Published : 19 Sep 2018 11:16 AM
Last Updated : 19 Sep 2018 11:16 AM
ஓர் உயிரியலாளரைக் கேட்டால், உலகிலுள்ள பொருட்களை உயிருள்ளவை, உயிரற்றவை என்று பிரிக்கலாம் என்பார். அப்படி இரண்டாகப் பிரித்தாலும் இரண்டும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட குணங்களைக் கொண்டிருக்கும் என்று இயற்பியலாளர் சொல்வார்.
அப்படியே வேதியியலாளரிடம் போனால், உலகிலுள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அத்துடன், வெவ்வேறு எண்ணிக்கையில் அணுக்கள் இணைவதால் கிடைக்கும் வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்டவைதான் அந்தப் பொருட்கள் என்பார்.
ஒவ்வொரு பொருளின் அடிப்படையையும் ஆதாரத்தையும் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. அப்படித் தேடிச் சென்றால் உலகிலுள்ள எல்லா பொருட்களும் அடிப்படையில் 94 இயற்கைத் தனிமங்களால், அதாவது வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை.
உயிர் வாயு
வேதித் தனிமங்கள் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. நாம் நொடிதோறும் மூச்சுவிடும்போது சுவாசிக்கும் ஆக்சிஜன், தாவரங்கள் வளர அத்தியாவசியமாக இருக்கும் நைட்ரஜன் என உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கின்றன.
சூரியக் குடும்பத்தில் மற்ற கோள்களுக்கும் பூமிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, பூமி பெருமளவில் ஆக்சிஜனைக் கொண்டிருப்பதுதான். இந்த ஆக்சிஜனை நம்மால் சுவாசிக்க முடியாவிட்டாலோ, நாம் வெளிவிடும் கார்பன் டைஆக்சைடை தாவரங்கள் கிரகித்துக்கொள்ளாவிட்டாலோ பிரச்சினைதான். பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடின் அளவு அதிகரித்துவிட்டதால்தான் பூமியின் வெப்பநிலை, தற்போது எல்லைமீறி அதிகரித்துவருகிறது.
புரதத் தனிமம்
அதேபோல, நைட்ரஜன் இல்லையென்றால் பூமியின் அடிப்படை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் செழித்து வளர முடியாது. இந்த நைட்ரஜன்தான் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. தாவரங்கள்வழி புரதம் கிடைக்காவிட்டால், உலகில் வாழும் உயிரினங்கள் ஆரோக்கியம் இழக்கும். உடல் ஊட்டமின்றி பிறகு மடியவும் நேரிடும்.
எனவே, உலகில் வேதிப்பொருட்கள் அவசியம், அத்துடன் அவை சமநிலையில் இருப்பதும் அத்தியாவசியம். வேதிப்பொருட்கள்தான் உலகைக் கட்டமைக்கும் அடிப்படைப் பொருட்கள். வேதித் தனிமங்களின் வெவ்வேறு சேர்க்கையில் உருவான சேர்மங்களும் உலோகங்களும் அலோகங்களுமே உலகைக் கட்டமைக்கின்றன. இப்படி நம்மைச் சுற்றியும் நிறைந்திருக்கும், நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வேதியியல் ஏகப்பட்ட சுவாரசியங்களைக் கொண்டது.
பிப்பெட், பியூரெட்
ஒரு வேதியியல் ஆய்வுக்கூடம் என்றால், அங்கிருக்கும் முதன்மையான அத்தியாவசியப் பொருட்கள் பிப்பெட்டும் பியூரெட்டும்தான் (pipette, burette). ஒருவேளை இனிமேல்தான் பள்ளி வேதியியல் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளில் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் பிப்பெட்டும் பியூரெட்டும் இல்லாமல், அடிப்படை வேதியியல் ஆய்வுகள் சாத்தியமில்லை.
வேதிப்பொருட்களுடன் அதிகம் புழங்குபவை இந்த பிப்பெட்டும் பியூரெட்டும். பல்வேறு வேதிப்பொருட்களைப் பற்றிய சுவாரசியத் தகவல்களை இந்த பிப்பெட்டும் பியூரெட்டும் வாராவாரம் நமக்கு திரட்டி வரப்போகின்றன. அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.
இந்த வாரத் தனிமங்கள் ஆக்சிஜன் (O), நைட்ரஜன் (N). பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும், ஆக்சிஜன் 21 சதவீதமும் உள்ளன. |
தனிம அட்டவணை ஆண்டு
ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டலீவ் வேதித் தனிமங்களை வரிசைப்படுத்தி 1869-ல் ஓர் அட்டவணையை முன்மொழிந்தார். மிக முக்கியமான அந்தக் கண்டறிதல், வேதியியல் உலகில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. வேதியியலின் வளர்ச்சியில் தனிம அட்டவணை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது.
அட்டவணை வெளியாகி 150 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி 2019-ம் ஆண்டை ‘சர்வதேசத் தனிம அட்டவணை ஆண்டாக' ஐ.நா. அறிவித்திருக்கிறது. தனிம அட்டவணையையும் அதை முன்மொழிந்த மெண்டலீவையும் கொண்டாட வேண்டிய நேரம் இது.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT