Published : 06 Nov 2013 02:43 PM
Last Updated : 06 Nov 2013 02:43 PM
அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில்குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது. ‘வணக்கம் யானையண்ணே. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு’ என்றது. தன் காலடியில் நின்ற முயல்குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. ‘என் கால் நகம் அளவுகூட இல்லாத நீ எல்லாம் என்கிட்டே பேசுற அளவு வளர்ந்துட்டியா?’ என்று கடுமையாகக் கேட்டது. முயல் குட்டியின் முகம் வாடிப்போனது. ஏன் யானை அண்ணன் தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்தபடியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற கடலில் வாழும் திமிங்கலம் அக்காவிடம் கேட்கலாமே என்று கடற்கரைக்கு ஓடியது.
“திமிங்கலம் அக்கா…”
முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது திமிங்கலம். கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, “நீயா? என்னைக் கூப்பிட்டாயா?” என்றது.
ஆமாம் எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், “என் கண்ணைவிட சின்னதா இருக்கற உன்கிட்டே பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை” என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது திமிங்கலம்.
முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் திமிங்கலத்தை அழைத்தது. “நான் உருவத்துல சின்னதா இருந்தாலும் பலத்துல உங்களைவிட பெரியவன். வேணும்னா ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?” என்று கேட்டது.
திமிங்கலத்துக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.
நீளமான கயிறைக் கொண்டுவந்து திமிங்கலத்திடம் கொடுத்தது. “அக்கா, இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்வேன். நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, கயிறுடன் காட்டுக்குள் ஓடியது.
அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது. “இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்” என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.
“நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்” என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது.
திமிங்கலத்துக்கும் யானைக்கும் கேட்பதுபோல் சத்தமாக, “இழுக்கலாம்” என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன. இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன.
கொஞ்சம் விட்டால் திமிங்கலம் தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான். தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது. இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.
பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. திமிங்கலம் கடலில் இருந்த பவளப்பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது. முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் திமிங்கலமும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.
அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. திமிங்கலமும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பழகியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment