Published : 05 Sep 2018 10:34 AM
Last Updated : 05 Sep 2018 10:34 AM
ஜிப் இல்லாத வாழ்க்கையை இன்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? புத்தகம், துணி கொண்டு செல்லும் பைகள், பேண்ட், ஜீன்ஸ் போன்ற துணிகள், ஷூ, சூட்கேஸ் என்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஜிப்பின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஜிப் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன் ஜிப்பின் வேலையைச் செய்துகொண்டிருந்தது பட்டன்.
தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பட்டனின் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் எளிதில் விழுந்துவிடும், போடுவதற்கு நேரம் பிடிக்கும் என்பது போன்ற பல பிரச்சினைகள் பட்டனில் இருந்தன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வந்ததுதான் ஜிப்.
1851-ம் ஆண்டு புதிய தையல் இயந்திரத்தை உருவாக்கிய எலியாஸ் ஹோவ், தானாகவே துணிகளை இணைக்கும் ஒரு கருவியையும் உருவாக்கினார். இது சிறந்ததாக இருந்தாலும் அவரால் பெரிய அளவுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அவரது தையல் இயந்திரம் அதிக அளவில் விற்பனையானதால், இதை ஒரு பொருட்டாகவும் அவர் நினைக்கவில்லை.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள் அமெரிக்காவைச் சேர்ந்த விட்காம்ப் ஜுட்சன், ஷூ லேஸைக் கட்டிக்கொண்டிருந்தார். அது கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தது. அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. எலியாஸ் ஹோவ்வின் யோசனையைச் சற்று மேம்படுத்தி ஒரு கருவியை உருவாக்கினார்.
அதற்கு ‘அன்லாக்கர் ஃபார் ஷூஸ்’ என்று பெயரும் சூட்டினார். ’யுனிவர்சல் ஃபாஸ்ட்னர்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். சிகாகோவில் நடைபெற்ற கண்காட்சியில் விற்பனைக்கும் வைத்தார். ஆனால் அது வெற்றியைத் தேடித் தரவில்லை.
1913-ம் ஆண்டு கிடியன் சண்ட்பேக், நவீன ஜிப்பை உருவாக்கினார். ‘செபரபிள் ஃபாஸ்ட்னர்’ என்ற தன்னுடைய கண்டு பிடிப்புக்கு 1917-ம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். சண்ட்பேக் கண்டுபிடித்த இரண்டு வரிசைப் பற்களையும் இணைக்கும் ஜிப், வேகமாக அடுத்தடுத்த முன்னேற்றங் களைக் கண்டது.
சண்ட்பேக் மூலம் ஜிப் உருவானாலும் ஜிப் என்று பெயர்க் காரணம் அவரால் ஏற்படவில்லை. பி.எஃப். குட்ரிச் நிறுவனம், சண்ட்பேக் கருவியைப் பயன்படுத்தி புதுவிதமான ரப்பர் ஷூக்களைக் கொண்டுவந்தது. அவர்கள் அந்தக் கருவிக்கு ‘ஸிப்பர்’ என்று பெயர் சூட்டினர். பின்னர் ஜிப்பர், ஜிப், ஃப்ளை, ஜிப் ஃபாஸ்ட்னர் என்ற பெயர்களில் அந்தக் கருவி அழைக்கப்பட்டது.
ஷூக்களிலும் பைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிப், பின்னர் துணிகளிலும் பயன்படுத்தப்பட்டது.
1934-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜிப் தயாரிப்பை இன்றுவரை பின்பற்றி வருகிறது அமெரிக்காவின் ஒய்கேகே என்ற ஜிப் நிறுவனம். 1960-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், உலகின் மிகப் பெரிய ஜிப் உற்பத்தி நிறுவனமாக இன்றும் இருந்துவருகிறது.
(கண்டுபிடிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT