Published : 22 Jun 2016 12:31 PM
Last Updated : 22 Jun 2016 12:31 PM
வாண்டு: ஏய் பாண்டு, போன ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நம்ம பழைய ஃபிரெண்ட் ராமு உங்க வீட்டுக்கு வந்தான். நீ வீட்டுலையே இல்லை. எங்க போய்ட்ட?
பாண்டு: ஓ... அப்பவா, நான் பீச்சுக்குப் போய்ட்டேன்.
வாண்டு: பீச்சுக்குப் போய்ட்டியா. நான்கூட பீச்சுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு. இந்த வாரமாவது போகணும்.
பாண்டு: பாய்ஞ்சு வர அலையைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருந்துச்சு. ஆனா, சில பேரு கடல் அலைக்குள்ளே புகுந்து வெளியே வாராங்க. எப்படித்தான் நீந்துறாங்களோ தெரியலை?
வாண்டு: கரைக்குப் பக்கத்துல நீச்சல் அடிச்சு விளையாடுறதையே இவ்ளோ அதிசயமா சொல்ற, 9 வயசு பையன் தனியா படகுல ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குக் கடல்ல பயணம் செஞ்சத பார்த்தீன்னா என்ன பண்ணியிருப்பே.
பாண்டு: என்னது தனியாவா? அதுவும் கடல்லையா? நினைக்கிறப்பவே பயமா இருக்கேப்பா. அந்தப் பையன் யாரு?
வாண்டு: அந்தப் பையனோட பேரு ஜேம்ஸ் சாவாஜ். அமெரிக்காவுல கலிபோர்னியாவுல இருக்கான். சான்பிரான்ஸிஸ்கோ விரிகுடாவிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் அல்கேட்ரஸ்னு ஒரு குட்டித் தீவு இருக்கு. இந்தத் தீவுல ஒரு சிறைச்சாலையும் இருக்கு. இந்த இடைப்பட்ட தூரத்தை அந்தப் பையன் கடந்திருக்கான். கரையிலிருந்து அந்தத் தீவுக்குப் படகுல போய்ட்டு, திரும்பி வந்திருக்கான். இந்தத் தூரத்தை இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்துல கடந்திருக்கான்.
பாண்டு: கடலுக்குள்ளே யாரோட துணையும் இல்லாம எப்படிப்பா போனான். அலைகள் வந்து தாக்கியிருக்குமே?
வாண்டு: ஆமா பாண்டு. அரை மணி நேரம் உயரமான அலைகள் எழுந்து படகை இழுத்திருக்கு. அலைகள் அவனோட முகத்தில் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதிச்சிருக்கான். இதுக்கு முன்னால 10 வயசான லாஸ் பானோஸ்ன்னு ஒரு பையன் இப்படிக் கடலைக் கடந்திருக்கான். அந்தச் சாதனையை ஜேம்ஸ் இப்போ முறியடிச்சுட்டான்.
பாண்டு: சின்ன வயசுல இந்த மாதிரி சாதிக்க நிச்சயமா தைரியம் வேணும். அது ஜேம்ஸூக்கு நிறைய இருக்கு போல. அப்புறம், அன்விதா விஜய்ன்னு ஒரு குட்டிப் பொண்ணு சாதனை செய்தது பற்றி நீ கேள்விப்பட்டியாப்பா?
வாண்டு: இல்லையே பாண்டு. அந்தப் பொண்ணு என்ன சாதனை செஞ்சா? உனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுப்பா.
பாண்டு: சொல்றேன்...சொல்றேன். அமெரிக்காவுல ஐ-போன், ஐ-பேட் தயாரிக்குற ஆப்பிள் நிறுவனம் இருக்குல்ல, அந்த நிறுவனத்தோட கருத்தரங்கம் சான்பிரான்சிஸ்கோவுல நடந்துச்சு. ஐ-போன், ஐ-பேடுக்கு ஆப்ஸ் (செயலி) வடிவமைச்சு கொடுத்த வடிவமைப்பாளர்கள் 350 பேர் கலந்துகிட்டாங்க. இதுல 120 பேரு 18 வயசுக்குள்ள இருந்த மாணவர்கள். இவர்களில் அன்விதா விஜயும் கலந்துகிட்டா. அவளுக்கு ஒன்பது வயசுதான்பா. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ரொம்ப சின்னப் பொண்ணு அன்விதாதான். இதைப் பார்த்து கருத்தரங்கத்துல கலந்துகிட்டவங்க ஆச்சரியப்பட்டிருக்காங்க.
வாண்டு: அதெல்லாம் சரி, இந்தக் கருத்தரங்குல கலந்துக்கிற அளவுக்கு அன்விதா என்ன பண்ணான்னு சொல்லுப்பா.
பாண்டு: அதான் சொன்னேனேப்பா. அன்விதா ஆப்ஸ் வடிவமைப்பாளர்னு. ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆப்ஸ் செஞ்சு கொடுத்தவங்கள்ல ரொம்ப சின்னப் பொண்ணு அன்விதாதான். குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்குற மாதிரி நிறைய ஆப்ஸ் வடிவமைச்சு தந்திருக்கா. ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமிருந்து நிறைய ஆப்ஸ் வடிவமைச்சு கொடுக்க அனுமதியும், உதவித்தொகையையும் கொடுப்பாங்க. அதுல ரொம்பக் குட்டிப் பொண்ணு அன்விதாதான். இந்த அன்விதா ஆஸ்திரேலியாவுல இருக்குறாப்பா. இவ இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவ.
வாண்டு: ஓ... சின்ன வயசுலேயே ஆப்ஸ் கண்டுபிடிக்குறான்னா எவ்ளோ விஷயத்தைத் தெரிஞ்சு வைச்சிருப்பா. அன்விதா ரொம்ப சமத்துதான்போல.
பாண்டு: நிச்சயமா ரொம்ப சமத்துதான். சரிப்பா, டீயூசனுக்குப் போகணும். நேரம் ஆயிடுச்சு. அப்போ நான் வரட்டுமா?
வாண்டு: நானும் என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போகணும். டாட்டா, பை…பை…!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT