Published : 17 Aug 2016 12:36 PM
Last Updated : 17 Aug 2016 12:36 PM
உலகின் மிக நீளமான ஆறு, அதிக நீரைக் கடலில் கலக்கும் ஆறு எது? தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பிரேசில் நாட்டில் பாயும் அமேசான் நதிதான் அது. இந்த ஆற்றின் நீளம் 6,760 கிலோ மீட்டர்.
# இந்த ஆறு ஒவ்வொரு நாளும் அட்லாண்டிக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒட்டுமொத்த பிரிட்டனின் இரண்டு ஆண்டு நன்னீர் தேவைக்குச் சமமானது.
# இதயத்துக்குள் ஓடும் நரம்புகளைப் போல, வெப்பமண்டல மழைக்காட்டுக்குள் இந்த ஆறு பாயும் பகுதியே அமேசான் காடு.
# அமேசான் மழைக்காடுகளின் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசில் நாட்டின் மொத்தப் பரப்பில் பாதியை அமேசான் மழைக்காடுகளே நிறைத்துள்ளன.
# பூமிப்பந்தின் ஒட்டுமொத்த ஆக்சிஜன் தேவையில் பாதியை அமேசான் மழைக்காடுகளே தருகின்றன.
# உலகில் வாழும் மொத்த உயிரின வகை கள் ஏறத்தாழ 1 கோடி. இதில் 10 சதவீதம், அதாவது 10 லட்சம் உயிரின வகைகள் அமேசான் காட்டில்தான் வாழ்கின்றன.
# பூமியில் உள்ள தாவரங்கள், உயிரின வகைகளில் 30 சதவீதம் அமேசான் மழைக்காடுகளில்தான் உள்ளன. 1,800 வகைப் பறவைகள், 250 வகைப் பாலூட்டிகள் உள்ளிட்டவை அங்கே வாழ்கின்றன.
# அமேசான் ஆற்றில் மட்டும் 2,000 மீன் வகைகள் வாழ்கின்றன.
# அமேசான் காடுகளில் இன்னும் அறியப்படாத, மனிதர்கள் செல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அதனால் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் காடாக அமேசான் இருக்கிறது.
# அமேசான் காட்டுப் பகுதியில்தான் பிரேசிலின் உயரமான மலை இருக்கிறது. பிகோ டா நெப்லினா என்ற அந்த மலையின் உயரம் 9,888 அடி.
# உலகிலேயே நன்னீரால் சூழப்பட்ட மிகப் பெரிய தீவு அமேசான் ஆற்றுப் பகுதியில் உள்ள மராஜோ. இது சுவிட்சர்லாந்தின் பரப்பளவுக்கு இணையானது.
# அமேசான் காட்டுப்பகுதியை ஒட்டியிருக்கும் மனாவ்ஸ் நகரம் ரப்பர் உற்பத்திக்குப் புகழ்பெற்றது. 1890-1920 வரையிலான 30 ஆண்டுகளில், இந்த ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ரப்பரே உலகம் முழுவதும் சென்றது.
# அட்லாண்டிக் கடலிலிருந்து 1,600 கி.மீ. தொலைவில் உள்ள மனாவ்ஸ் நகரம், அமேசான் நதியின் பிரம்மாண்டம் காரணமாக ஒரு துறைமுகமாகவே செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய கப்பல்கள் இங்கே நின்று செல்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
# அமேசான் கரையில் வீற்றிருக்கும் மனாவ்ஸ் நகரில் 2014 ஃபிபா உலகக் கால்பந்து கோப்பையின் நான்கு போட்டிகள் நடைபெற்றன. அதற்காகக் கட்டப்பட்ட மைதானத்துக்கு ‘அரேனா அமேசானியா’ என்று பெயர் வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT