Last Updated : 26 Jun, 2019 11:10 AM

 

Published : 26 Jun 2019 11:10 AM
Last Updated : 26 Jun 2019 11:10 AM

திறந்திடு சீஸேம் 39: சாஃபோவின் கவிதைகள்

ஒரு நொடிதான், ஒரே ஒரு நொடிதான்

உன்னை வெறித்துப் பார்க்கிறேன்.

என்னால் பேச இயலவில்லை.

என் நாக்குகூட துவண்டு போகிறது.

என் தசைகளுக்குள் மெல்லிய பிழம்பொன்று

கிளம்பி என்னைக் களவாடிப் போகிறது.

என் கண்கள் பார்க்கும் திறனை இழக்கின்றன.

என் காதுகளில் ரீங்காரம் ஒலிக்கிறது

நான் வியர்வையில் மூழ்குகிறேன்.

நடுக்கத்தில் உறைகிறேன்.

புல்லைவிடவும் பச்சையாகிப் போனதாக உணர்கிறேன்.ஆம், நான் மரணத்தின் நுனியில் நிற்பதாக நம்புகிறேன்.

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் ஒருவர் எழுதிய கவிதையின் சிறு பகுதி இது. 2,600 ஆண்டுகள் கடந்தும் அந்தப் பெண்ணின் கவிதைகள், உலகின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், அந்தப் பெண் எழுதிய அனைத்துக் கவிதைகளும் இப்போது இல்லை.

சாஃபோ (Sappho). பண்டைய கிரேக்கத்தில் செல்வச் செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். கி.மு. 630-க்கும் கி.மு. 612-க்கும் இடைப்பட்ட காலத்தில், கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவின் மிட்டிலீன் நகரத்தில் அவர் பிறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சாஃபோவின் ஏழாவது வயதில் அவரது தந்தை இறந்து போனார். சாஃபோ எழுதிய கவிதையிலிருந்து அவரது தந்தையின் பெயர் ‘ஸ்காமாண்ட்ரோனிமஸ்’ என்பதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. தாய் கிளேயிஸ்.

சாஃபோவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் பெரும்பாலும் அவரது கவிதைகள் மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றன. கற்பனை நிறைந்த கவிதை வரிகளில் கிடைக்கும் செய்திகளை வரலாறாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். கிடைத்திருக்கும் ஒரு சில செய்திகளைக்கொண்டு, சாஃபோ வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் மட்டும் நமக்குத் தெரிய வருகின்றன.

வசதியான குடும்பத்தில் பிறந்தவர் சாஃபோ. மொழிப்புலமையும், இசை மீதான ஆர்வமும் அவருக்கு இயல்பாகவே இருந்தன. தனது ஊரில் வசித்த செர்ஸைலஸ் என்ற செல்வந்தரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகாத இளம் பெண்களுக்குக் கல்விச்சாலை ஒன்றை நடத்திய சாஃபோ, அங்கே கலையும் இலக்கியமும் கற்றுக் கொடுத்தார். திருமண வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார். சிறந்த ஆசிரியையாகத் திகழ்ந்தார்.

அன்றைய கிரேக்கச் சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம் வரையறுக்கப்பட்டதாகத்தான் இருந்தது. ஒரு பெண், தன் உணர்வுகளை எல்லாம் வெளிப்படையாகக் கொட்டி, கவிதை பாடுவது என்பதுகூடக் குற்றமாகத்தான் கருதப்பட்டது.

அத்தனையையும் மீறி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாஃபோ தன் கவிதைகளால் புரட்டிப் போட்டார். சாஃபோவுக்குக் கடும் நெருக்கடி உண்டானது. ஆட்சியாளர்கள் சாஃபோவை லெஸ்போஸ் தீவிலிருந்து, சிசிலித் தீவுக்கு நாடு கடத்தினர்கள். அங்கு சென்ற பிறகும் சாஃபோ கவிதை பாடுவதை நிறுத்தவில்லை.

சாஃபோவின் கவிதைகளை Lyric Poetry என்கிறார்கள். நமக்கு முன் ஒரு நபரை அமர வைத்து, அவர் குறித்து நேரடியாகக் கவிதைகள் பாடுவது. அந்த நபர் குறித்து நல்லவிதமாகவோ எதிர்மறையாகவோ நம் மனதில் தோன்றும் உணர்வுகள் எதையும் மறைக்காமல் அப்படியே கவிதைகளில் வெளிப்படுத்துவது. Lyre (யாழ்) என்ற கம்பிக்கருவியை மீட்டியபடியே, கவிதைகள் பாடும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது.

பண்டைய கிரேக்க மொழியில் மிகச் சிறந்த கவிஞராக சாஃபோ திகழ்ந்திருக்கிறார். ஒன்பது தலைசிறந்த கிரேக்க முதுமொழிக் கவிஞர்களுள் ஒருவராகவும் போற்றப்பட்டிருக்கிறார். தத்துவஞானியான பிளேட்டோ, கிரேக்கத்தின் தலைசிறந்த பத்து அறிவாளிகளில் சாஃபோவும் ஒருவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிசிலித் தீவின் சிராகுஸ் நகரத்துக்கு இடம்பெயர்ந்த சாஃபோ, அங்கேயும் தம் கவிதைகளால் புகழ்பெற்றார். சாஃபோவுக்குச் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது. சாஃபோவின் காலத்துக்குப் பிறகு சிராகுஸ் நகர மக்கள், அவர் நினைவாகக் கோயில் ஒன்றை எழுப்பி வணங்கியதாகவும் வரலாற்றுக் குறிப்பு உண்டு.

சாஃபோவின் காலத்திலேயே அவரது கவிதைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டனவா என்று தெரியவில்லை. கி.மு. 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் சாஃபோவின் கவிதைகள் ஒன்பது தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. புத்தகங்கள் என்றால், பாபிரஸ் என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதம் போன்ற பொருளில் உருவாக்கப்பட்டவை.

அதற்குப் பிறகு வேறு எப்போதெல்லாம் சாஃபோவின் கவிதைகள் வெளியிடப்பட்டன என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிடையாது. காலப்போக்கில் பாபிரஸ் புத்தகங்கள் சிதைந்து, சாஃபோவின் கவிதைப் பொக்கிஷங்கள் பலவும் காணாமல் போய்விட்டன. கி.பி. 8, 9-ம் நூற்றாண்டுகளில் பல்வேறு படைப்புகளில் சாஃபோவின் கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

கி.பி. 11-ம் நூற்றாண்டில் சாஃபோவின் கவிதைகளைக் கலாச்சாரச் சீரழிவு என்று கருதி, அவற்றைக் கொளுத்தியதாகக் குறிப்புகள் உண்டு. இப்படிச் சில சம்பவங்களாலும் அந்தக் கவிதைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சாஃபோவின் கிரேக்கச் செம்மொழி வழக்கை, பிற்கால அறிஞர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

எனவே அவை அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வேறு மொழிகளில் பதியப்படாமல் விடுபட்டுப் போயின. இந்தக் காரணத்தாலும் பல கவிதைகள் இழக்கப்பட்டிருக்கின்றன.

சாஃபோ, தன் வாழ்நாளில் சுமார் பத்தாயிரம் வரிகளில் கவிதைகளைப் பாடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மையான கவிதைகள் இல்லாமல் போய்விட்டன.

இப்போது பாபிரஸ் துண்டுகளாகவும் துணுக்குகளாகவும் எஞ்சியிருப்பது சுமார் 650 கவிதை வரிகள், அதாவது இருநூறு கவிதைகள் மட்டுமே. முழுமையான கவிதைகளாக இருப்பதும் வெகு சொற்பமே. எஞ்சியிருப்பவற்றைக் கொண்டு சாஃபோவின் கவிதைகளும், அவை குறித்த ஆய்வு நூல்களும் ஏராளமாக வெளிவந்துள்ளன.

சாஃபோவின் கவிதைப் பொக்கிஷங்கள் முழுமையாகக் கிடைப்பதற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதே வருத்தமான விஷயம்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x