Last Updated : 07 Mar, 2018 11:23 AM

 

Published : 07 Mar 2018 11:23 AM
Last Updated : 07 Mar 2018 11:23 AM

பொம்மைகளின் கதை: அன்பைச் சொல்லும் க்யூபி

ழகிய நீலக் கண்கள், புஷ்டியான உடல், பெரிய தொப்பை, தலையில் கொஞ்சம் முடி என்று இருக்கும் க்யூபி பொம்மையைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்துவிடும். தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளையும் பெண்களையும் நேசத்தோடு ஈர்க்கும் பொம்மை க்யூபி.

ஆண்டு 1913. உலகப் போருக்காக நாடுகள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், அன்பைத் தெரிவிக்கும் க்யூபிட் தேவதையின் சாயலில் அமெரிக்கக் குழந்தைகளைக் கவர்ந்த பொம்மை இது. சித்திரக்கலைஞர் ரோஸ் ஓநீலின் கனவில் ஒரு நாள் வந்த வடிவம்தான் க்யூபி. நாயின் குட்டியை பப்பி என்று சொல்வதுபோல, க்யூபிட் தேவதையின் குழந்தை வடிவம் க்யூபி என்றார் ஓநீல்.

Kewpie_votes_for_women_postcard.jpgright

க்யூபி பொம்மைகள் அமெரிக்காவில் புகழ்பெற்றாலும் ஜெர்மனியில் உள்ள 40 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன.

இன்றைக்கு பார்பி பொம்மைகளுக்கு இருக்கும் புகழை அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் க்யூபி பெற்றிருந்தது. சில சென்ட்களுக்கு அப்போது விற்கப்பட்ட க்யூபி பொம்மைகளைச் சேகரித்து வைத்திருந்தால், இப்போது அந்தப் பொம்மைகளின் மதிப்பு லட்சக்கணக்கான டாலர்களாகும்.

1911-ம் ஆண்டு தனது படங்களின் அடிப்படையில் ஒரு பொம்மையைத் தயாரிக்க முடிவு செய்தார் ரோஸ் ஓநீல். அதற்காக ஒரு சிற்பியைத் தேடினார். ப்ராட் கலைப் பயிலகத்திலுள்ள மாணவரான ஜோசப் கல்லுஸ், வெண் பளிங்கில் முதல் க்யூபி பொம்மையைச் செய்தார்.

அதற்குப் பிறகு செல்லுலாய்டில் பொம்மைகள் உருவாக்கப்பட்டன. 1950-களில் இந்தியாவிலும் செல்லுலாய்ட் பொம்மைகள் அதிகம் காணப்பட்டன. ஏழைக் குடும்பங்களும் கலைப்பொருட்களை வாங்க வேண்டும் என்ற மனநிலை நிலவிய காலகட்டத்தைச் சேர்ந்தவர் ரோஸ் ஓநீல். அதனால்தான் பணக்காரக் குழந்தைகளைப்போலவே ஏழைக் குழந்தைகளும் வாங்க முடிகிற விலையில் க்யூபி பொம்மைகளை உருவாக்கினார்.

7chsuj_doll1.jpg ரோஸ் ஓநீல்

ரோஸ் ஓநீலின் திருமண வாழ்க்கை முறிந்து, துயரத்தில் இருந்தபோது, உடைந்த இதயத்தை இணைக்கும் க்யூபி பொம்மையைக் கனவில் கண்டு வடிவமைத்தார். அந்தப் பொம்மை மூலமே கோடீஸ்வர சித்திரக்கலைஞராக மாறினார். இன்றும் உலகம் முழுவதும் புகழுடன் திகழ்கிறார்.

அந்தக் காலத்தில் அமெரிக்கப் பெண்களின் போராட்டங்களிலும் தனது க்யூபிகளைப் பங்குபெற வைத்தார் ஓநீல். தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குவதற்கான பிரச்சாரப் போஸ்டர்களில் அவர் வடிவமைத்த க்யூபி கார்டூன்கள் இடம்பெற்றன.

உருவாக்கியவரின் இதயத்தைச் சரிசெய்த க்யூபி, நமது இதயங்களையும் அன்பால் இணைக்கக்கூடியதே!

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x