Published : 05 Jun 2019 09:32 AM
Last Updated : 05 Jun 2019 09:32 AM
> ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் சேரும் நாளில் ஷுல்டைடே (Schultüte) என்றொரு கூம்பு வடிவக் கலன் பரிசாகக் கொடுக்கப்படுவது வழக்கம். இதில் பென்சில், பேனா, புத்தகம், நொறுவை, ஆச்சரியப் பரிசு போன்றவை இருக்கும். இப்படியொரு பரிசு கிடைக்கும்போது எந்தக் குழந்தைதான் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல மறுக்கும்?
> பின்லாந்திலுள்ள குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். அங்குள்ள குழந்தைகள் 7 வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். உலகிலேயே பள்ளிக் கல்வி தாமதமாகத் தொடங்கப்படும் நாடு இது.
> பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் ஒரு வகையில் பள்ளிக்குச் செல்வதை மிகுந்த மகிழ்ச்சியாகவும், மற்றொரு வகையில் சற்று அயர்ச்சியாகவும் உணர்வார்கள். காரணம், உலகிலேயே பிரான்ஸில்தான் குழந்தைகள் பள்ளி செல்லும் மொத்த நாட்கள் குறைவு. வாரத்தில் நான்கரை நாட்கள்தான் பள்ளி. புதனும் ஞாயிறும் விடுமுறை. அதேநேரம், ஒரு நாளில் பள்ளியில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதும் அந்த நாட்டில்தான்: காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை.
> பிரேசில் நாட்டுப் பண்பாட்டின்படி குழந்தைகள் பெற்றோருடன்தான் மதிய உணவு உட்கொள்ள வேண்டும். அதன் காரணமாக காலை 7 மணிக்கே பள்ளிக்குச் சென்றுவிடும் குழந்தைகள், மதியம் வீடு திரும்பிவிடுகிறார்கள். பிறகு அடுத்த நாள்தான் பள்ளி. செம ஜாலி இல்ல.
> தென்னமெரிக்க நாடான சிலியில் உள்ள பள்ளிகள்தாம் உலகிலேயே நீண்ட காலத்துக்கு விடுமுறை அளிக்கக்கூடியவை. டிசம்பரில் இருந்து மார்ச் மாதம்வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. பூமிப் பந்தின் அந்தப் பகுதியில் அப்போது கோடைக் காலம்.
> ஐஸ்லாந்து நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் பனி உறைந்து கிடக்கும். அதன் காரணமாக அந்த நாட்டுக் குடிமக்கள் அனைவரும் ஸ்வெட்டர் எனும் கம்பளிச்சட்டையை பின்னக் கற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பள்ளிப் பாடத்திட்டத்தில் ஸ்வெட்டர் பின்னுதலும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
> பிரான்ஸில் உணவு இடைவேளையும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியே. பல்வேறு உணவு வகைகள், உணவுத் தயாரிப்பு முறைகள், அவை எங்கிருந்து வருகின்றன, எப்படிச் சாப்பிடுவது, சாப்பிடும்போது எப்படி நடந்துகொள்வது என்பது உள்ளிட்ட எல்லாமே பள்ளியில் கற்றுத் தரப்படுகின்றன.
> கனடாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம், ஃபிரெஞ்சு என இரண்டு மொழிகளில் பாடங்களைப் படிக்கிறார்கள். காரணம் அந்த நாட்டில் இரண்டுமே அதிகாரப்பூர்வ மொழிகள்.
> ஈரானில் மாணவர்களும் மாணவிகளும் கல்லூரிப் பருவம்வரை தனித்தனியாகவே படிக்கிறார்கள். அதேபோல மாணவர்களுக்கு ஆசிரியர்களும், மாணவிகளுக்குப் ஆசிரியைகளுமே கற்பிக்கிறார்கள்.
> சீனாவில் பதின் வயது மாணவர்களுக்கு வாரத்துக்கு 14 மணி நேரம் வீட்டுப்பாடம் தரப்படுகிறதாம். சராசரியாக, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம். உலகிலேயே அதிக நேரம் வீட்டுப் பாடம் எழுதுபவர்கள் சீன மாணவர்கள் என்று கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT