Published : 08 May 2019 10:40 AM
Last Updated : 08 May 2019 10:40 AM
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்தோடு காத்திருந்த 15 ஆகஸ்ட் 1947 நெருங்கிக்கொண்டிருந்தது. ரொமிலாவோ உறக்கம் இல்லாமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தார். நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. ஒருவரிடமும் இயல்பாகப் பேச முடியவில்லை.
கதைப் புத்தகம் கூட விறுவிறுவென்று போக மாட்டேன் என்கிறது. பயம். கவலை. படபடப்பு. பரபரப்பு. இத்தனை பெரிய பொறுப்பை என்னிடம் ஏன் கொடுத்திருக்கிறார்கள்? என்ன செய்யப் போகிறேன்? கடைசியாக ஒருமுறை ஆசிரியரிடம் சென்று கெஞ்சியும் பார்த்துவிட்டார்.
“இதென்ன ரொமிலா, சின்னக் குழந்தை மாதிரி இப்படியா அடம் பிடிப்பாய்? நீதானே மாணவர் தலைவர். நீதானே பொறுப்புடன் இதைச் செய்து முடிக்க வேண்டும்? போ, கடகடவென்று வேலையைப் பார்” என்று முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார் ஆசிரியர்.
மொத்தம் மூன்று வேலைகளைச் செய்து முடித்தாக வேண்டும். புதிய இந்தியா மலர்வதைக் குறிக்கும் வகையில் ஒரு செடியை நடவேண்டும். இது சுலபம்தான், செய்துவிடலாம். இரண்டாவது, பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியைக் கீழே இறக்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும். உணர்ச்சிபூர்வமான தருணமாக இருக்கப் போகிறது என்றாலும் செய்துவிடலாம். மூன்றாவது வேலை இருக்கிறதே, அதை நினைத்தால்தான் உச்சி முதல் உள்ளங்கால்வரை நடுங்குகிறது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அலைகடலென்று திரண்டு நிற்கும் கூட்டத்துக்கு மத்தியில் மேடையேறி, தொண்டையைச் செருமிக்கொண்டு சிற்றுரை ஆற்ற வேண்டுமாம்! காபிகூடச் சரியாக ஆற்றத் தெரியாத எனக்கு, இப்படி ஒரு சோதனையா?
ரொமிலாவின் தவிப்புக்குக் காரணம் இது மட்டுமே அல்ல. அந்தப் பள்ளியிலிருந்து விடைபெற வேண்டிய நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பர்களைப் பிரிய வேண்டும், ஆசிரியர்களைப் பிரிய வேண்டும். புனேவையும் பிரிய வேண்டி வரலாம். இதெல்லாம் புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு முறை பிரிவு நெருங்கும்போதும் இப்படிதான் வருத்தமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் இந்த அப்பாதான் காரணம். திடீரென்று ஒரு நாள் மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்துவிடுவார். என்னப்பா ஊர் சுற்றப் போகிறோமா என்றால், இல்லை ரொமிலா வீட்டைக் காலி பண்ணப் போகிறோம்.
அடுத்த வாரம் ரஸ்பாக்கில் புதிய பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்பார். சரி என்று அங்கே போவோம். சில மாதங்கள் கழிந்திருக்கும். மீண்டும் அப்பா வந்து மூட்டைக் கட்ட ஆரம்பிப்பார். ரொமிலா, கவலைப்படாதே. கோஹாத் என்றோர் இடம். பிரமாதமாக இருக்குமாம். பக்கத்தில்தான் இருக்கிறது. போவோமா?
ஒரு நாள் இமயமலைக்கு அருகில் இருப்போம். இன்னொரு நாள் பள்ளத்தாக்கில். ஐந்தாம் வகுப்பு எங்கே படித்தாய் ரொமிலா என்று யாராவது கேட்டால் சட்டென்று பதில் சொல்லிவிட முடியாது. முதல் பகுதி அங்கே, இரண்டாவது பகுதி இங்கே, இறுதிப் பகுதியில் மீண்டும் முதலிடத்துக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம் என்று மார்கோ போலோவை மிஞ்சும் வகையில் ஒரு பயண வரலாற்றை விவரிக்க வேண்டியிருக்கும்.
சில நேரம் மூட்டைகளைப் பிரித்துப் புத்தகங்களை எடுத்து அலமாரியில் அடுக்குவதற்குள் அப்பா வந்து, ‘லண்டிகோட்டால்’ என்பார். அது ஊரா, சாப்பிடும் பொருளா என்று விழிப்பதற்குள் அந்த வீட்டைக் காலி செய்திருப்போம். மீண்டும் புதிய பள்ளி. புதிய இடம். புதிய வீடு.
”போங்கப்பா, நீங்க வீட்டை மாற்றும் வேகத்துக்கு என்னால் நண்பர்களை மாற்ற முடியவில்லையே” என்று கோபப்பட்டால், என்ன செய்ய ரொமிலா? ராணுவ மருத்துவர் என்றால் அப்படிதான். ராணுவம் எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் நானும் போயாக வேண்டுமே என்பார்.
வீடு மாறுவது, இடம் மாறுவது சரி. இப்போது இந்தியாவே மாறப் போகிறது என்கிறார்களே? ஆகஸ்ட் 15-க்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது? இது ரொமிலாவின் அடுத்த கவலை. பிரிட்டிஷ் ஆட்சியோடு சேர்ந்து ஆதிக்கமும் அடிமைத்தனமும் காணாமல் போய்விடுமா? இனி அனைவரும் அச்சமின்றி பேசலாமா? அச்சமின்றி வாழலாமா? புதிய இந்தியா நம் அனைவருடைய இந்தியாவாக மலருமா?
நகரம், கிராமம், மலை, பள்ளத்தாக்கு, பாலைவனம் என்று இந்திய நிலப்பரப்பில் வாழும் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்களா? மத வேறுபாடு, சாதி வேறுபாடு மறையுமா? எல்லாப் பண்பாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் எல்லா நம்பிக்கைகளுக்கும் எல்லாக் குரல்களுக்கும் இடம் கொடுக்கப்படுமா?
கொஞ்சம் பொறுங்கள். இந்தியா பல மொழிகளை, பல பண்பாடுகளை, பல நம்பிக்கைகளைக் கொண்ட நாடு என்பது எனக்கு எப்படித் தெரியும்? புத்தகம் படித்தா தெரிந்துகொண்டேன்? முன்பின் அறிமுகமில்லாத பல புதிய இடங்களுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், ஒவ்வோர் இடத்திலும் புதிய நண்பர்கள் கிடைக்காமல் போயிருந்தால், புதிய மக்களைச் சந்திக்காமல் விட்டிருந்தால், புதிய அனுபவங்கள் கிடைக்காமல் போயிருந்தால் இந்தியாவை நான் புரிந்துகொண்டிருக்க முடியுமா? நியாயப்படி அப்பாவுக்கு நான் நன்றி அல்லவா சொல்ல வேண்டும்?
தவிரவும், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசு என்றாரே ஆசிரியர்? நான் ஏன் என்னென்னவோ யோசிக்க வேண்டும்? புதிய இந்தியா குறித்தும் எனக்குள்ள புதிய கனவுகள் குறித்தும் யோசிப்பதும் பேசுவதும் அல்லவா இப்போது பொருத்தமாக இருக்கும்! பயம், அச்சம், கலக்கம், தவிப்பு அனைத்தும் மறைந்தன. எழுந்து உட்கார்ந்து கடகடவென்று தன் உரையை எழுத ஆரம்பித்தார்.அதற்குப் பிறகு ஒரு கவலைதான் பாக்கியிருந்தது. இந்த ஆகஸ்ட் 15 எப்போதுதான் வரப் போகிறதோ?
(ரொமிலா தாப்பர் - புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT