Last Updated : 21 Dec, 2016 10:46 AM

 

Published : 21 Dec 2016 10:46 AM
Last Updated : 21 Dec 2016 10:46 AM

தினுசு தினுசா விளையாட்டு: தொட்டால் தொடரும்

குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. சில விளையாட்டுகள் ஓடியாடுவது போல இருக்கும். இன்னும் சில விளையாட்டுகள் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடுவதாக இருக்கும். மேலும், சில விளையாட்டுகளில் இவை இரண்டும் கலந்தே இருக்கும். விளையாடும் குழந்தைகளின் ஆரவாரமான குரல்களால் அந்த இடமே களை கட்டிவிடும். எங்காவது குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டுவிட்டாலே போதும்; எல்லாக் குழந்தைகளும் அங்கே சங்கமமாகிவிடுவார்கள். அந்தக் குரல்களுக்கு அப்படியொரு ஈர்ப்பு உண்டு.

இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு, ‘தொட்டால் தொடரும்.’

இந்த விளையாட்டில் ஓடியாடுவதும் உண்டு. உட்கார்ந்து விளையாடுவதும் உண்டு. இரண்டும் கலந்த இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம்.

விளையாட்டைத் தொடங்கும் முன், முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

‘சாட் பூ திரி..!’, ‘உத்தி பிரித்தல்’ அல்லது ‘பூவா… தலையா…!’ ஆகிய இந்த மூன்று வழிகளில், ஏதாவது ஒன்றின் மூலமாக முதல் போட்டியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். (‘அதுதான்… எங்களுக்குத் தெரியுமே’ன்னு நீங்கள் சொல்வது கேட்கிறது.)

முதல் போட்டியாளரைத் தேர்வு செய்த பிறகு, விளையாட்டைத் தொடங்கலாம். என்ன எல்லாரும் தயார்தானே..!

திறந்த வெளி மைதானமெங்கும் விளையாடப் போகும் சிறுவர்கள் நின்றிருப்பார்கள்.

“ஒன்… டூ… த்ரீ… ரெடி..!” என்றதும், முதல் போட்டியாளர் மைதானத்தில் இருக்கும் சிறுவர்களைத் துரத்திக்கொண்டு வேகமாக ஓட வேண்டும்.

அவர் தொட்டுவிடாமல் இருக்க, சிறுவர்கள் அங்குமிங்குமாய் ஓடுவார்கள். யாராவது ஒருவரைத் தொடுவது போல் பக்கத்தில் அவர் வரும்போது, அவருக்கு நெருக்கமாக இன்னொருவர் பின்பக்கமாய் வர, அவரைத் தொட்டுவிடும் ஆசையில், முதலில் துரத்தியவரையும் தவற விடுவார். இப்படியாக, போட்டியாளரின் கைக்கு அகப்படாமல் ‘போக்கு’ காட்டி ஓடுவார்கள்.

யாரையாவது மிக நெருக்கமாய்த் தொடுவதற்குப் போனால், அவர்கள் சட்டெனத் தரையில் உட்கார்ந்துகொண்டு, “பாஸ்” என்பார்கள். அதன் பிறகு அவர்களைத் தொடக் கூடாது. தொட்டாலும் அவர்கள் ‘அவுட்’ கிடையாது.

அடுத்து, வேறு யாரையாவதுதான் போட்டியாளர் துரத்திச் செல்ல வேண்டும். பாதியில் உட்கார்ந்தவர் மீண்டும் விளையாட வேண்டுமானால், விளையாடிக்கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் உட்கார்ந்திருப்பவரை வந்து தொட வேண்டும். அப்படித் தொட்டுவிட்டால், மீண்டும் அவர் விளையாட்டைத் தொடரலாம்.

போட்டியாளர் யாரையாவது தொடுவதற்கு முயற்சி செய்துகொண்டே, ‘பாஸ்’ சொல்லிவிட்டு உட்கார்ந்திருப்பவர் மீதும் ஒரு கண் வைத்திருப்பார். யாராவது அவரைத் தொட்டு, அவர் மீண்டும் விளையாட வாய்ப்பு தருவதற்கு முயற்சிப்பார்கள். அப்படி வருபவரைத் தொட்டுவிடப் பார்ப்பார்.

போட்டியாளர் யாரையாவது தொட்டுவிட்டால், ‘அவுட்’டான அவர் போட்டியாளராய் மாறி, மற்றவர்களைத் துரத்திப் பிடிக்க வேண்டும். முடிந்தவரை ஓடிவிட்டு, முடியாதபோது, ‘பாஸ்’ சொல்லிவிட்டு, வசதியாய் உட்கார்ந்துகொண்டு, விளையாட்டை ரசித்துப் பார்க்கும் வாய்ப்பும் இந்த விளையாட்டில் உண்டு.

என்ன, நீங்கள் உற்சாகமாக விளையாடப் போகிறீர்களா, இல்லை உட்கார்ந்து ரசிக்கப் போகிறீர்களா?

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x