Published : 17 Aug 2016 12:32 PM
Last Updated : 17 Aug 2016 12:32 PM

நாட்டுக்கொரு பாட்டு - 20: புரட்சி தேசத்தின் போர்ப் பரணி!

அமெரிக்காவுக்குத் தெற்கே, ஜமைக்காவுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு கரீபியன் தீவு கியூபா. கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பெயர் பெற்ற நாடு. இதன் தலைநகரம் ஹவானா. இந்தத் தீவில் ‘அமர்இண்டியா' எனும் பூர்வ குடிகள் வாழ்ந்து வந்தனர். இந்த நாட்டை 15-ம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் கண்டுபிடித்தனர். உடனே அந்த நாட்டை அவர்கள் அடிமைப்படுத்தினர். 1898-ம் ஆண்டு போர் வரை, அது ஸ்பானிய காலனி நாடாகவே இருந்தது.

போர்

ஸ்பெயினுக்கு எதிராக ‘பத்து வருடப் போர்' 1860-களில் இங்கே நடந்தது. இதில் பெரூச்சோ என்ற கவிஞர் / பாடகர் தீவிரமாகப் பங்காற்றினார். இவரது இயற்பெயர் பெட்ரோ ஃபிலிப் ஃபிகூரடோ. ஆனால், பெரூச்சோ என்றே அழைக்கப்படுகிறார். இவரால், ‘லா பாயாமிசா' என்று அழைக்கப்படும் கியூபாவின் தேசிய பாடல், 1867-ம் ஆண்டில் இசையமைக்கப்பட்டது.

குதிரை மீது...

போர் சமயத்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமோ நகரிலிருந்த ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் சரண் அடைந்தனர். வெற்றிக் களிப்பில் ஆடிப் பாடிய மக்கள், தாங்கள் இசைத்த ‘ஹம்மிங்' இசைக்குப் பாடல் தரும்படி, ஃபிகூரடோவிடம் கேட்டார்கள். அப்பொழுதே குதிரையின் மீது உட்கார்ந்தபடி இப்பாடலை அவர் எழுதினார்.

வீரம்

இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து பெரூச்சோ ஸ்பானியர்களால் சிறைபிடிக்கப்பட்டார். 1870-ம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுத் தள்ளும்படி ஆணை பிறப்பிக்கப்பட்ட சில நொடிகளுக்கு முன்புகூட, அவர் இப்பாடலை உரக்கப் பாடினார்.

அங்கீகாரம்

‘பெரூச்சோ'வின் பாடல் தேசியகீதமாக 1902-ல் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1959 புரட்சிக்குப் பிறகும், இப்பாடல் தேசிய கீதமாக தக்க வைக்கப்பட்டது. இப்பாடலின் தொடக்கத்தில் வரும் அறிமுக இசையை, கியூபாவின் இசையமைப்பாளர்

அன்டோனியோ ஃபெர்ரர் வடிவமைத்தார்.

திருத்தம்

தொடக்கத்தில் ஆறு பத்திகள் கொண்டிருந்தது இப்பாடல். இறுதி நான்கு பத்திகளில், ஸ்பெயின் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது, முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப் படுகிறது.

பெரூச்சோ

கியூபாவின் தேசிய கீதம் ஏறத்தாழ இப்படி ஒலிக்கும்:

‘அல் கம்பாட்டே கோர்ர்ட் பயாமிசஸ்

கோ லா பேட்ரியா ஓஸ் காண்டம்ப்லா ஓர்குலோசா

நோ தெமோயிஸ் ஊனா மூவர்டே க்ளோரியோசா

கோ மோரிர் போர் லா பேட்ரியா எஸ் விவிர்

என் கேடனாஸ் விவிர் எஸ் விவிர்

என் அஃப்ரென்ட்டா ஒப்ரோபியா சுமிடோஸ்

டெல் க்லெரின் எஸ்குசட் எல் சோனிடோ

ஏ லாஸ் அர்மாஸ் வேலியன்டஸ் கார்ரட்'!

பாடலின் உத்தேச பொருள்:

பயோமா மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்.

தாய்நாடு உங்களைப் பெருமையுடன் பார்க்கிறது.

பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.

ஏனெனில் தாய்நாட்டுக்காக சாவதுதான் (உண்மையில்) வாழ்வது.

விலங்குகளால் கட்டுண்டு வாழ்வது

அவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது;

சங்கு ஒலிப்பதைக் கேளுங்கள்

துணிவுள்ளவர்களே..! போருக்கு ஓடி வாருங்கள்!

(தேசிய கீதம் ஒலிக்கும்)







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x