Last Updated : 15 May, 2019 11:19 AM

 

Published : 15 May 2019 11:19 AM
Last Updated : 15 May 2019 11:19 AM

திறந்திடு சீஸேம் 33: ரைடன் கோப்பைகள்

1954. ஈரானின் தென்மேற்குப் பகுதியில் ஃப்ளெட்செர் ஃபண்ட் என்பவர் அந்தப் பொருளைக் கண்டெடுத்தார். அது பளபளவென மின்னியது. ஆம், சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதான். மிகவும் அழகான கலைப்பொருளாகத் தெரிந்தது. வாய்பிளந்து கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் முகம்.

கூரிய நகங்களுடன் முன்னங்கால்கள். சிங்கத்தின் உடல் முழுமையாக இல்லாமல், ஒரு கூம்பு வடிவக் கோப்பையாக மேல்நோக்கி விரிவதாக அந்தக் கலைப்பொருள் மிளிர்ந்தது. மேற்கொண்டு அதை ஆய்வு செய்தபோது தன் கையில் கிடைத்திருப்பது மிகவும் பழமையான ‘ரைடன்’ என்று ஃப்ளெட்சர் புரிந்துகொண்டார்.

‘ரைடன்’ (Rhyton) என்றால்?

பானங்கள் அருந்தப் பயன்படும் கூம்பு வடிவக் கோப்பை என்று சொல்லலாம். ஐரோப்பியக் கண்டமும் ஆசியக் கண்டமும் சேர்ந்ததாக அழைக்கப்படும் யுரேசியாவில் இந்த வகைக் கோப்பைகள் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக பால்கன் நாடுகளிலும், ஈரான் என்றழைக்கப்படும் அன்றைய பெர்சியாவிலும் இந்த வகைக் கோப்பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீண்ட கொம்புகளை, பானங்கள் அருந்தும் கோப்பைகளாக உபயோகிக்கும் முறை பண்டைக் காலத்தில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கலை அம்சம் நிறைந்த ‘ரைடன்’ கோப்பைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. Rhein என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு ‘வழிந்தோடும்’ என்று பொருள். பெரும்பாலான ரைடன்களில் விலங்குகளின் முகமே பிரதானம்.

குறிப்பாக ஆடு, மாடு, மான், காட்டுப் பன்றி, சிங்கம், சிறுத்தை, குதிரை, நாய், பூனை போன்ற விலங்குகளின் முகத்தோடு ரைடன்களை வடிவமைத்திருக்கிறார்கள். சில ரைடன்களில் சிங்கம், குதிரை போன்ற விலங்குகளையும் கொம்புகளோடு உருவாக்கி இருக்கிறார்கள். தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களால் மட்டுமன்றி மரத்தாலும் கற்களாலும் இந்த ரைடன்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

 மட்பாண்டம்போல மண்ணைச் சுட்டும் தயாரித்திருக்கிறார்கள். விலங்குகளின் வாய்ப் பகுதியில், மனிதர்கள் வாய்வைத்துப் பானங்களைப் பருகும்படி துளையிருக்குமாறு சில ரைடன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல ரைடன்களில் துளை எதுவும் கிடையாது. கோப்பையின் மேற்பகுதியில்தான் வாய் வைத்துப் பருக வேண்டும். பெரும்பாலான ரைடன்களை, பானங்கள் நிரப்பியபின் கீழே வைக்க முடியாது. ஏனெனில் தட்டையான அடிப்பாகம் இன்றித்தான் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

சரி, ஃப்ளெட்சர் கண்டெடுத்த ரைடனுக்கு வருவோம். அது, முதல் பாரசீகப் பேரரசு என்று அழைக்கப்படும் அகாமனிசியப் பேரரசின் காலத்தைச் சார்ந்தது. அதாவது கி.மு.

550-க்கும் கி.மு. 330-க்கும் இடைப்பட்டது. அதன் வயது சுமார் 2,500 ஆண்டுகள். அகாமனிசியப் பேரரசின் காலத்தில்தாம், ரைடன்களில் கோப்பைப் பகுதி வளைந்ததுபோல் அல்லாமல், 90 டிகிரியில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுன. தவிர, ரைடன்களைத் தரையில் நிற்க வைக்க வசதியாகத் தட்டையான அடிப்பாகம் கொண்டதாகவும் தயாரித்தார்கள்.

இந்தச் சிங்க முக ரைடன் 17 செ.மீ. உயரம் கொண்டது. பல்வேறு பாகங்கள் தனித்தனியே செதுக்கப்பட்டு, ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், அதெல்லாம் வெளியில் தெரியாத அளவுக்கு செய்நேர்த்தி கொண்டதாக உருவாக்கப் பட்டிருந்தது.

இப்போது சிங்க முக ரைடன், நியூயார்க் நகரின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உலகில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான ரைடன்களில் இதுவும் ஒன்று. கி.மு. 500-ஐ சேர்ந்த மற்றொரு சிங்க முக ரைடன் ஒன்று ஈரானின் தேசிய அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தங்கச் சிங்கத்துக்கு சிறகுகள் உண்டு.

உலகின் மிகப் பழமையான ரைடன் அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் அருங்காட்சியகத்தில் காணக் கிடைக்கிறது. மண்பானை உருவமும், கழுத்துப் பகுதியில் சிறு குதிரையின் வடிவமும் கொண்ட ரைடன் இது. ஈரானின் அம்லேஷ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்பாண்ட ரைடன், கி.மு. 11 –         கி.மு. 9-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ரைடன் அது.

பண்டைய கிரேக்கத்திலும் இந்த ரைடன்களின் புழக்கம் அதிகம் இருந்திருக்கிறது. பல்கேரியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு பழமையான ரைடன் வைக்கப்பட்டிருக்கிறது. அது மாட்டின் முகம் கொண்ட வெள்ளி ரைடன். வேறு சிற்பங்களும் செதுக்கப்பட்ட அந்தக் கலைநயம் வாய்ந்த ரைடன், கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கிரேக்கத் தலைமைக் கடவுளான ஜீயஸின் மகன் டயோனிஸஸ். மிகவும் ஜாலியான பேர்வழியான இவர்தான் திராட்சைகளின் கடவுள் என்றும், திராட்சை ரசத்தைக் கண்டுபிடித்தவர் என்றும் கிரேக்கர்களால் கொண்டாடப்பட்டார். ஆகவே டயோனிஸஸின் ஓவியங்கள், சிலைகள் அனைத்திலுமே அவர் கையில் திராட்சையோ அல்லது ரைடனோ இருப்பதுபோலவே அமைந்திருக்கும். பண்டைய கிரேக்கத்தில் வடிவமைக்கப்பட்ட ரைடன்கள் பலவற்றிலும் டயோனிஸஸின் உருவமோ, ஓவியமோ இடம்பெற்றிருப் பதையும் பார்க்கலாம்.

கனடாவின் Tamoikin அருங்காட்சியகத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரைடன் ஒன்று உள்ளது. தங்கத்தாலும் வெண்கலத்தாலும் உருவாக்கப்பட்ட இந்த ரைடனில் விலங்குகளின் முகத்துக்குப் பதிலாக டயோனிஸஸின் முகம் செதுக்கப் பட்டிருப்பது அபூர்வமானது.

இதுவரை ஈரானில்தான் அதிக அளவில் ரைடன்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. பண்டைய ஈரானின் பார்த்தியப் பேரரசில் யானைத் தந்தத்தில் ரைடன்களைச் செதுக்கியிருக்கிறார்கள். கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தந்தத்தினாலான ரைடன்கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மனித முகம் கொண்ட ரைடன்கள் சிலவும் ஆங்காங்கே அரிதாகக் கிடைத்திருக்கின்றன.

சீனாவில் ஒரு சில ரைடன்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது கனடாவின் ராயல் ஆண்டரியோ அருங்காட்சியகத்தில் சீன ரைடன் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அது பீங்கானாலானாது. முறைத்துப் பார்க்கும் எருது ஒன்றின் முகத்துடன் அகலமான கோப்பையையும் கொண்டது. இந்தச் சீன ரைடன், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த தாங் பேரரசு காலத்தைச் சேர்ந்தது.

சரி, அந்தக் காலத்தில் பாரசீகர்களும் கிரேக்கர்களும் எதற்கு இவ்வளவு அழகழகான, கலைநயமிக்க ரைடன்களை உருவாக்கினார்கள்?

இந்த ரைடன்களை திராட்சை ரசம் உள்ளிட்ட பானங்களை அருந்தப் பயன்படுத்தினார்கள். ரைடன்களில் பானங்களை நிரப்பிப் பூஜைகளில், சடங்குகளில் பயன்படுத்தினார்கள். பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் ரத்தமும் ரைடன்களில் நிரப்பப்பட்டன. புனித நீரை ரைடன்களில் ஊற்றி அபிஷேகம் செய்யும் வழக்கமும் இருந்தது.

தவிர, ரைடன்களில் ஊற்றப்பட்ட பானத்தை ஒரு மிடறு அருந்தினால் ‘சூப்பர் பவர்’ கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆம், அபூர்வ சக்திகள் பெற ரைடன்களில் பானங்களை ஊற்றி ஊற்றிக் குடித்திருக்கிறார்கள். இந்த விஷயம் நம் காலத்து சூப்பர் ஹீரோக்களுக்குத் தெரியுமா?

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.comசீன ரைடன்சிங்க முக ரைடன்கிரேக்க ரைடன்பழங்கால ரைடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x