Published : 17 Sep 2014 12:58 PM
Last Updated : 17 Sep 2014 12:58 PM
நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். எனக்குக் காய்களைக் கண்டாலே பிடிக்காது. அம்மா தினமும் மதிய உணவுக்காகக் கொடுத்தனுப்பும் காய்கறிகளை அப்படியே திருப்பிக் கொண்டுவந்து விடுவேன். காய்கறிகள் நம் உடலுக்குத் தேவையான சத்தைக் கொடுக்கின்றன என்று அப்பா சொல்வார். ஆனால் அவற்றைப் பார்த்தாலே வெறுப்புதான் வருகிறது.
ஒருநாள் என் அறிவியல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி பாடம் நடத்தினார். தாவரங்களுக்கும் நம்மைப் போலவே உயிர் இருக்கிறது, அவையும் நம்மைப் போலவே சுவாசிக்கும், சாப்பிடும் என்று அவர் சொன்னார். அதுமட்டுமல்ல, அவை நமக்கும் சேர்த்து உணவு தயாரித்துத் தருகிறது என்றும் சொன்னார். உடனே எனக்குத் தாவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது.
அன்று மாலை எங்கள் பள்ளி மைதானத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அங்கே சிவப்பு நிறத்தில் சில விதைகள் கீழே கிடந்தன. அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தேன். அவற்றை நட்டு வைத்தால் செடி முளைக்குமா என்று கேட்டேன். அம்மாவும் எனக்கு ஒரு தொட்டி வாங்கித் தந்தார்கள். அதில் விதைகளைப் போட்டு, மண்ணால் மூடினேன். மறுநாள் காலை அவற்றைக் கிளறிப் பார்த்தேன். எதுவுமே முளைக்கவில்லை. இப்படி அடிக்கடி கிளறினால் விதை முளைக்காது என்று அம்மா சொன்னார். பிறகு தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றினேன்.
ஒருநாள் இரவு மழை பெய்தது. காலை எழுந்ததும் முதல் வேலையாக மாடிக்குச் சென்றேன். தொட்டியில் சின்னச் சின்னதாக செடிகள் முளைத்திருந்தன. எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. வீட்டில் அனைவரையும் அழைத்து வந்து செடிகளைக் காட்டினேன். என்னைப் பார்த்து என் தம்பிக்கும் செடிகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. அவனும் என் அம்மாவின் உதவியுடன் சில விதைகளை நட்டான். இப்போது நாங்கள் இருவரும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்று நிறைய செடிகளை வளர்க்கிறோம். அவற்றில் இருந்து நாங்களே காய்களைப் பறித்து அம்மாவிடம் தருகிறோம்.
இன்னொரு விஷயம் தெரியுமா? இப்போது எனக்குக் காய்களை மிகவும் பிடிக்கிறது. அனைத்தையும் விரும்பிச் சாப்பிடுகிறேன்.
- சூர்யகுமார், எஸ்.ஆர்.டி.எஃப்.
விவேகானந்தா வித்யாலயா, சென்னை - 44.
உங்கள் அனுபவம் என்ன?
குழந்தைகளே, நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். செடிகள் பற்றி மட்டுமல்ல... உங்கள் நண்பர்கள், அவர்களுடன் நடந்த கேலி, கிண்டல்கள், விளையாட்டுகள், ஊருக்குச் சென்ற அனுபவங்கள், ரசித்த இடங்கள், பழகிய மனிதர்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் எழுதலாம். உங்கள் அனுபவங்களை எழுதி, பள்ளித் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் எங்களுக்கு அனுப்புங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT