Published : 29 May 2019 09:44 AM
Last Updated : 29 May 2019 09:44 AM

சாதனை: “உலகக் கோப்பை வாங்கிட்டோம்!”

நாளை தொடங்க இருக்கும் ‘உலகக் கோப்பை கிரிக்கெட்’ போட்டிகளின் இறுதிப் போட்டி, ’லார்ட்ஸ்’ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற மைதானம்.  ஒரு முறையாவது தங்கள் வாழ்நாளில் அந்த மைதானத்தில் விளையாடிவிட மாட்டோமா என்று கிரிக்கெட் வீரர்களை ஏங்க வைப்பது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்த இந்த மைதானத்தில், சென்னையைச் சேர்ந்த 4 சிறுவர்கள் விளையாடியதோடு, இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று சாதனையும் படைத்திருக்கிறார்கள்!

சாலையோரச் சிறுவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, சமீபத்தில் லண்டனில்  நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், மொரிஷியஸ், தான்சானியா, வட இந்திய, தென்னிந்திய அணிகள் விளையாடின. தென்னிந்திய அணியில் கருணாலயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சூரியகுமார், பால்ராஜ், நாகலட்சுமி, மோனிஷா நால்வரும் இடம்பெற்றனர்.

கேம்பிரிட்ஜ் நகரில் ஆரம்பக்கட்டப் போட்டிகள் நடந்தன. இதில் இங்கிலாந்து, நேபாளம், வெஸ்ட் இண்டீஸ், மொரிஷியஸ் அணிகளுடன் தென்னிந்திய அணி விளையாடியது. மூன்று அணிகளை வென்று, இங்கிலாந்து அணியிடம் தோற்றுப் போனது. அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் நுழைந்தது.

“முதல் கட்டப் போட்டிகளில் எடுத்த புள்ளிகளே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முக்கியக் காரணமாக இருந்தது. இந்தப் போட்டிக்காக மற்ற நாட்டு அணிகள் நான்கு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்திருந்தன. நாங்கள் எட்டு மாதங்களே பயிற்சி செய்திருந்தோம். ஆனாலும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம்.

முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி எங்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்துச் சொன்னார். இந்தப் போட்டியில் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என்று தாம் நம்புவதாகக் கூறினார். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொன்னபடி கோப்பையைப் பெற வேண்டும் என்று உறுதியோடும் நம்பிக்கையோடும் களத்தில் இறங்கினோம்” என்கிறார் கேப்டன் பால்ராஜ்.

“இங்கிலாந்துடன் மோதுவதால் ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். தான்சானியா வீரர்களும் நேபாள வீரர்களும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.

கிரிக்கெட்டை உருவாக்கிய இங்கிலாந்தில், அதுவும் 205 ஆண்டுகள் பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் நிற்பதே மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் மண்ணில், அவர்களை வென்றோம். மைதானம் முழுக்க உற்சாகக் குரல்கள். ஏதோ வேறு உலகத்தில் இருப்பதுபோல் உணர்ந்தோம். வாழ்நாள் முழுவதும் அந்தத் தருணத்தை எங்களால் மறக்க முடியாது” என்கிறார் சூரியகுமார்.

“லார்ட்ஸ் மைதானத்தில் 2002-ம் ஆண்டு இந்தியா ஜெயித்தபோது, கேப்டன் காங்குலி ஜெர்சியைக் கழற்றி சுற்றியபடியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நினைவுக்கு வந்தது. பரவசமாக இருந்தது.

அந்த மைதானத்தில் இதுவரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 2011-ம் ஆண்டு ஜூன் மாதம்  இலங்கை வீரர் தில்சான், இங்கே சதமடித்தார்.

அவர் எந்தப் பகுதியிலிருந்து போட்டிக்குச் சென்றார் என்பதை விசாரித்து, தானும் அதே பகுதியிலிருந்து மைதானத்துக்குள் நுழைந்து, அதே ஆண்டு ஜூலை மாதம் ராகுல் டிராவிட் சதம் அடித்தார் என்றார்கள். நாங்களும் இறுதிப் போட்டிக்கு டிராவிட் வந்த  பகுதியிலிருந்து மைதானத்துக்குள் நுழைந்தோம். இறுதியில் வென்றோம்” என்று சிரிக்கிறார் நாகலட்சுமி.

இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஏழு ஓவர்களுக்கு 42 ரன்களை எடுத்தது. தென்னிந்திய அணி 5.2 ஓவர்களில் இலக்கை எட்டி, சாலையோரச் சிறுவர்களுக்கான முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி பனேசர் கோப்பையை வழங்கினார்.

“முதல் போட்டியில் யாரிடம் தோற்றோமோ, அவர்களை இறுதிப் போட்டியில் தோற்கடித்து கோப்பையை வென்றது நிறைவாக இருந்தது. ‘கமான் சவுத் இந்தியா’ என்ற குரல்கள் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

பரிசளிப்பு விழாவுக்குப் பிறகு, சாலையோரச் சிறுவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. சாலையோரத்தில் வாழும் எங்களுக்கு அரசு பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க முன்வர வேண்டும் என்று பேசினேன்.

சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் பெரிய மாலைகளுடன் பட்டாசு வெடித்து, மலர்கள் தூவி, ஆடல் பாடலுடன் வரவேற்றதை மறக்க முடியாது. விமானம், லண்டன், லார்ட்ஸ் மைதானம், வெற்றிக் கோப்பை எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அனுபவங்கள்.

நாங்கள் சாலையோரத்தில் வசிக்கிறோம். மழையிலும் வெயிலிலும் கஷ்டப்படுகிறோம். வீடுதான் எல்லோருக்கும் பாதுகாப்பு. ஆனால், எங்களை எப்போது விரட்டுவார்கள் என்றே தெரியாது. தினம் தினம் போராட்டத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும் சக மனிதர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது மரியாதை ஒன்றைத்தான்” என்கிறார் மோனிஷா.

கல்லூரியில் சேரக் காத்திருக்கும் சூரியக்குமாரும் நாகலட்சுமியும் சென்னை கருணாலயா விடுதியில் தங்கிப் படித்துவருகிறார்கள். பாரிமுனை சாலையோரத்தில் குடும்பத்தோடு வசிக்கும் பால்ராஜும் வால்டாக்ஸ் சாலையோரத்தில் தாயோடு வசிக்கும் மோனிஷாவும் பள்ளி  மாணவர்கள்.

எதிர்காலத்தில் வழக்கறிஞர், ராணுவ வீரர், சமூக சேவகர் என்றெல்லாம் பல்வேறு கனவுகள் இவர்களிடம் உள்ளன. அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்று இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்களுக்கு ஓர் அடையாளம் கிடைத்திருக்கிறது. இவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது அரசும் சமூகமும் கொடுக்கும் ஆதரவிலும் அங்கீகாரத்திலும்தான் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x