Published : 19 Jun 2019 11:54 AM
Last Updated : 19 Jun 2019 11:54 AM
காலையும் கையையும் தூக்கி அப்படியும் இப்படியுமாக குதித்து ஒரு தேனீ நடனம் ஆடுகிறது என்றால் அது தன் அருகிலுள்ள இன்னொரு தேனீக்கு ஏதோ உணர்த்துகிறது என்று அர்த்தம். ‘ஏய், உன்னைத்தான் கூப்பிடுகிறேன். இங்கே வா! இங்கே தேன் இருக்கிறது’ என்றோ, ‘அந்தப் பக்கமாக ஒரு கரடி வருகிறது.
தேன்கூடு பத்திரம்’ என்றோ சொல்ல ஒரு தேனீ இப்படி ஆட வேண்டியிருக்கிறது. சில நேரம், தன் குட்டி இறக்கையை அது படபடவென்று அடித்துக்கொள்ளும். இதுவும் ஒரு செய்திதான். தேனீ மட்டுமல்ல, காக்கா, குருவி, மீன், குரங்கு, பன்றி, வௌவால், பூச்சி என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஆடியும் பாடியும் கத்தியும் குதித்தும் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன.
வெறும் செய்திகள் மட்டும்தான். ‘நண்பா, நேற்று மாலை நான் வீட்டுக்குப் போய்க்கொண்டி ருந்தேனா, அப்போது புதரிலிருந்து ஒரு சத்தம். என்னடாவென்று திரும்பினால் ஒரு பாம்பு...’ என்று ஒரு தேனீயால் காலை நீட்டி அமர்ந்துகொண்டு, தன் அனுபவத்தை விவரிக்க முடியாது. ‘குட்டி, நீ சின்னதாக இருக்கும்போது நாமெல்லாம் பெரிய கடலில் வசித்துக்கொண்டிருந்தோம்.
அந்தக் கடலில் நிலாவின் வெளிச்சம் விழும்போது எப்படி இருக்கும் தெரியுமா?’ என்று ஒரு தாத்தா மீனால் கண்கள் முழுக்க கனவுகளோடு தன்னுடைய இளமைக் காலத்தைப் பேத்திக்கு விவரிக்க முடியாது. ‘நிலா என்றால் என்ன? இந்தத் தொட்டியைவிட கடல் பெருசா தாத்தா?’ என்று பேத்தியால் எதிர்க் கேள்விகளை வீச முடியாது.
நாமும் ஆரம்பத்தில் தேனீயைப்போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும்தான் இருந்தோம். இங்கே வா, அங்கே போ, இது வேண்டும், அது வேண்டாம் என்பது போன்ற எளிமையான செய்திகளைப் பரிமாறிக்கொள்ள சங்கேத மொழியே பேதுமானதாக இருந்தது.
ஆனால், விரைவில் அது அலுத்துவிட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ‘ஆஆஆஊஊஊ’ என்று விதவிதமான சத்தங்களை எழுப்ப ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு ஆ என்றால் அது, ஊ என்றால் இது என்று ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒவ்வொரு பொருள் கொடுக்க ஆரம்பித்தோம். இது உப்பு, இது பருப்பு என்று தனித்தனி டப்பாவில் போட்டு மூடுவதைப்போல.
இது நடந்தது சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு. சத்தத்தைக் கொண்டு சொற்களை உருவாக்க முடியும் என்பது மனிதர்களுக்குத் தெரிந்ததும் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. எறும்புக்கு ஒரு பெயர், ஈக்கு ஒரு பெயர், தேனீக்கு ஒரு பெயர், அதன் இறக்கைக்கு ஒரு பெயர். அதென்ன வானத்தில் மைனாவா, குருவியா? இரண்டுமில்லையா? சரி, கழுகு என்று வைத்துக்கொள்வோம். குட்டியாக இருந்தால் செடி, வளர்ந்தால் மரம்.
போதுமா? போதவில்லையா? சரி, வேப்ப மரம், புளிய மரம், ஆல மரம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்துவிடலாம். காசா, பணமா?
திடீரென்று புயல் வரும். குகை எல்லாம் மூழ்கிப் போகும். வறட்சி வரும், கூடவே பசியும் நோயும் வரும். இடத்தைக் காலி செய்து இன்னோர் இடத்துக்குப் போக வேண்டியிருக்கும். அப்படியும் நாம் சளைத்தோம் என்றா நினைக்கிறீர்கள்? ஒரு பக்கம் போராடிக்கொண்டே இன்னொரு பக்கம் வறட்சி, புயல், நோய், போராட்டம் என்று புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டே வந்தோம்.
மெல்ல மெல்ல எழுதினோம். ‘க்காடூடூடூ’ அல்ல காடு என்று உச்சரிப்பைத் திருத்தினோம். தொல்காப்பியமும் நன்னூலும் தோன்றின. ’நிற்க அதற்குத் தக’ என்றார் வள்ளுவர். ’கல்வி கரையில’ என்றார் நாலடியார். ’தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றார் பாரதிதாசன். எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்களைக் கொண்டுவந்து சேர்ப்பீர்’ என்று பாரதி அநேகமாகத் தேனீயை மனதில் வைத்துத்தான் பாடியிருக்க வேண்டும்.
நானும் ஒரு தேன்கூடுதான் என்கிறது மொழி. முதல் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்றால், அநேகமாக முதல் மொழியும் அங்கேதான் தோன்றியிருக்க வேண்டும். ஒரு விதையிலிருந்து ஒரு காடே உருவாவதுபோல் ஒரு மொழியிலிருந்து ஆயிரக்கணக்கான மொழிகள் உருவாயின.
நூற்றுக்கணக்கான தேனீக்கள் இணைந்து ஒரு கூட்டைக் கட்டுவதுபோல் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் இணைந்து ஒரு மொழியைக் கட்டி எழுப்புகிறார்கள். ஒரு தேன்கூட்டை விட இன்னொன்று சிறியதாக இருக்கலாம்.
ஒரு கூடு காட்டில் இருக்கலாம், இன்னொன்று நவீனக் கட்டிடத்தில் முளைத்திருக்கலாம். ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிட்டு நீ உசத்தியான தேன், நீ மட்டமான தேன் என்று சொல்ல முடியாது. கூடுகள் மாறலாம், தேன் ஒன்றுதான்.
ஒரே ஒரு விதிவிலக்கு என்று கண்களைச் சிமிட்டுகிறது மொழி. உங்கள் நாவில் இயற்கையாக வந்து விழும் முதல் சொட்டுத் தேன், உங்கள் தாய்மொழி. அதன் சுவை வாழ்நாள் முழுக்க உங்களை விட்டு அகலவே அகலாது. அதனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழிதான் முதல் சொட்டுத் தேன். அதைச் சுவைத்த பிறகு, எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்றுக்கொண்டே போகலாம்.
எனக்கு எல்லைகளே கிடையாது. தினம் கொஞ்சம் மாறுகிறேன். தினம் கொஞ்சம் வளர்கிறேன். எல்லோரும் என் நண்பர்கள் என்பதால் எல்லோரையும் அணைத்துக் கொள்கிறேன். எல்லோரிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறேன்.
எல்லோருக்கும் வழங்கவும் செய்கிறேன். என்னை நீங்கள் வளர்த்தெடுத்ததுபோல் உங்களை நானும் வளர்த்தெடுக்கிறேன். நாம் இணைந்தால் பல வண்ணப் பூக்கள் மலரும் பூந்தோட்டமாக இந்த உலகை மாற்றலாம். அதில் தேனீக்கள் விதவிதமாக நடனமாடுவதையும் பார்க்கலாம்.
கட்டுரையாளர்,
எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
ஓவியம்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT