Last Updated : 07 Jun, 2017 10:20 AM

 

Published : 07 Jun 2017 10:20 AM
Last Updated : 07 Jun 2017 10:20 AM

அம்மாவின் சேட்டைகள் 04: வண்டுகளை மொய்க்கும் அம்மா

இப்ப நாங்க இருக்குற வீட்ல பல்லியும் கரப்பான்பூச்சியும் இருந்துக்கிட்டே இருக்கு. அது மட்டுமா கொசு வேற.கொசுவலை, மருந்து அடிக்கறதுன்னு அடிக்கடி பூச்சி ஒழிப்பு வேலைகளும் நடக்கும். அப்பல்லாம் அம்மாவுக்குச் சின்னபுள்ளைல பூச்சி புடிச்ச கதைகள் நினைவுக்கு வந்துடும். சில கதைகள் போரடிக்கும். சில கதைகள் கேக்கவே ஒரு மாதிரியிருக்கும். சில கதைகள் அம்மா பொய் சொல்றாங்களோன்னு தோணும். ஏன்னா இப்ப அதெல்லாம் இல்லவே இல்ல. ஆனா, அம்மா எப்டியாவது தேடிக் காமிப்பாங்க. காமிக்கும்போது இதை லட்சமா நெனச்சிக்கன்னு சொல்லுவாங்க. நான் நம்பலைன்னா பாட்டிகிட்ட, பெரியம்மாகிட்ட போயி கேட்டுப் பாருன்னு சொல்வாங்க.

கீ வண்டு, பட்டுப் பூச்சி அல்லது வெல்வெட்டுப் பூச்சி, மினுக்கட்டாம் பூச்சி அல்லது லைட்டுப் பூச்சி, பொன்வண்டு, வெட்டுக்கிளி, பாப்பாத்தி அல்லது பட்டாம்பூச்சி, மண் புழு, குழி நரி, ஓணான், மரவட்டை அல்லது ரயில் பூச்சி, பச்சோந்தி... எல்லாத்தையும் எனக்குச் சொல்லத் தெரியலை. அம்மாவுக்குமே ஒரே நேரத்துல சொல்லத் தெரியாது. எல்லாத்தையும் புடிப்பாங்களாம், வளர்ப்பாங்களாம், ஜாலியா விளையாடுவாங்களாம், அப்புறம் விட்டுடுவாங்களாம். இல்லைன்னா அதுங்க செத்துப் போயிடுமாம்.

காடே ங்கொய்யுனு கீ வண்டு சத்தத்துல மூழ்கிக் கிடக்கும். மரத்துல ஏறி அதைப் புடிச்சிட்டு வந்து தீப்பெட்டியில போட்டு ரேடியோ பெட்டி செய்வாங்களாம். ராணிப் பொன்வண்டு, ராஜா பொன்வண்டு, கழுதப் பொன்வண்டுகளைப் புடிச்சிட்டு வந்து டப்பாவுல வளர்த்து அதுகளுக்குப் புடிச்ச கொண்ண இலையைச் சாப்பிடக் குடுத்து, முட்டையிட வைப்பாங்களாம். மண்புழுவைப் புடிச்சி டப்பா வுல சேத்து மண்ணுக்குள்ள புதைப்பாங்களாம். அம்மாவோட பூச்சி விளையாட்டை அவுங்களே சொல்றதுன்னா இப்படித்தான் ஆரம்பிக்கும்.

“ரெண்டாவது நாள் அடை மழையோட பட்டுப்பூச்சி காட்டுக்குள்ள ஊரத் தொடங்கும். செக்கச் செவேல்னு இருக்கும். மெத்து மெத்துனு குண்டு குண்டுனு இருக்கும். விரல் நுனியால தடவுனா வெல்வெட்டு மாதிரியே இருக்கும். சின்னப் பூ ஊர்ந்து போறதுபோல் இருக்கும். ஒண்ணு பாத்துட்டம்னா போதும், அடுத்து அடுத்துனு 100, 200…1000ம்னு இருக்கும். மழை இரவுல யார் கொண்டுவந்து உட்றாங்கன்னே தெரியாது. சில நேரம் அது மேல ஏறி நடப்போம். அதைப் புடிச்சி சட்டைப் பைக்குள்ளப் போட்டுக்குவோம். தலையில, உடம்புல ஊறும்படி ஒட்டவச்சுக்குவோம். அடேய் மகனே அந்தப் பட்டுப்பூச்சிய புடிச்சி விளையாட உனக்குக் குடுத்துவைக்கல” - கதை இப்படி நீளும். அம்மா முடிக்கும்போது பார்த்தா வேடிக்கையா இருக்கும். அம்மா எப்பவும் பட்டுப்பூச்சியோட விளையா்ண்டுகிட்டே இருக்குறது போல இருக்கும்.

மினுக்கட்டாம்பூச்சி வீட்டுக்கிட்டயே பறந்து வரும். அது ஒவ்வொண்ணாவும் வருமாம். சில நேரத்துல ஊரே மினுக்கட்டாம்பூச்சியாகப் பறக்குமாம். பூச்சியைக் கையில வச்சி, கையை மூடுனா கை இடுக்குல இருந்து சிகப்பா ஒளி வெளிவரும். காலியான இங்க் பாட்டில்ல போட்டு வைப்பாங்களாம். அது லைட்ட அணைச்சி அணைச்சி எரிய விடுமாம். அப்ப அம்மா கண்ணை மூடி மூடித் தொறப்பாங்களாம். மினுக்கட்டாம்பூச்சி புடிக்கிறது கஷ்டமில்லையாம்.

குட்டைத் தண்ணியை ஒட்டியிருக்குற மரத்துல லைட் பூ பூத்துக் குலுங்குன மாதிரி இருக்குமாம். லட்சம் பூச்சிகள் ஒரு மரத்துல லைட் அடிச்சிகிட்டே இருக்குறதுதான் ரொம்ப அழகாம். அதைப் பார்க்கப் புள்ளைங்ககூட செட்டா சேர்ந்து போவாங்க. போகும்போது கையில கட்டை, அரிக்கன் லைட்டெல்லாம் எடுத்துக்குவாங்களாம். மினுக்கட்டாம்பூச்சி எல்லா சீசன்லயும் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு சொல்லிக்குவாங்களாம்.

மழை வர்ற மாதிரி இருந்தா சாயங்காலத்துல பிள்ளைகளெல்லாம் மகிழ்ச்சியா விளையாடுவாங்களாம். அப்ப திடீர்னு ஈசல் மண்ணுலருந்து கிளம்புமாம்.வரிசையா ஒவ்வொண்ணா பறந்து வெளிய வரும். அதைப் புடிச்சி விளையாடுவாங்க. ஈசல் பறக்குறது தெரிஞ்சி சட்டியை எடுத்துட்டு வந்து கவுத்து அதைப் புடிச்சிட்டுப் போவாங்களாம் பெரியவுங்க.வெயில் காலத்துப் பூச்சிகளும் உண்டு. குழி நரிப் பூச்சியைப் பாட்டுப் பாடித்தான் குழிக்குள்ள இருந்து எடுப்பாங்களாம்.

அம்மா சொல்ற மாதிரி எந்தக் காலத்துல எந்தப் பூச்சி வரும்னு சரியா எனக்கு சொல்லத் தெரியலை. மழை முடிஞ்சி பூ பூக்குற காலத்துல தட்டானும் பாப்பாத்தியும் பறக்கத் தொடங்குமாம். வெள்ளை, மஞ்சள், ஊதா, சிவப்பு கலந்த கலரு, புள்ளி வச்சது, கோடுபோட்டது, வட்டம் போட்டது, பெருசு, சின்னது, பொடிசு அப்படின்னு விதவிதமா இருக்குமாம். தும்பைச் செடியில் உக்காந்து தேனை உறிஞ்சிறப்ப குட்டிப்பூ மேல நகருவது நல்லா இருக்குமாம்.

தும்பைச் செடி ரெண்ட புடுங்கிக்கிட்டு பாப்பாத்தி பின்னாடி ஓடுறது, அதைப் புடிச்சி றெக்கையப் பிச்சி... அம்மா தான் செஞ்ச தவறுகளையெல்லாம் நினைக்கிற மாதிரி முகத்தைச் சுருக்கிக்குவாங்க. நாங்க புடிச்சி விளையாண்டதுலதான் எல்லாம் செத்துப் போச்சோங்கற மாதிரி இருக்கும்.

என்னால் நம்ப முடியாததாகவே இருந்தன லட்சக்கணக்கான பூச்சிகளும் அம்மாவின் விளையாட்டும். “அதுக்கு மழை வேணும், வெயில் வேணும், குளம் குட்டைகள் நிரம்பணும், காடு கழனி பூக்கணும். இப்படி எல்லாம் வேணும். ஒரு நாள் கையில் டப்பாவைக் கொண்டுவந்து என் முன்னாடி உட்காந்தாங்க. இங்க வா, நான் இப்ப இதைத் திறப்பேன்; நீ அதை எண்ணிச் சொல்லணும்னு சொன்னாங்க. எண்ணத் தொடங்கிய நான் லட்சக்கணக்கான வண்டுகள் என்றேன். தட்டைப் பயிர் டப்பாவுக்குள்ள இப்படியென்றால் எங்கள் ஊர் காட்டை நினைச்சுப் பார்”னு அம்மா சொன்னாங்க.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x