சுக்காம இருந்ததில்லே. பேப்பர் பை ஒன்றைப் பயன்படுத்தி அதிலே நீங்க நுரையையும், தண்ணீரையும் துப்பலாம். அந்தப் பையை மேற்புறம் கட்டி வைத்து பூமிக்கு வந்த பிறகு தூக்கி எறியலாம்.

எல்லாமே வித்தியாசமான அனுபவமா இருக்குல்லே?

உங்க சீட் பெல்ட்டை தளர்த்திவிட்டுக்கலாம். இப்போ உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்துகிட்டிருக்கு.

(பயணம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x