Published : 10 Apr 2019 12:39 PM
Last Updated : 10 Apr 2019 12:39 PM
அந்தக் காலத்தில் வாழ்ந்த சீன மன்னர்களும் அவரது குடும்பத்தினரும், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை குறித்து மிகவும் கவலைப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு இருக்கும்போது, வாழ்ந்த சுகபோக வாழ்க்கைக்கு, இறந்த பின்பு இம்மியளவும் பங்கம் வந்துவிடக் கூடாது என்று நினைத்திருக்கிறார்கள்.
எனவே சீன மன்னர்கள், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள் எல்லாம் உயிருடன் இருக்கும்போதே, தங்கள் மேற்பார்வையிலேயே தக்க வசதிகளுடன் தங்களுக்கான கல்லறைகளைக் கட்டிக்கொண்டார்கள். அவற்றைக் ‘கல்லறை’ என்று சொல்லாமல் ‘இறப்புக்குப் பிறகு வாழும் அரண்மனை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொன்றுமே பிரம்மாண்டமானது.
உதாரணத்துக்கு, சீனாவின் சாங் பேரரசை ஆண்ட பல்வேறு மன்னர்களின் கல்லறைகளை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு கல்லறையும் சில ஏக்கர் பரப்பளவு கொண்டது. நிலத்துக்கு மேலாக ஓர் அரண்மனை, நிலத்துக்குள் ஒரு பாதாள அரண்மனை என்று உருவாக்கப்பட்டவை.
பூமிக்கு மேலும் கீழும் தலா பத்தடி உயரத்தில் எழுப்பப்பட்ட வலிமையான சுவர்கள். நான்கு பக்கங்களிலும் நான்கு ‘தெய்விக’ வாசல்கள். அவற்றைப் பாதுகாக்கும் கற்சிலை சிங்கங்கள். தீய சக்திகளைச் சிங்கங்கள் விரட்டியடிக்கின்றன என்பது சீனர்களது நம்பிக்கை. அந்தப் பகுதி எங்கும் பைன் மரங்கள். அந்த மரங்கள் ஆயுளை அதிகரிக்கும் சக்தியுடையவை என்று கருதப்பட்டது.
அந்தப் பாதாள உலகில் மன்னர் நகர்வலம், நடைப்பயிற்சி செல்வதற்கு எல்லாம் தனித்தனிப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிலத்தினுள் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் நீல நிறச் செங்கற்களால் மன்னருக்கான கல்லறை கட்டப்பட்டிருந்தது. அருகிலேயே அரசிக்கான கல்லறை. மன்னர் குடும்பத்தினருக்குத் தனியே. மந்திரிகளுக்குத் தனியே. அழுகி மக்கிப் போகும் உடலோடு சேர்த்து ஏராளமான செல்வத்தைச் சேர்த்துதான் புதைத்தார்கள்.
விலைமதிப்பு மிக்க இந்தக் கல்லறைகளைக் கொள்ளையர்கள் நேசித்தார்கள். ‘ஒரு கல்லறையை உருப்படியாகக் கொள்ளையடித்தால், வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம். உல்லாசமாக வாழலாம்’ என்று திட்டம் போட்டுக் கொள்ளையடித்தார்கள்.
அகழாய்வு செய்வது என்றால் நிறுத்தி நிதானமாகத் தோண்டலாம்; இவர்கள் கொள்ளையர்கள் அல்லவா, அத்தனை ஏக்கர் பரப்பளவில், மன்னருடைய உடல் எங்கே புதைக்கப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டு, நேரம் பார்த்து தோண்டி, இறங்கி, செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்குள்... அப்பப்பா!
மன்னர்களுக்கும் இந்தக் கொள்ளையர்கள்தாம் பெரிய சவாலாக இருந்தார்கள். பார்த்துப் பார்த்துச் செதுக்கும் கல்லறையை, யாரோ கொள்ளையர்கள் வந்து தோண்டி கொள்ளையடித்து விட்டுப் போனால், அது எவ்வளவு பெரிய அவமானம். மன்னரது ஒட்டுமொத்த புகழையே சிதைக்கும் விஷயமல்லவா.
தவிர, அவர்களது நம்பிக்கையின்படி, இறப்புக்குப் பிறகான வாழ்க்கையும் பாதிக்கப்படுமே. எனவேதான் சீன மன்னர்கள் தங்கள் கல்லறையை ‘ஏகப்பட்ட ரகசியங்களுடன்’ யாருமே எளிதில் அணுக முடியாதபடி அமைத்துக்கொண்டார்கள்.
1974. சீனாவின் சென்ஷி மாகாணத்தில் ஷியான் நகருக்கு 30 கி.மீ. வெளியே, யாங் ஷிஃபா என்பவரும் அவரது சகோதரர்களும் கிணறு வெட்ட நிலத்தைத் தோண்டினார்கள். அந்தப் பகுதிக்குச் சற்று தள்ளிதான் மன்னர் சின் ஸி ஹுவாங்கின் (Qin shi huang) கல்லறை அமைந்திருந்தது.
சின் ஸி ஹுவாங், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனாவின் சின் மாகாணத்தை ஆட்சி செய்தவர். சிதறிக் கிடந்த சீன மாகாணங்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து பேரரசாக உருவாக்கியவரும் இவரே. சீனாவின் முதல் பேரரசராக கி.மு. 221-லிருந்து கி.மு. 210 வரை ஆட்சி செய்தார். சீனப் பெருஞ்சுவர் இவர் காலத்தில்தான் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
அந்த விவசாயிகள், நிலத்தைத் தோண்டத் தோண்ட சில மீட்டர்கள் ஆழத்தில், சுட்ட செங்கற்கள் கிடைத்தன. சில பழைய அம்புகள் கிடைத்தன. சுட்ட செங்கற்களை ஊர் மக்கள் தலைக்கு வைத்துப் படுக்க எடுத்துச் சென்றார்கள். பழைய அம்புகளை அந்தச் சகோதரர்கள் ஓரிடத்தில் கொடுத்து, காசாக்கிக்கொண்டார்கள். விஷயம் அங்கும் இங்கும் பரவியது. தொல்பொருள் துறையினர் அந்த அம்புகளையும் சுட்ட செங்கற்களை யும் பார்த்துவிட்டு, தேடி வந்தார்கள்.
அந்த இடத்தைக் கவனமாகத் தோண்ட ஆரம்பித்தார்கள். சில அடிகள் ஆழத்தில் டெரகோட்டா (மண்ணால் செய்யப்பட்ட) மனித உருவம் ஒன்று கிடைத்தது. அருகிலேயே இன்னும் சில உருவங்கள் கிடைக்கத் தொடங்கின. தோண்டும் பணி தொடர்ந்தது. சுமார் 8,000 டெரகோட்டா மனிதர்களோடு, பல வரலாற்று உண்மைகளும் வெளிவந்தன.
மன்னர் சின் ஸி ஹுவாங்குக்குத் தன் கல்லறை குறித்த கனவுகள் சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டன. தனது பதிமூன்றாவது வயதில் சின் மாகாணத்தின் மன்னராகப் பொறுப்பேற்ற சின் ஸி ஹுவாங், அப்போது முதலே தனக்கான, பிரம் மாண்டமான கல்லறையைக் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
நிபுணர்கள் குழு மாய்ந்து மாய்ந்து திட்டம் போட்டது. நிலத்தின் மேல் மன்னர் எப்படிப்பட்ட வசதிகளை அனுபவிக்கிறாரோ அவை எல்லாம் நிலத்தின்கீழ் அமைக்கப்படும் அரண்மனையிலும் இருக்கும்படியாகக் கட்டமைத்தார்கள். மன்னர் யார் யாருடன் வாழ்கிறாரோ, யாரெல்லாம் மன்னரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே நிலத்துக்கு அடியிலும் தம் சேவைகளைத் தொடரும்படியாக வசதி செய்தார்கள்.
அது எப்படி? மன்னரைச் சார்ந்தவர்கள், மந்திரிகள், படைவீரர்கள் எல்லோருமே அவர்களது உருவத்திலேயே டெரகோட்டா பொம்மைகளாக உருவாக்கப்பட்டனர். அவர்கள் என்ன உயரத்தில் இருக்கிறார்களோ, அதே உயரத்திலேயே அவர்களது பொம்மைகளும் உருவாக்கப்பட்டன. அதாவது மன்னர் இறந்த பிறகு, வேறு உலகத்துக்குச் சென்று அந்த ராஜ்யத்தை ஆள ஆரம்பித்த பின்னர், அந்த உருவங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்றுவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.
தவிர, கல்லறையின் அமைவிடத்தைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய வீரர்களின், தளபதிகளின் பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது கொள்ளை யர்களோ, எதிரிகளோ மன்னரது கல்லறையைத் தாக்க வந்தால் அந்தக் களிமண் வீரர்கள் பாதுகாப்பார்கள் என்றும் நம்பினார்கள்.
இந்தக் கல்லறை கட்டுவதற்கான ஒட்டுமொத்தப் பணிகள் முடிய 36 வருடங்கள் பிடித்தன. கட்டுமானப் பணியில் மொத்தம் ஏழு லட்சம் கைதிகள், அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். உலகின் மிகப் பெரிய கல்லறைகளில் இதுவும் ஒன்று. ஏனென்றால் அது வெறும் கல்லறை அல்ல.
சின் ஸி ஹுவாங் ஆண்ட தலைநகரமான ஸியான்யங்கின் மாதிரி நகரே மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் உள்நகரம் (சுமார் 2.5 கிமீ பரப்பளவு), வெளிநகரம் (சுமார் 6.3 கிமீ பரப்பளவு) என்று விரிந்து காணப்படுகிறது. உள்நகரத்தின் தென்மேற்கில் அரசரின் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
டெரகோட்டா மனிதர்கள் மட்டுமன்றி குதிரைகள், அவை பூட்டப்பட்ட ரதங்கள், ஆயுதங்கள், கலைப்பொருட்கள் இப்படிப் பலவும் அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. இதுவரை சின் ஸி ஹுவாங்கின் கல்லறை நகரம் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை. இன்னமும் பூமிக்குள் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
இதுவரை உலகில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகளில் சின் ஸி ஹுவாங் கல்லறை நகரக் கண்டுபிடிப்பு மிகப் பெரியது.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT