Last Updated : 22 Mar, 2017 09:25 AM

 

Published : 22 Mar 2017 09:25 AM
Last Updated : 22 Mar 2017 09:25 AM

வாங்க, நிலவுக்குப் போகலாம்: கொடியைத் தள்ளிவிட்டது யார்?

ஆம்ஸ்ட்ராங் பறக்கவிட்ட கொடி ஏன் கீழே கிடக்கிறது என உங்களுக்குத் தோன்றியது நியாயமான சந்தேகம்தான்.

நிலவிலே காற்று கிடையாதுன்னு உங்களுக்கு இப்போ தெரியும். அதனாலே கொடி அங்கே பறக்காது. ஆனா, ஆம்ஸ்ட்ராங் நிலவிலே கொடிக் கம்பத்தை நட்டது உண்மைதான். எல்லாத்தையும் செஞ்சிட்டு அவர் மறுபடியும் பூமிக்கு வருவதற்காகக் கிளம்பினார் இல்லையா? அப்போ அவர் வந்த விண்கலம் எழுப்பிய அதிர்வில் கொடிக் கம்பம் கீழே விழுந்துடுச்சு.

நிலவிலே சில பூட்ஸ் கால் தடங்களையும் நீங்க பார்க்கிறீங்க. அது யாருடையது? நமக்கு முன்னே வேற்றுக் கிரகவாசிகள் இங்கே வந்திருக்காங்களோன்னு ஒரு சின்ன பயம் எட்டி பாக்குது இல்லையா? கவலைப்படாதீங்க. அது ஆம்ஸ்ட்ராங்கோட காலடிதான். ஏன், நம்ப முடியலையா? அதெப்படி இவ்வளவு வருஷம் அப்படியே அந்தக் காலடிகள் இருக்கும்? இதுதானே உங்க கேள்வி.

நீங்களே யோசியுங்கள். நிலவிலே காற்றும் கிடையாது. மழையும் கிடையாது. அப்புறம் எப்படி அந்தக் காலடித் தடம் மாறும்? இன்னும் 20 வருடங்கள் கழித்து யாராவது வந்தால் உங்கள் ஷூக்களின் தடயத்தைக்கூட அவங்களாலே நிலாவிலே பார்க்க முடியும். என்ன குஷிதானே?

நிலவுக்குப் போனவங்க இதுவரை 382 கிலோ எடையுள்ள பாறைகளையும், மண்ணையும் எடுத்து வந்திருக்காங்க. எல்லாமே அமெரிக்க விண்வெளிக் கழகமான நாஸாவிலே இருக்கு.

அங்கேயே நின்னுகிட்டிருந்தா எப்படி? பூமிக்குத் திரும்ப வேண்டாமா? “அரை நாளாவது இங்கேயே இருக்கேன்னு” அப்படின்னு தில்லா சொல்றீங்களா? ஒரு சின்ன எச்சரிக்கை. நீங்க சுமந்துகிட்டிருக்கிற ஆக்ஸிஜன் சிலிண்டரில் பாதி இப்போது காலியாயிடுச்சு.

சரிசரி, அதுக்காக வேகவேகமாக விண்கலத்துக்குத் திரும்பணும்னு அவசரப்படாதீங்க. அதெல்லாம் ‘நடக்கிற’ காரியம் இல்லை. மெதுமெதுவாகப் பழைய மாதிரி கங்காருபோல ஸ்லோமோஷனில் குதித்துத்தான் விண்கலத்துக்குப் போக முடியும்.

விண்கலத்துக்குள்ளே ஏறியாச்சா? தாழ்ப்பாளை அழுத்தி மூடியாச்சா? விண்கலத்தில் இருக்கிற கணினிகள் எல்லாம் சரியாக வேலை செய்யணும்னு பிரார்த்தனை செஞ்சுக்கோங்க. இதோ நீங்க பூமிக்குக் கிளம்பிட்டீங்க.

பூமியிலிருந்து நிலவுக்கு எவ்வளவு தூரம் வந்தீங்களோ அவ்வளவு தூரம் திரும்பப் போகணும். இதைப் படிக்கும்போது, உங்களுக்குச் சிரிப்பு வரலாம். இதைப்போய் தனியா சொல்லணுமான்னு! ஆனால், ஒரு தகவலை இங்கே தெரிஞ்சுக்கணும். ஒவ்வொரு வருஷமும் பூமியிலிருந்து நிலவு கொஞ்சம் தள்ளிப் போகுதாம். கவலைப்படாதீங்க, அதிகத் தூரம் இல்லை. வருஷத்துக்கு 3.8 சென்டி மீட்டர். அவ்வளவுதான்.

உங்களுக்குத் தெரியுமா, ஒரு விண்வெளிப் பயணத்தின்போது, பூமியிலிருந்து நிலவுக்கு வெறும் 8 மணி நேரம் 25 நிமிடத்திலேயே போய்ட்டாங்க. இது எப்படின்னு மூக்கு மேலே விரலை வச்சுக்கறீங்களா? அமெரிக்க விண்வெளிக் கழகத்தில் “நியூ ஹோரைசான்ஸ்” என்ற பெயரில் ஒரு விண்கலத்தை அனுப்பினாங்க. ஆனால், இது புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்ட விண்கலம். வழியிலேயே நிலவைத் தாண்டிப் போச்சு.

நேரடியாக நிலவில் இறங்குவதற்கு அதற்கு முன்னால் பல இடங்களில் வேகத்தைக் குறைக்க வேண்டியிருக்கும். அந்தத் தேவை இல்லாததனாலே சும்மா விர்ர்..ன்னு அது போயிடுச்சு.

இதோ பூமியிலுள்ள கடல்களெல்லாம் கண்ணுக்குத் தெரியுது. வட துருவத்தின் பனிப் பகுதியை எல்லாம் பார்க்க முடியுது (அதுக்காகப் பனிக்கரடிகளை எல்லாம் அங்கிருந்தே பார்க்கலாமேன்னு ரொம்ப ஆசைப்படக் கூடாது).

நீங்க பெரியவங்களான பிறகு விண்வெளியிலே ஹோட்டல்களெல்லாம் வரலாம். வழியிலே அங்கே டிபன் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் பிறகு நிலவுக்குப் போகலாம்.

இப்போ வளிமண்டலத்தை அடைஞ்சுட்டீங்க. மேகங்கள் தெரியுது. அட, பூமிக்கு வந்துட்டீங்க.

பூமியிலே இறங்கியவுடனே என்ன செய்யப் போறீங்க என்பதைப் பார்க்க ஆர்வமா இருக்கு.

அட, எதுக்காகப் பூமியில் விழுந்து புரள்றீங்க? எதுக்காகக் கண்ணிலே கண்ணீர்? ஓ! புரியுது, பூமியின் அருமையை நீங்க இன்னும் தெளிவாத் தெரிஞ்சுகிட்டீங்க இல்லையா? வாங்க, இன்னும் மும்முரமாக நம் பூமியைப் பாதுகாக்கலாம். மற்றபடி அப்பப்போ நிலாவுக்கும் போயிட்டு வரலாம். சரியா?

(பயணம் நிறைவடைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x