Last Updated : 08 Jun, 2016 12:57 PM

 

Published : 08 Jun 2016 12:57 PM
Last Updated : 08 Jun 2016 12:57 PM

சித்திரக்கதை: கத்திரிக்காய் தேவதை கதை!

அம்மா சமையல் செய்துகொண்டிருந்தார். அப்பாவும் கூடமாட உதவிசெய்தார். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காய்கறிகளை எடுத்துக் கத்தியினால் நறுக்கினாள் அம்மா.

அப்போது ஒரு குட்டைக் கத்திரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்துக் குடுகுடுவென ஓடிக் குளிர்பதனப் பெட்டிக்குக் கீழே ஒளிந்துகொண்டது. அப்பாவும் கவனிக்கவில்லை. அம்மாவும் பார்க்கவில்லை. ஆனால், சுட்டிப் பையன் சுந்து பார்த்துவிட்டான். அவன் மெல்லக் குனிந்து பார்த்தான். இருட்டாய் இருந்தது.

“ஏய், குட்டைக் கத்திரி வெளியே வா..” என்று சுந்து கூப்பிட்டான். பதில் இல்லை.

“ நீ வரலைன்னா அம்மாட்ட சொல்லி உன்னைக் குழம்பில போட்ருவேன்” என்று சொன்னான். உடனே கத்திரிக்காய், “ வேண்டாம் வேண்டாம். இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள். நாளைக்கு வேணா குழம்பில போடு” என்று பாவமாகச் சொன்னது.

“சரி, சரி இன்னிக்கு உனக்குப் பிறந்த நாளா? அம்மாட்ட சொல்லமாட்டேன். ஆனா, நீ பிறந்த கதைய சொல்லணும், சரியா” என்று கேட்டான் சந்து.

என்னே ஆச்சரியம்! குடுகுடுவென ஓடி வந்து அவனுடைய சட்டைப் பையில் ஏறி உட்கார்ந்துகொண்டது கத்திரிக்காய். அவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினான். பள்ளிக்கூடம் போகும்போது குட்டைக் கத்திரிக்காயைச் சட்டைப் பையிலிருந்து எடுத்து யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டான்.

இரவில் சாப்பிட்ட பிறகு எப்போதும் கொஞ்ச நேரம் டி.வி.யில் கார்ட்டூன் பார்க்கிற சுந்து அன்று, “அம்மா எனக்குத் தூக்கம் வருதும்மா” என்று சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போய் விட்டான். போர்வையைப் போர்த்திக்கொண்டு பையிலிருந்த கத்திரிக்காயை வெளியே எடுத்தான்.

“ம்ம்… நீ பிறந்த கதையச் சொல்லு…”

குட்டைக் கத்திரிக்காய் தொண்டையைக் கனைத்துக்கொண்டு,

“ ஏழு கடல் ஏழுமலை தாண்டி ஏழு கத்திரிக்காய்த் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்துக்கு ராஜாவாகக் கத்திரிக்காய் மகாராஜா இருந்தாரு. அவர் நடந்தா மலை அசைஞ்ச மாதிரி இருக்கும். அவருடைய தலையில் இருக்கிற கிரீடம் எவரெஸ்ட் சிகரம் உயரத்துக்கு இருக்கும். அவர் எழுந்தால் ஏழூருக்கும் நிழல் விழுந்து இருட்டாயிரும். அவருடைய நாட்டில் நீல நிறக் கத்திரிக்காய்ச் செடியில்தான் நான் பிறந்தேன்.

எங்கள் நாட்டில் எங்களுக்குக் கதைகள் சொல்லக் கத்திரிக்காய்த் தேவதைகள் இருப்பார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் அழுதால் பிடிக்காது. உடனே குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கதைகள் சொல்வார்கள். ஊரைச் சுற்றிக் காட்டுவார்கள். பாட்டு படிப்பார்கள். குட்டிக்கரணம்கூடப் போடுவார்கள்.

அப்படித்தான் ஒரு நாள் என்னுடைய அம்மா என்னை விட்டுவிட்டுக் கடைக்குப் போய்விட்டாள். நான் அழுதுகொண்டிருந்தேன். அப்போது வந்த நீல நிறத் தேவதை என்னைத் தூக்கி வேடிக்கை காட்டுவதற்காகப் பறந்து போனாள். வழி தவறி இங்கே வந்துவிட்டோம். நீல நிறத் தேவதையைப் பார்த்த கழுகு, ஏதோ சிறு குருவி என்று நினைத்துப் பிடிக்க வந்தது.

அப்போது நான் தவறி ஒரு கத்திரிக்காய்த் தோட்டத்தில் விழுந்துவிட்டேன். தோட்டத்துக் கத்திரிக்காய் என்று நினைத்துத் தோட்டக்காரர் கத்திரிக்காய்களோடு சேர்த்துச் சந்தையில் விற்று விட்டார். உன் அப்பா வாங்கிய கத்திரிக்காய்களோடு நான் உன் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் நான் பிறந்து, வளர்ந்து, இங்கே வந்த கதை.”

வருத்தமாக இருந்த குட்டைக் கத்திரிக்காயிடம் சுந்து, “ உன்னைத் தேடி நீல நிற தேவதை வருமா?” என்று கேட்டான். “ இன்னிக்கு இல்லாட்டியும் நாளைக்குக் கத்திரிக்காய்த் தேவதை என்னைத் தேடி வருவாள்” என் என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடியது கத்திரி. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சுந்து கண்களைத் துடைத்துவிட்டான்.

“நீல நிற தேவதை வர்ற வரைக்கும் நான் உன்னப் பத்திரமா பாத்துக்கிறேன்” என்று சொன்ன சுந்து, போர்வையால் குட்டைக் கத்திரிக்காயை மூடினான்.

காலையில் கண் விழித்ததும் சுந்து கத்திரிக்காயைத் தேடினான். அதைக் காணவில்லை. இண்டு இடுக்கு என எல்லா இடங்களிலும் தேடியும், காணவில்லை. அவன் அன்று முழுவதும் வருத்தமாக இருந்தான். ராத்திரி படுக்கும்போது ஒரு சத்தம் கேட்டது. ஊய்ய்… என்று ஒரு விசில் சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது.

சுந்து சுற்றிலும் பார்த்தான். ஜன்னல் கம்பியில் குட்டைக் கத்திரிக்காய் சொன்ன நீல நிறத் தேவதை. அட, நீல நிறத் தேவதையின் முதுகில் யார்? குட்டைக் கத்திரிக்காய். சுந்து ஜன்னலுக்கு ஓடினான். சுந்து குட்டைக் கத்திரியிடம், “ நீ இங்கேயே இரு. எனக்குக் கதை சொல்ல யாருமில்லை” என்று சொன்னான்.

அப்போது நீல நிற தேவதை, “சுந்து, நீ உன்னோட அப்பா, அம்மாகூட இருக்கிற மாதிரிக் குட்டைக் கத்திரிக்காயும் இருக்கணும் இல்லையா?” என்று கேட்டது. சுந்து வருத்தத்துடன் ஆமாம் என்று தலையாட்டினான்.

அவனைச் சுற்றி நீல நிற தேவதை பறந்து அவனுடைய காதுக்கருகில் வந்து, “ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ராத்திரி உனக்குக் கதைகள் சொல்ல நாங்கள் வருவோம். சரியா, சுந்து” என்றது.

பின்னர், “ டாட்டா…” என்று நீல நிறத் தேவதையும் குட்டைக் கத்திரிக்காயும் கைகளை ஆட்டிக்கொண்டே பறந்து போய்விட்டார்கள்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சுந்துவுக்குக் கதைகள் சொல்ல நீல நிறத் தேவதையும் குட்டைக் கத்திரிக்காயும் ஏழுமலை, ஏழு கடல், ஏழு ஊர் தாண்டிப் பறந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x