Published : 24 Aug 2016 11:24 AM
Last Updated : 24 Aug 2016 11:24 AM
நம் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு என நீண்ட பாரம்பரியம் உள்ளது. ‘சென்னை தினம்’ கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் அந்நகரைப் பற்றி சில சுவையான தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
# இயேசுவின் சீடர்களில் ஒருவர் புனித தாமஸ் டைடிமஸ். இவர் சென்னையின் கடற்கரைகளில் நற்செய்தி உரைகளை நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. கி.பி. 72-ல் அவர் இறந்த பின் புனித தாமஸ் மலையில் அவருடைய கல்லறை எழுப்பப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
# உலகப் புகழ்பெற்ற பயணியான வெனிஸ் நகர வணிகர் மார்க்கோ போலோ, சென்னை வந்தபோது புனித தாமஸ் மலையில் அமைந்திருந்த தாமஸ் தேவாலயத்தையும், அவருடைய கல்லறையையும் 1293-ல் பார்த்துள்ளார்.
# பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் மயிலாப்பூர் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் மயிலைக் காவலன் மயிலாப்பூரை காப்பவர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
# இந்தியாவில் மேலை நாட்டவர்கள் கட்டிய முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டைதான். 1644-ல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. அதற்குப் பிறகு 300 ஆண்டுகளுக்கு மேல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் மீது செலுத்திய ஆதிக்கம் இந்தக் கோட்டையிலிருந்துதான் தொடங்கியது. பிரிட்டன் தலைமைத் தளபதியாக இருந்த ராபர்ட் கிளைவின் இல்லம் இப்போதும் இங்கே பாதுகாக்கப்படுகிறது.
# சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒய்.டபிள்யு.சி.ஏ. கட்டிடம் ஒரு காலத்தில் ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்டு கிளைவுக்குச் சொந்தமாக இருந்தது. ராபர்ட் கிளைவ்தான், கிழக்கிந்திய கம்பெனியிடம் இந்தியா வீழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கான பிரிட்டனின் தலைமைத் தளபதியாக இருந்தவர்.
# 1746-ம் ஆண்டில் பிரெஞ்சுப் படை சென்னையை கைப்பற்றியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செய்துகொண்ட ‘அய் லா ஷாப்பேல்’ ஒப்பந்தத்தின் அடிப்படையில், கனடாவில் உள்ள கியூபெக் நகரத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை அவர்களிடம் ஒப்படைத்தது ஃபிரெஞ்சுப் படை.
# இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான ரயில் நிலையம் ராயபுரம்தான். தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமும் இதுதான். 1856-ல் ராயபுரத்தில் ரயில் நிலையம் கட்டப்பட்டது. சென்னை கடற்கரையி லிருந்து அரக்கோணம் வரை ரயில் பாதையும் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் ரயில் 1856 ஜூன் மாதத்தில் ராயபுரத்தில் இருந்து ஆர்க்காட்டுக்குச் சென்றது. 1907-ல்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முக்கிய இடத்தைப் பிடித்தது.
# முதல் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே இந்திய நகரம் சென்னை. 1914 செப்டம்பர் 22-ம் தேதி ஜெர்மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை துறைமுகத்தின் மீது குண்டு வீசியது. இந்தக் குண்டுவீச்சு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கிழக்குப் பகுதி சுவரில் ஒரு நினைவுப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT