Last Updated : 26 Feb, 2014 12:00 AM

 

Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

மீன் குஞ்சுக்கு என்ன ஆச்சு?

கண்ணாடித் தொட்டிகளுக்குள் துள்ளித் திரியும் அழகான கலர் கலர் மீன்களைப் பார்த்திருப்போம். அந்த மீன்கள் நம்மைப் போல் தங்களுக்குள் பேசிக் கொள்ளுமா? நம்மைப் போல் சிரித்து விளையாடுமா?

இந்த மாதிரியெல்லாம் நமக்குத் தோன்றியிருக்கும். அம்மா அப்பாவிடம் கேட்டிருப்போம். அது போல பேசிச் சிரித்து விளையாடும் மீன்கள் கூட்டம் கடலுக்குள் இருக்கும் ஒரு பெரிய பாறையில் வசித்துவருகின்றன.

அங்கு மர்லின், க்ளாரா என இரு ஜோடி மீன்கள் இருக் கின்றன. அவை இரண்டும் அப்பா, அம்மா ஆகப் போகும் காலம் அது. க்ளாரா நிறைய முட்டைகளை இட்டிருந்தது. அவற்றை க்ளாராவும், மர்லினும் பாறை இடுக்கில் மறைத்துப் பாதுகாத்து வந்தன. ஒரு நாள் திடீரென அந்தப் பக்கம் ஒரு சீலா மீன் வந்துவிடுகிறது. முட்டைகளைப் பாதுகாப்பதற்காக மர்லின் முதலில் அதனுடன் சண்டை போடுகிறது. ஆனால் சீலா மீன் அதைத் தாக்க, அது மயங்கிக் கீழே விழுந்துவிடுகிறது.

கண் விழித்துப் பார்க்கும்போது அங்கு க்ளாராவும் இல்லை. முட்டைகளும் இல்லை. மர்லின் அழுதது. அப்போது ஒரே ஒரு முட்டை மட்டும் சிதறி ஒரு ஓரத்தில் கிடந்தது.

அது க்ளாரா ஆசையுடன் பெயரிட்ட நீமோ.

மர்லின், சந்தோஷத்துடன் நீமோவைச் செல்லம் கொஞ்சி வளர்க்கிறது. அதே சமயத்தில் அதைத் தனியாக எங்கும் விளையாட அனுப்பாது. நீமோவுக்கு இந்த அப்பா ஏன் இப்படி இருக்கார்? விளையாட எங்கும் அனுப்ப மாட்டேங்கறார் என வருத்தம். ஆனாலும் விளையாடக் கூட்டிப் போகச் சொல்லி அடம் பிடிக்கிறது.

ஒரு நாள் மர்லினும் தன் மகன் நீமோவை வெளியே அழைத்துச் செல்கிறது. வெளியே விதவிதமான கலர் கலரான மீன்கள். மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் எனப் பல நிறங்கள்.

எல்லாம் அங்கும் இங்கும் குதித்து விளையாடுகின்றன. நீமோவுக்குச் சந்தோஷம் என்றால் சந்தோஷம். அப்பாவின் கையை விட்டுத் துள்ளிக் குதிக்கிறது.

தன் புதிய நண்பர்களுடன் ஓடி, பாறை முடியும் இடத்திற்கே வந்துவிடுகிறது.

அங்கிருந்தபடி மீன் குஞ்சு கள் தூரத்தில் தெரியும் ஒரு படகைப் பார்க்கின்றன. அதற்கு முன்பு குஞ்சுகள் படகைப் பார்த்ததில்லை. அதனால் அதைப் போய் பார்க்கலாம் என நினைக்கின்றன. ஆனாலும் பயத்துடன் அவை நிற்க, நீமோ மட்டும் படகைப் பார்க்கச் செல்கிறது.

மனிதர்கள் விரித்த வலைக்குள் நீமோ சிக்கிக் கொள்கிறது. மர்லின் பின்னாடியே வந்தும் காப்பாற்ற முடியாமல் போகிறது.

நீமோவைப் பிடித்து வந்து ஒரு மீன் தொட்டிக்குள் போட்டுவிடுகிறார்கள். நீமோ அப்பாவை நினைத்து அழுகிறது. அந்தத் தொட்டியில் உள்ள மற்ற மீன்கள் அதற்கு ஆறுதல் சொல்கின்றன.

நீமோவை அவன் அப்பாவிடம் சேர்க்க அந்த மீன்கள் திட்டம் போடுகின்றன. ஒரு பக்கம் மர்லினும் நீமோவைத் தேடி அலைகிறது.

கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் நீமோ மீன் குஞ்சு எப்படித் தப்பித்தது? அப்பா மர்லினும் மகன் நீமோவும் சேர்ந்தார்களா?

Finding Nemo படத்தை பாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x