Published : 24 Apr 2019 12:02 PM
Last Updated : 24 Apr 2019 12:02 PM
ஜலியான்வாலா பாக் – இந்தப் பெயரைக் கேட்டவுடன் விடுதலைப் போராட்டத்துக்குத் தங்கள் உயிரைக் கொடுத்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் நம் மனதில் தோன்றுவார்கள். நம் நாட்டை அடக்கி ஆண்ட பிரிட்டிஷார், இந்திய மக்களை எந்த மோசமான நிலைக்கும் தள்ளுவது பற்றிக் கவலைப்படவில்லை என்பதற்கு முதன்மை எடுத்துக்காட்டு ஜலியான்வாலா பாக். இந்த அவலச் சம்பவம் அரங்கேறி நூறாண்டுகள் ஓடிவிட்டன.
நாட்டு விடுதலைப் போராட்டம் குறித்தும், இந்தச் சம்பவம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா? குழந்தைகளுக்கான முக்கியப் புத்தகங்களை வெளியிட்டுள்ள தேசியப் புத்தக அறக்கட்டளை
(என்.பி.டி.) ஜலியான்வாலா பாக் குறித்து சிறார் படிப்பதற்கேற்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பிரபல இந்தி நாடக ஆசிரியர் பீஷ்ம சாஹ்னி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழில் மொழிபெயர்த்தவர் ந. பாலசுப்ரமணியன். ஓவியம் வரைந்தவர் பிரசாந்த் முகர்ஜி.
சீக்கியர்கள் மிகுந்திருந்த அமிர்தசரஸில் இஸ்லாமியரான சைஃபுதின் கிச்லூவும் இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் சத்யபாலும் எப்படிச் சாதாரண மக்களுக்கு விடுதலை உணர்வூட்டினார்கள் என்பது இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் ஆங்கிலேயத் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஓ ட்வையர், ஜெனரல் டையர் ஆகியோர் பஞ்சாப் மக்களை எப்படிக் கொடூரமாக ஒடுக்கினார்கள் என்பது குறித்து இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்தச் சம்பவம் பற்றி மட்டுமில்லாமல் அதற்குப் பின்னணியாக இருந்த மற்ற போராட்டங்களையும் நூலாசிரியர் விவரித்துள்ளார். ரௌலட் சட்டத்துக்கு எதிராக காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்டம், கதர் கட்சி, கிலாஃபத் இயக்கம் போன்றவற்றைப் பற்றியும் கூறியுள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எவ்வளவு முக்கியப் பங்காற்றியது என்பது பற்றியும் விசாரணை கமிஷனில் ஜெனரல் டையர் அளித்த வாக்குமூலத்தையும் பதிவுசெய்துள்ளது இந்தப் புத்தகத்தை முக்கியமாக்குகிறது.
ஜலியான்வாலா பாக்,
பீஷ்ம ஸாஹ்னி,
என்.பி.டி. வெளியீடு,
டி.பி.ஐ. வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை,
தொடர்புக்கு: 044-28252663
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT