Published : 13 Nov 2013 12:00 AM
Last Updated : 13 Nov 2013 12:00 AM

வானவில்லின் வடிவம் என்ன?

நீங்கள் வானவில்லைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? எப்போதெல்லாம் வானவில் தோன்றும்? மழை வந்தபிறகு வானவில் தோன்றும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை. பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் ஆகியவற்றுக்கும் வானவில் தோன்றுவதில் பங்கு இருக்கிறது. நம் கண்களுக்குத் தெரிவதுபோல உண்மையில் வானவில் அரைவட்டமாக இருக்காது. முழு வட்ட வடிவில்தான் வானவில் தோன்றும். நம் கண்களுக்கு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டம் மட்டும் தெரியும். அழகான வண்ணங்களுடன் இருக்கும் வானவில்லைக் கையால் தொட்டுப்பார்க்க ஆசையாக இருக்கிறதா? உண்மையில் நம் கையால் தொடமுடிகிற அளவுக்கு வானவில், ஒரு பொருள் அல்ல. கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே.

வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும். அதனால்தான் சில நேரங்களில் உங்கள் கண்களுக்குத் தெரியும் வானவில், அடுத்த ஊரில் இருக்கும் உங்கள் நண்பனின் கண்களுக்குத் தெரிவதில்லை.

வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet, i - indigo, b - blue, g - green, y- yellow, o - orange, r- red.

வானவில்லில் இரண்டு வகை உண்டு. முதன்மை வானவில்லில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாம்நிலை வானவில்லில் (அதாவது நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி இரண்டுமுறை சிதறடிக்கப்படும்போது தோன்றுவது) இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழாக இருக்கும். அடுத்தமுறை வானவில் பார்க்கும்போது அது என்ன வானவில் என்று சரியாகச் சொல்லிவிடுவீர்கள்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x