Published : 26 Sep 2018 12:17 PM
Last Updated : 26 Sep 2018 12:17 PM
பறம்பூர் நாட்டு ராஜாவான பழையனுக்குப் பாம்பு என்றால் அப்படி ஒரு பயம். அதனால் அவருடைய அரண்மனையைச் சுற்றி அகழி கட்டி, பாதுகாப்பாக இருந்தார். யாராவது அவரிடம் பாம்பு என்று சொல்லி விட்டாலே போதும். அப்படியே துள்ளிக் குதித்து ஓடுவார். இத்தனைக்கும் பாம்பை அவர் நேரில் பார்த்ததில்லை. அதனால் மந்திரிகள் யாரும் ராஜா பழையனிடம் பாம்பு என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் அறிவியல் மந்திரி மட்டும் சொன்னார்:
“இயற்கையில் பாம்பு, பல்லி, பூச்சி, புழு, மனிதன் என எல்லோரும் சமமானவர்கள். ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் போதும். விபத்துகள் நேராது.”
அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அவர் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டார். பறம்பூர் விவசாய நாடு. மலையடிவாரத்தில் இருந்தது. எனவே அடிக்கடி காட்டிலிருந்து யானை, மிளா, மரைமான், காட்டுப்பூனை, நரி, காட்டு நாய் என்று நாட்டுக்குள் வந்துவிடுவது உண்டு. மக்கள் அந்த விலங்குகளைத் தாரை தப்பட்டை அடித்து, காட்டுக்குள் விரட்டி விடுவார்கள். ராஜாவோ மந்திரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் பத்திரமாக அரண்மனைக்குள் இருப்பார்கள்.
ஒரு நாள் ராஜா தன்னுடைய மாளிகைப் பூந்தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சரக்கொன்றை மரத்தின் கிளையில் ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் அழகாக இருந்தது. அவர் அந்தக் கயிற்றைப் பிடித்து இழுத்தார். கையில் வழுவழுவென்று நெளிந்தது. அவ்வளவுதான்! பாம்பு, பாம்பு என்று அலறினார். கைகளை உதறினார். அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். அவர் உதறியதில் பாம்பு எங்கேயோ போய் விழுந்துவிட்டது.
ராஜா பழையன் மறுநாள் மாலைதான் கண்விழித்தார். எழுந்ததும் கேட்ட முதல் கேள்வி, பாம்பு எங்கே?.
காட்டு மந்திரி உடனே, “அதை அப்பவே கொன்னு புதைச்சாச்சு!” என்று சொன்னார்.
“பறம்பூர் நாட்டில் ஒரு பாம்பு கூட இருக்கக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று ஆணையிட்டார் ராஜா.
அதைக் கேட்ட மந்திரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய மந்திரி நாடு முழுவதும் பாம்புகள் ஊருக்குள் வராமலிருக்க யாகம் நடத்தச் சொன்னார். உடனே தெருவுக்குத் தெரு ஆல மரக்குச்சிகளையும் அரசமரக் குச்சிகளையும் போட்டு, லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி, மந்திரங்களைச் சொல்லி யாகங்களை நடத்தினார்கள். புகை மூட்டத்தில் பொந்துகளில் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து தெருக்களில் அலைய ஆரம்பித்தன. யாகம் நடத்தியவர்கள் அலறியடித்து ஓடி விட்டனர். அவர்கள் ஓடுவதைப் பார்த்த பறம்பூர் நாட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இப்படி முக்கிய மந்திரி கஜானாவில் பாதியைக் காலி செய்தார்.
காட்டு மந்திரி பாம்பாட்டிகளைக் கொண்டு பாம்புகளைப் பிடிக்கப் போகிறேன் என்று ராஜாவிடம் சொன்னார். பாம்பு பிடிப்பவர்கள் தெருக்களில் மகுடி ஊதினார்கள். அவர்களுக்கு முன்னால் பத்துப் பாம்புகள் தலையசைத்து ஆடின. பாம்பு பிடிப்பவர்கள் கொண்டுவந்த சாக்குப்பையில் அந்தப் பாம்புகளைப் பிடித்து அடைத்தார்கள். மறுநாளும் அவர்கள் வேறு தெருவுக்குப் போய் ஊதினார்கள். அதே பத்துப் பாம்புகளைப் பிடித்தார்கள். இன்னொரு தெருவுக்குப் போனார்கள். அங்கேயும் அதே பத்துப் பாம்புகளைப் பிடித்தார்கள். இப்படிப் பத்துப் பாம்புகளை வைத்து ஆயிரம் பாம்புகளைப் பிடித்ததாகக் கணக்குக் காட்டினார் காட்டு மந்திரி.
சாலை மந்திரி சும்மாயிருப்பாரா? ஊரில் உள்ள தெருக்களில் எல்லாம் பாம்புக் கோயில்களைக் கட்டினார். மூன்று வேளையும் பூஜை நடத்தச் சொன்னார். அதில் கஜானாவிலிருந்து கால்வாசியைக் காலி செய்தார்.
விவசாய மந்திரி, விவசாயிகள் இனிமேல் தங்களுடைய நிலங்களில் விதைக்கக் கூடாது. எந்தப் பயிரையும் பயிர் செய்யக் கூடாது. பயிர் செய்தால்தானே தவளைகளும், எலிகளும், பூச்சிகளும், பறவைகளும் வருகின்றன. பின்னாலேயே அவற்றைத் தின்பதற்காகப் பாம்புகளும் வருகின்றன. எனவே பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போடுங்கள் என்று ஆணையிட்டார். மக்கள் மன்றாடினார்கள். விவசாயம் இல்லை என்றால் மக்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் மட்டும் இல்லை ராஜா, மந்திரிகள், மக்கள் யாருமே வாழ முடியாது. என்றார்கள்.
“உணவு தானியங்களை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம்” என்று பதில் சொன்னார் ராஜா.
பறம்பூர் நாட்டில் யாரும் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் செய்தால் தண்டனை. உணவு கிடைக்கவில்லை. மக்கள் அரண்மனைக்குச் சென்று போராட்டம் செய்தனர். ராஜா பழையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்தப் போராட்டத்துக்குப் பழைய அறிவியல் மந்திரி தலைமை தாங்கி நின்றார்.
வேறுவழியில்லாமல், “என்ன செய்ய வேண்டும் அறிவியலாளரே?“ என்று ராஜா பழையன் கேட்டார்.
அறிவியல் மந்திரி உடனே, “பாம்புகள் மிகவும் குறைவான அறிவுத்திறன் கொண்டவை ராஜா. அவற்றுக்குக் காது கேட்காது. எந்த உணவையும் மென்று தின்கிற மாதிரி அவற்றின் வாயோ, தொண்டையோ கிடையாது. உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே அவை கடிக்கும். ஞாபக சக்தி கிடையாது. எனவே பழிவாங்க, ஞாபகம் வைத்திருக்கத் தெரியாது. எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. நாம் அதன் வழியில் குறுக்கிடக் கூடாது. அவையும் நம் வழியில் குறுக்கிடாது. இயற்கையில் யாரும் யாரைப் பார்த்தும் அச்சப்படத் தேவையில்லை” என்று விளக்கமாகச் சொன்னார்.
பறம்பூர் நாட்டு ராஜா பழையனுக்குப் புரிந்துவிட்டது. பிறகு பறம்பூர் நாட்டு மக்களும் பாம்புகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT