Published : 12 Sep 2018 11:17 AM
Last Updated : 12 Sep 2018 11:17 AM
ஊக்கைப் பயன்படுத் தாதவர்களே இருக்க முடியாது. பட்டன் விழுந்துவிட்டால் சட்டென்று ஊக்கை வைத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம். பையின் கைப்பிடி அறுந்துவிட்டால் ஊக்கை மாட்டி எடுத்துச் சென்று விடலாம். எதிர்பாராத நேரத்தில் கைகொடுக்கும் ஒரு கண்டுபிடிப்பு ஊக்கு.
பழங்காலத்தில் இருந்தே ஊக்கு போன்ற ஒரு பொருளை மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். துணி, தோலாடைகளை இணைக்க செப்புக் கம்பியால் ஆன ஊக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நவீன ஊக்கைக் கண்டுபிடித்த பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் ஹண்ட்டைச் சேரும். இவர் ஏராளமான பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.
1846-ம் ஆண்டு பூட்டுத் தையல் இயந்திரத்தைக் உருவாக்கினார். ஆனால், இந்த இயந்திரத்தின் மூலம் ஏராளமான ஏழைப் பெண்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று இவரது மகள் சொன்னார். அதனால் வால்டர் ஹண்ட், தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெறவில்லை.
1849-ம் ஆண்டு பணக் கஷ்டத்தில் இருந்தார் வால்டர். ஒரு நாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து, நண்பரிடம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவரது கையில் நீண்ட வயர் ஒன்று சிக்கியது. அதை வைத்து ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார். அதில் அவருக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியது. பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து பார்த்தார்.
இறுதியில் ஊக்கின் (Safety Pin) வடிவத்தை உருவாக்கினார். 1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெற்றார். பிறகு அந்தக் காப்புரிமையை டபிள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அதில் கிடைத்த பணத்தை நண்பரிடம் கொடுத்து, கடனை அடைத்தார்.
இவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம்தான் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஊக்கு, விலை உயர்ந்த பொருளாக இருந்தது. ஜனவரி முதல் அல்லது இரண்டாவது நாளில் ஊக்கை வாங்கி வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் ஊக்கை வாங்கி வைக்கும் அளவுக்குச் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்பினர். நியூயார்க்கில் சாமுவேல் சோல்கம் ஊக்குத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ஊக்குகள் தயாரிக்கப்பட்டன.
வால்டர் கண்டுபிடித்த ஊக்கில் மிகச் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. இரும்பு, செம்பு, எஃகு போன்றவற்றில் ஊக்குகள் உருவாக்கப்பட்டன. மிகச் சிறிய ஊக்கில் இருந்து மிகப் பெரிய ஊக்குகள்வரை அளவிலும் மாற்றங்கள் வந்தன. ஊக்கின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க விலையும் குறைந்து போனது. இன்று ஒரு நாளைக்கு 30 லட்சம் ஊக்குகள் உற்பத்தி செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
துணிகளை வேகமாக இணைக்க வெல்க்ரோ போன்றவை வந்துவிட்டாலும் இன்றும் ஊக்கின் பயன்பாடு உலக அளவில் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஊசியையும் ஊக்கையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு, தாய் மகளுக்குச் சீதனமாகக் கொடுக்கும் பழக்கம் இருந்துவருகிறது.
உக்ரைனில் குழந்தைகளின் சட்டையில் ஊக்கை மாட்டினால், அது கெட்ட சக்திகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஊக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதாக நினைக்கிறார்கள்.
(நிறைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT