Last Updated : 08 Jun, 2016 12:50 PM

 

Published : 08 Jun 2016 12:50 PM
Last Updated : 08 Jun 2016 12:50 PM

வாண்டு பாண்டு : மலை ஏறினால்தான் பள்ளிக்கூடம்

வாண்டு: ஹாய் பாண்டு, குட்மார்னிங்.

பாண்டு: குட்மார்னிங் வாண்டு.

வாண்டு: என்னபா, இனிமே நீ ஸ்கூலுக்கு என்கூட வர மாட்டேனு எங்கம்மா சொன்னாங்க. ஏன், என்னாச்சு?

பாண்டு: நடந்து வர கஷ்டமா இருக்குபா. சைக்கிள் வாங்கிக்கொடுங்கன்னு வீட்டுல சொன்னேன். நீ சின்னப் பையன், இப்போ வேணாம்னு அப்பா சொல்லிட்டாரு.

அதுக்குப் பதிலா அவரே பைக்குல ஸ்கூல்ல வந்து விடுறதா சொன்னாரு. அதை எங்கம்மா உங்கம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. அதை உன்கிட்ட சொல்லிட்டாங்களா?

வாண்டு: ஒரு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஸ்கூலுக்குப் போறது கஷ்டமா இருக்கா உனக்கு? இதுக்கே நீ இப்படிச் சொல்றீயே. சீனாவுல பள்ளிக்கூடம் போறதுக்காக ஸ்கூல் பசங்க மலையில் ஏறி போறாங்க தெரியுமா? அது எவ்ளோ கஷ்டமா இருக்கும்?

பாண்டு: மலையில ஏறிப்போறாங்களா? ஏன்… தரையில நடந்துபோக வேண்டியதுதானே?

வாண்டு: அவுங்க என்ன போக மாட்டேன்னா சொல்றாங்க? வழி இருந்தாதானே போக முடியும்.

பாண்டு: ஐயோ! அப்போ வழியே இல்லையா? அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்.

வாண்டு: சொல்றேன் பாண்டு. சீனாவுல சிச்சுவான்னு ஒரு மாநிலத்துல அட்டுலர்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே 72 குடும்பங்கள் வசிக்குதாம். மலைகளுக்கு மத்தியிலதான் இவுங்க வாழுறாங்க. இங்கே எந்த வசதியும் கிடையாதாம். ஸ்கூலுக்குப் போகனும்னா 800 மீட்டர் உயரமுள்ள ஒரு மலை மேலே ஏறித்தான் போகணுமாம்.

பாண்டு: என்னது, 800 மீட்டர் உயரமுள்ள மலையா? அம்மாடியோவ்! நினைக்குறப்பவே பயமா இருக்கே. எப்படி மலை மேலே ஏறிப்போறாங்க?

வாண்டு: ஆமா, நிச்சயமா பயமா இருக்கும்தான். மலையில் ஏறிப்போறதுக்காக அந்த மலையில அங்கங்க தொங்குற ஏணிகளை அமைச்சுருக்காங்க. மூங்கில்களைக் கொண்டு இதைச் செஞ்சு தொங்க விட்டுருக்காங்க. இந்த ஏணியில ஏறித்தான் பசங்க ஸ்கூலுக்குப் போகணும்.

6 வயசு குட்டிப் பையன்கூட ஆபத்தான இந்தச் செங்குத்தான மலையில ஏறித்தான் போறான். தினமும் இப்படித்தான் ஸ்கூலுக்குப் போயிக்கிட்டு இருக்காங்க. மலை மேலே ஏறிப் போக 2 மணி நேரம்கூட ஆகுமாம். உலகிலேயே ரொம்ப ஆபத்தான நிலையில பள்ளிக்கூடம் போற பசங்கள்ல இவுங்களும் ஒருத்தர். இப்போ சொல்லு, நீ ஸ்கூலுக்குப் போறது கஷ்டமா, இந்தப் பசங்க ஸ்கூலுக்குப் போறது கஷ்டமா?

பாண்டு: இந்தக் கேள்வி தேவையா? எவ்ளோ ஆபத்தான நிலையில இவுங்க பள்ளிக்கூடம் போறாங்க. இனி, நான் தினமும் உன்கூட நடந்தே பள்ளிக்கூடம் வரேன்பா.

வாண்டு: ம்... சரிசரி... அப்புறம், சின்னப் பையன் ஒருத்தன், பிசினஸ் மேனா மாறிய கதையை நீ கேள்விப்பட்டியா பாண்டு?

பாண்டு: தெரியுமே. அதை நான் சொல்றேன். அமெரிக்காவுல அலபாமான்னு ஒரு ஊருல டெய்லர் ரோசந்தல்னு ஒரு சின்னப் பையன் 8-வது படிக்குறான். பேஸ்பால்னா அவனுக்கு ரொம்ப உசுரு. எப்பவுமே மைதானத்துலதான் இருப்பான். அப்படி அங்கேயே கதின்னு இருந்ததுதான் இன்னிக்கு அவன் பிசினஸ்மேனா மாறக் காரணம்.

வாண்டு: மைதானமே கதின்னு இருந்து பிசினஸ்மேனா ஆயிட்டானா? அதெப்படி முடியும், கொஞ்சம் விவரமா சொல்லு.

பாண்டு: என்னை முழுசா சொல்ல விடுப்பா. மைதானத்துல விளையாடுறப்ப கீழே விழுவோம், அடிபடும் இல்லையா? உடனே அடிபட்ட இடத்துல மருந்து போடவும், கட்டுப்போடவும் காட்டன் துணி, பிளாஸ்திரி தேவைப்படும்தானே? அதை வாங்க அடிபட்ட பசங்களோட அம்மா, அப்பாக்கள் மருந்து கடைக்கு ஓடுவாங்க.

இதைப் பார்த்த டெய்லருக்கு ஒரு யோசனை வந்திருக்கு. ஏ.டி.எம். மெஷின் போல மருந்துகள் கொடுக்குற முதலுதவி மெஷின் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு யோசிச்சிருக்கான். இந்த யோசனை பற்றிப் பல இடங்களில் பேசி பரிசும் வாங்கியிருக்கான். உடனே உற்சாகமாகி ‘ரெக்மெட்’ன்னு ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கான்.

படிப்படியா மருந்து கொடுக்குற முதலுதவி இயந்திரத்தைக் கண்டுபிடிக்குற முயற்சியில இறங்கியிருக்கான். அவனோட அம்மா, அப்பா மருத்துவத் துறையில இருந்ததால சுலபமா இதைக் கண்டுபிடிச்சுட்டான். அந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையும் வாங்கிட்டான்.

வாண்டு: அப்போ இந்த மெஷினை விற்க ஆரம்பிச்சுட்டானா?

பாண்டு: இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்து நிறையப் பேருக்கு ஒரே ஆசை. நிறையப் பணம் தரோம். கண்டுபிடிப்பு காப்புரிமையை எங்ககிட்ட கொடுத்துடுன்னு கேட்டு வராங்களாம். ஆனா, யாருக்கும் அதை அவன் கொடுக்கலை. இப்போ அவனோட சொந்த நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் முதலீடா கிடைச்சுருக்கு. இப்ப அவனே மெஷினைத் தயாரிக்க ஆரம்பிச்சுட்டான்.

வாண்டு: நல்ல கண்டுபிடிப்பாதான் இருக்கு. இந்த மெஷின்ல என்னென்ன இருக்குமாம்?

பாண்டு: முதலுதவி மெஷின்ல மருந்துகள், காட்டன் துணி, பிளாஸ்திரின்னு என்னென்ன தேவையோ அந்தப் பொருட்கள் எல்லாம் இருக்குமாம். குழந்தைகள் அதிகமா கூடுற மைதானங்கள், பூங்காக்களில் இந்த மெஷினை வைக்கப்போறானாம். இப்பவே அமெரிக்காவுல 100 கேளிக்கைப் பூங்காக்கள் இந்த மெஷினை வாங்க காசு கொடுத்துட்டாங்களாம். இன்னும் கொஞ்சம் நாள்ல இந்தச் சின்னப் பையன் பெரிய பணக்காரனா மாறிடுவான்னு அமெரிக்கா முழுக்க ஒரே பேச்சா இருக்காம்.

வாண்டு: யார் கண்டது? பெரிய பணக்காரன் ஆனாலும் ஆயிடுவான். அவனுக்கு நாமும் வாழ்த்தைச் சொல்லிடுவோம். சரி, ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. கிளம்புவோமா?

பாண்டு: சரிப்பா, கிளம்பி வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்.

ஓவியம்: ஷர்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x