Last Updated : 28 Sep, 2016 11:24 AM

 

Published : 28 Sep 2016 11:24 AM
Last Updated : 28 Sep 2016 11:24 AM

குழந்தைளுக்குக் குன்றாத தமிழ் அமுதம்

குழந்தைகளுக்காகத் தேசிய அளவில் எழுதியவர்களைப் போன வாரம் பார்த்தோம் அல்லவா? இந்த வாரம் தமிழக அளவிலான குழந்தைப் படைப்பாளிகளைப் பற்றிப் பார்ப்போமா?

# தமிழில் முதன்முதலில் குழந்தைகளுக்காகப் பாடல்களை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 1901-ம் ஆண்டிலேயே அவர் பாடல்களை எழுத ஆரம்பித்துவிட்டாலும், அவருடைய முதல் தொகுப்பான ‘இளந்தென்றல்' 1941-ம் ஆண்டில் வெளியானது. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு' இன்றளவும் பிரபலமான பாடல்.

# பாரதியாரின் ‘பாப்பா பாட்டு' 1915-ல் எழுதப்பட்டது. அதில் வரும் ‘ஓடி விளையாடு பாப்பா' என்று தொடங்கும் வரிகள் மிகவும் பிரபலம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அதேநேரம், 1918-ல் வெளியான ‘பால விநோதினி' என்ற குழந்தைகள் இதழில் பாரதியார் எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

# பண்ருட்டி சி. கோவிந்தசாமி ராஜா ‘சிறுவர்ளுக்கான கதைகள்' என்ற நூலை 1889-ம் ஆண்டிலேயே எழுதியிருக்கிறார். என்றாலும் அ. மாதவையாவின் ‘பால விநோதக் கதைகள்', வை. கோவிந்தனின் ‘தமிழ்நாட்டுப் பழங்கதைகள்' போன்றவைதான் நாடு விடுதலை பெறுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய குழந்தைக் கதை முயற்சிகள்.

# தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் அறிவியலை எழுதியவர் பெ.நா. அப்புசாமி. கலைமகள் இதழின் குழந்தைகள் பகுதியில் ‘விஞ்ஞானி' என்ற பெயரில் அவர் தொடர்ந்து எழுதினார். அறிவியல் தகவல்களைக் கதை போலக் கூறிய அவருடைய பாணி, அதற்குப் பிறகு மிகவும் பிரபலம் அடைந்தது.

# ‘சக்தி காரியாலயம்' என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவந்த வை. கோவிந்தன், ‘சக்தி' என்ற இதழை நடத்திவந்தார். அத்துடன் தமிழ்வாணனை ஆசிரியராகக்கொண்டு ‘அணில்' என்ற குழந்தைகளுக்கான வார இதழை 1947-ம் ஆண்டில் தொடங்கினார். அது மிகப் பெரிய வெற்றியைப் பெறவே, தமிழில் குழந்தைகளுக்கான இதழ்கள் பிரபலமடைய ஆரம்பித்தன.

# பெரியவர்களுக்கான இதழான கல்கி, 1945-ல் ‘பாப்பா மலர்' என்ற வண்ணத் தொகுப்பு இதழை வெளியிட்டுக் குழந்தை இலக்கியத்தைச் சிறப்பித்தது. இந்த இதழில் ராஜாஜி, டி.கே.சி., கல்கி, சாவி உள்ளிட்டோர் எழுதியிருந்தனர்.

# ‘குழந்தைக் கவிஞர்' அழ. வள்ளியப்பா எழுதிய ‘தோசையம்மா தோசை' தொடங்கிப் பல பாடல்கள் இன்றளவும் பரவலாகப் பாடப்படுவது மட்டுமில்லாமல், பாடப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளன. ‘கோகுலம்' இதழில் அவர் எழுதிய ‘நீலா மாலா' என்ற தொடர்கதை பின்னால் தொலைக்காட்சித் தொடரானது. 14.04.1950 தமிழ் வருடப் பிறப்பன்று குழந்தை எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் இவர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவர் ‘சக்தி' வை. கோவிந்தன்.

# குழந்தைகளுக்காக எழுதிய நாவல்கள் திரைப்படமாகவும் மாறியுள்ளன. பூவண்ணன் எழுதிய ‘ஆலம்விழுது', ‘காவேரியின் அன்பு' ஆகிய இரண்டும் ‘நம்ம குழந்தைகள்', ‘அன்பின் அலைகள்' என்ற பெயரில் திரைப்படமாயின. இந்தத் திரைப்படங்களுக்காகத் தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருதும் அவருக்குக் கிடைத்தது.

# ‘கோகுலம்', ‘பூந்தளிர்' எனக் குழந்தைகள் இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமான இரண்டு இதழ்களுக்கு முதல் ஆசிரியராக இருந்தவர் வாண்டுமாமா. அறிவியல், பொது அறிவு, வரலாற்றுப் புத்தகங்கள், சித்திரக்கதைகள் எனக் குழந்தைகள் விரும்பும் அனைத்து வகை நூல்களையும் நூற்றுக்கணக்கில் எழுதிப் புகழ்பெற்றவர் இவர்.

# தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் பெரியசாமித் தூரனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு ‘குழந்தைகள் கலைக்களஞ்சிய'த்தைப் பத்துத் தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளது. இது தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை என்றபோதும், இணையத்தில் பழைய கலைக்களஞ்சியம் இலவசமாகக் கிடைக்கிறது:

>http://www.tamilvu.org/library/libindex.htm

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x