Last Updated : 05 Sep, 2018 10:38 AM

 

Published : 05 Sep 2018 10:38 AM
Last Updated : 05 Sep 2018 10:38 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: முதல் மாணவி, முதல் ஆசிரியர்

வீட்டை விட்டு வெளியில் வந்தார் சாவித்திரி. சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். நான்கு வீடுகளைக் கடந்திருப்பார். மாடியிலிருந்து ஒருவர் வாளி நிறைய குளிர்ந்த நீரை எடுத்து சாவித்திரி மீது கொட்டினார். அவர் எப்போது வருவார், எப்போது கொட்டலாம் என்று காலை முதல் காத்துக்கொண்டிருந்தார் போலிருக்கிறது. அது வெறும் நீர் அல்ல, அழுக்கும் சேறும் கலந்த சாக்கடை என்பது சாவித்திரிக்குத் தெரிந்தது. தொடர்ந்து நடந்தார். ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, சாணியை அள்ளி சிலர் சாவித்திரிமீது வீசினார்கள்.

இப்போதும் சாவித்திரி நிற்கவில்லை. நின்று என்ன பலன்? சுற்றிலும் வீடுகள் இருப்பது உண்மைதான். அவர்களில் பலரை சாவித்திரிக்கு நன்றாகத் தெரியும் என்பதும் உண்மைதான். ஆனால் அவர்களிடம் சென்று முறையிட முடியுமா? உதவிதான் கேட்க முடியுமா? ஐயா, கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா என்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? ‘அச்சச்சோ, என்ன ஆச்சு சாவித்திரி? இரு, தண்ணீரும் சோப்பும் கொண்டுவருகிறேன்’ என்று அவர்கள் பதறவா போகிறார்கள்?

மாட்டார்கள். மாறாக, என் மீதே சீறுவார்கள். ‘ஏய், என் வீட்டுக் கதவைத் தட்டும் அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துவிட்டதா? நாலு எழுத்துப் படித்துவிட்டோம் என்று திமிரா? அதான் சாணி வீசுகிறார்கள் என்று தெரிகிறதே! வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியதுதானே? நீ கெட்டது போதாது என்று ஊரில் இருக்கும் குழந்தைகளையும் கெடுக்கிறாயா? குப்பத்துப் பெண்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து என்ன சாதிக்கப் போகிறாய்?’

சிலர் சேறை வாரி வீசுவார்கள். சிலர் கற்களை எரிவார்கள். சிலர், சொற்களை. என்ன செய்வது? இவர்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் சேர்த்துதானே நான் போராட வேண்டியிருக்கிறது? விறுவிறுவென்று நடந்து சென்ற சாவித்திரி பள்ளிக்கூடத்தை நெருங்கினார். உள்ளே சென்று, தண்ணீரை எடுத்துத் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டார். கையோடு கொண்டுவந்திருந்த மற்றொரு புடவையை அணிந்துகொண்டார். பிறகு வகுப்பறைக்குள் நுழைந்தார். மொத்தம் ஐந்து மாணவிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் சாவித்திரியின் முகத்தில் தானாகவே புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

”இன்று ஆசிரியரை நீங்கள் கேள்வி கேட்கும் நாள். நீங்கள் எல்லாம் தயாரா?’’ என்றபடி நாற்காலியில் அமர்ந்துகொண்டார் சாவித்திரி. இதற்காகவே காத்திருந்ததுபோல் ஒரு சுட்டிப் பெண் கையை உயர்த்தினார்.

‘‘நீங்கள் என்னைப்போல் இருக்கும்போது எந்தப் பள்ளியில் படித்தீர்கள்?’’

‘‘உன்னைப்போல் இருக்கும்போது எனக்கு அ, ஆ, இ, ஈ... கூடப் படிக்கத் தெரியாது. பள்ளிக்கூடத்துக்கு என்னை மாதிரி சிறுமிகளும் போகலாம் என்றுகூட எனக்குத் தெரியாது. காலை எழுந்தவுடன் முதல் வகுப்பு, வீட்டையும் வாசலையும் பெருக்குவது. இரண்டாவது வகுப்பு, சமையல். மூன்றாவது வகுப்பு, துணி துவைப்பது. பிறகு உணவு இடைவேளை. பிறகு தோட்ட வேலை, பாத்திரங்கள் சுத்தம் செய்யும் வேலை, மீண்டும் சமையல். நான் படித்தது இவ்வளவுதான்.’’

‘‘பிறகு எப்படி ஆசிரியர் ஆனீர்கள்?’’

‘‘உனக்கு எழுத, படிக்கத் தெரியுமா என்று முதல்முறையாக என்னைக் கேட்டவர், என் கணவர் ஜோதிராவ் புலே. அதெல்லாம் பசங்களுக்குதானே, வீட்டைக் கவனித்துக்கொள்ள படிப்பு எதற்கு என்று சிரித்தேன். வீட்டைக் கவனித்துக்கொள்வதுதான் உன் வேலை என்று யார் சொன்னார்கள் என்று திருப்பிக் கேட்டார்.

என் அம்மா, அம்மாவின் அம்மா, அவர் அம்மா என்று எல்லோரும் அப்படிதானே இருந்தார்கள்? நான் மட்டும் எதற்கு அநாவசியமாகப் படிக்க வேண்டும்? வீட்டில்தானே இருக்கப் போகிறேன்? என்று கேட்டேன். ஆனால் ஜோதிராவ் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டு வேலையைவிட வீட்டுப் பாடம் எளிதானது, வா என்று அன்றே வகுப்பைத் தொடங்கிவிட்டார். முதல் முறையாக பென்சிலை எடுத்து தாளில் எழுதிய அனுபவம் இருக்கிறதே, அடடா! அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு கிடையாது.’’

‘‘எழுதக் கற்றுக்கொண்ட பிறகாவது பள்ளிக்கூடம் போயிருக்கலாமே?’’

‘‘போயிருக்கலாம். ஆனால் பள்ளிக்கூடங்களில் ஆண் குழந்தைகளே படிப்பார்கள். அல்லது சமுதாயத்தில் மேல் சாதியாகக் கருதப்பட்டவர்கள் படிப்பார்கள். நான் பெண். தாழ்ந்ததாகக் கருதப்பட்ட சாதி வேறு. என்னை யார் சேர்த்துக்கொள்வார்கள்? இதில் கொடுமை என்ன தெரியுமா? புத்தகம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தபோது பள்ளிக்கூடம் பற்றியே நான் யோசித்ததில்லை.

ஆனால், படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பள்ளிக்கூடம் தவிர, வேறு சிந்தனைகளே இல்லை. இப்போதுதான் உனக்கு நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியுமே. நீயே ஏன் ஒரு பள்ளியைத் தொடங்கக் கூடாது என்றார் ஜோதிராவ். அப்புறம் என்ன? இதோ, நான் ஆரம்பித்து நடத்தும் பதினெட்டாவது பள்ளிக்கூடம் இது. நீ ஒரு பெண், உனக்கு எதற்குப் படிப்பு என்றோ, நீ தீண்டத்தகாதவள் உனக்குப் படிப்பு தேவையில்லை என்றோ ஒருவரும் இனி யாரையும் சொல்லக் கூடாது. அதுதான் என் ஆசை.’’

‘‘எங்களுக்கும் ஓர் ஆசை இருக்கிறது’’ என்றாள் அந்தச் சுட்டிப் பெண். என்ன என்று சாவித்திரி கேட்டு முடிப்பதற்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அறையே அதிரும்படி ஒரே குரலில் பதிலளித்தனர். ‘‘இனி நாங்களும் உங்களுடன் வருகிறோம். நீங்கள் பள்ளிக்கூடம் வந்து இன்னொரு புடவையை அணிந்துகொள்ளும் நிலை இன்னொரு முறை வரக் கூடாது.’’

இந்தியாவிலேயே பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடத்தை புனேவில் திறந்து, வகுப்புகளும் எடுத்த முதல் ஆசிரியர், சாவித்திரிபாய் புலே (3 ஜனவரி 1831 - 10 மார்ச் 1897).

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x