Published : 14 Mar 2018 11:19 AM
Last Updated : 14 Mar 2018 11:19 AM
தெ
ன் அமெரிக்க ஆதிவாசி மக்கள் அணியும் வண்ண வண்ண உடைகள், சிரித்த முகம், ரிப்பன் பின்னிய கேசத்துடன் கூடிய பெண் பொம்மைகள்தான் மெக்சிக மரியா. சமீப காலமாக மெக்சிகோவின் அடையாளமாகவே இது மாறிவிட்டது. 3 முதல் 40 சென்டிமீட்டர் அளவிலான குழந்தை பொம்மை இது.
ஆதிவாசி மக்களிடையே பழைய துணிகளைக் கிழித்து பொம்மைகளாகச் செய்யும் வழக்கம் உண்டு. இந்தப் பொம்மைகளைச் செய்யும் கலைஞர்கள் அம்மா அல்லது பாட்டியாக இருந்திருக்கிறார்கள். அமேல்கோ கிராமத்தைச் சேர்ந்த ஓடோமி இனப் பெண்கள் செய்யும் பொம்மைகள்தான் மரியா. இவர்களிடம் இருக்கும் பொம்மை செய்யும் திறனைப் பார்த்து வியந்த மெக்சிக ஓவியர் டீகோ ரிவேராவின் மகள் குவாடலுப் ரிவேரா, உள்ளூர்ப் பெண்களைப் பயிற்றுவித்து தொழிலாக மாற்றினார்.
மரியா பொம்மைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளதாலும் எளிமையான பொருட்களால் உருவாக்கப்படுவதாலும் அதைத் தயாரிக்க போட்டி உள்ளது. ஆனால், மெக்சிக ஆதிவாசி மக்களின் அடையாளம் கொண்ட அசல் மரியாக்களின் அழகு தனித்துவம் வாய்ந்தது. ஓடோமி பெண் பொம்மைக் கலைஞர்கள் தங்கள் கையிலும் தையல் இயந்திரத்திலும் இந்தப் பொம்மைகளைத் தயாரிக்கின்றனர்.
வழக்கமான துணி பொம்மைகளைப்போல, பஞ்சால் நிரப்பப்படுவதில்லை. கனத்த மஸ்லின் துணியைச் சுற்றி, மடக்கி, தைத்து மரியா உருவாக்கப்படுகிறாள். சிவப்பு, கறுப்பு என அடர்வண்ணங்களே இந்தப் பொம்மைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மரியா பொம்மைகளின் பிறந்த இடமான அமேல்காவில் தற்போது 3 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தப் பொம்மைக் கலையையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து பொம்மை செய்வதைக் கற்றுக்கொள்கின்றனர். மெக்சிகோவின் வரலாற்றிலேயே கையால் செய்யும் பொம்மைகளுக்கான முதல் அருங்காட்சியகமும் அமேல்காவில் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கைவினைப் பொம்மைகள் திருவிழாவையும் அமேல்கோ நகரம் நடத்துகிறது.
20-ம் நூற்றாண்டில் மனிதர்கள் அடைந்த மாற்றங்களை இந்த மரியாக்களும் பிரதிபலிக்கின்றன. மரியாவின் சட்டைகளில் பட்டன்களும் காணப்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உலகைச் சுற்றத் தொடங்கிய மரியா அதன் அனுபவங்கள், கலாசாரங்கள், நிறங்களையும் பிரதிபலிக்கிறாள்.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT