Published : 10 Sep 2014 12:27 PM
Last Updated : 10 Sep 2014 12:27 PM
கலங்கரை விளக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? கடலோரப் பகுதிகளிலும், துறைமுகத்துக்கு அருகில் உள்ள குழந்தைகளும் நிச்சயமாகப் பார்த்திருப்பார்கள்.
கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குப் போய் கடலின் அழகை ரசித்தும் இருப்பார்கள். சரி, உலகிலேயே மிகவும் பழமையான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது தெரியுமா? ஸ்காட்லாந்தில்! அதுவும் இந்தக் கலங்கரை விளக்கம் கடலுக்குளேயே உள்ளது.
அங்கஸ் என்ற கடற்கரைப் பகுதியில் உள்ள இந்தக் கலங்கரை விளக்கத்தின் பெயர் ‘பெல் ராக் லைட் ஹவுஸ்’.
1807-ம் ஆண்டுக்கும் 1810-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்னால், 1813-ம் ஆண்டு இது செயல்படத் தொடங்கியது.
ஆர்போர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காகத்தான் அந்தக் காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையே இதை அமைத்திருக்கிறார்கள்.
35 மீட்டர் உயரமுள்ள இந்தக் கலங்கரை விளக்கத்தின் ஒளியைக் கடலில் 56 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே பார்க்க முடியுமாம்.
எந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்தக் காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கம் உலக அதிசயத்தில் ஒன்றாகவும் இடம் பிடித்துள்ளது. ஆமாம், உலகில் தொழில் ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அதிசயங்களில் இதுவும் ஒன்று.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளுக்கு நடுவே இன்னும் கம்பீரமாக நிற்கும் இந்தக் கலங்கரை விளக்கம் தற்போதும் அப்படியே உள்ளது. ஆனால், இதை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் அருங்காட்சியமாக மாற்றிவிட்டார்கள்.
ஸ்காட்லாந்துக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் மறக்காமல் சென்று பார்க்கும் இடங்களில் பெல் ராக் லைட் ஹவுஸ் முதலிடம் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT