Published : 03 Apr 2019 12:17 PM
Last Updated : 03 Apr 2019 12:17 PM
தனது முதல் ரயில் பயணத்துக்குத் தயாராவதற்கு அம்பேத்கருக்குப் பல நாட்கள் தேவைப்பட்டன. நல்ல சட்டை வேண்டும். நல்ல பட்டு வேட்டி வேண்டும். ஒரு நல்ல தொப்பியும். வெயிலோ மழையோ எது வந்தாலும் தாங்கும். எதுவும் வராவிட்டாலும் பரவாயில்லை. அட, யார் இந்த வெள்ளைக்கார துரை என்று பார்ப்பவர்கள் எல்லாம் ஆச்சரியத்தோடு வாய் பிளந்து நிற்க மாட்டார்களா என்ன? வழி விடு, வழி விடு குட்டி துரை வருகிறார் என்று அவர்கள் பதறவும் செய்யலாம்.
“ஹாஹா, பயப்படாதீர்கள், நான் துரை எல்லாம் கிடையாது, என் அப்பாவைப் பார்க்கச் சதாராவில் இருந்து கார்கானுக்கு ரயிலில் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று தெளிவுபடுத்தி அவர்கள் அச்சத்தைப் போக்கலாம். ரயிலில் போகிறேன் என்பதை அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம்.
நிறைய வேலை இருப்பதால் என்னால் வந்து அழைத்துப் போக முடியாது. நீயே வந்துவிடு. எப்போது, எந்த ரயில் என்பதை மட்டும் முன்னாடியே தெரியப்படுத்தினால், ஆள் அனுப்பி ரயில் நிலையத்திலிருந்து அழைத்துப் போகிறேன் என்று அப்பா சொல்லியிருந்தார். அண்ணன், அக்கா மகன் என்று பயணத் துணைகளும் தயார். தலையைச் சீவி சிங்காரமும் செய்துகொண்டு, பலமுறை கண்ணாடியில் நின்று அழகு பார்த்துக்கொண்டு, மூவர் படை கிளம்பியது. இது நடந்தது 1901 வாக்கில். அம்பேத்கருக்கு அது முதல் ரயில் பயணம். வாழ்வின் மறக்க முடியாத பயணமும்தான்.
ரயில் நிலையம் வந்தாகிவிட்டது. சீட்டு வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பே எலுமிச்சை சாறு வாங்கிப் பருகியும் ஆகிவிட்டது. புகை கக்கி, சீட்டி அடித்தபடியே ரயில் கிளம்பியது. ஒருவர்கூடத் தன்னைத் துரை என்று நினைக்கவில்லை என்பது ஏமாற்றம் என்றால், அதைவிடப் பெரிய ஏமாற்றம் ரொம்பச் சீக்கிரத்திலேயே ரயில் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதுதான். ரயிலைவிட்டு இறங்கி பெட்டி, படுக்கையோடு குழந்தைகள் காத்திருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அப்பாவின் ஆள் வந்தால்தானே?
ரயில் நிலைய அதிகாரி வந்து விசாரித்தார். அப்பாவின் ஆள் வரவில்லை, இங்கிருந்து எப்படிப் போவது என்றும் தெரியவில்லை என்று அம்பேத்கர் சொன்னதைக் கேட்டதும், அவர் பரிதாபத்துடன் உச்சு கொட்டினார். “கவலைப்படாதே, இங்கே குதிரை வண்டி கிடைக்கும். அதில் ஏறிப் போகலாம்” என்று சமாதானப்படுத்திய கையோடு, புன்னகையோடு கேட்டார். “நீ யார்?” அதே புன்னகையோடு அம்பேத்கர் பதிலளித்தார். “நான் ஒரு மகர்.” அந்த அதிகாரியின் கண்களில் அதுவரை இருந்த பரிவு சட்டென்று மறைந்ததைக் கண்டு திடுக்கிட்டார் அம்பேத்கர். தவறாகச் சொல்லிவிட்டேனா? நீ யார் என்று கேட்டால் உன் பெயரையோ ஊர்ப் பெயரையோ சொல்லாதே; அவர்கள் உன் சாதியைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பீம்ராவ் என்றல்லவா எல்லோரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்?
பெட்டிகளைச் சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு வண்டிக்காரரை நெருங்கினார்கள். அவர்களைக் கண்டதுமே வண்டிக்காரர் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். நீங்கள் வழக்கமாக வாங்கிக்கொள்வதைவிட இரு மடங்கு பணம் தருகிறேன் என்று மன்றாடியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி மீண்டும் அதிகாரியிடம் சென்று கெஞ்சினார்கள். இறுதியில் ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது. வண்டிக்காரரிடம் அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் வண்டியை அவர்களேதான் ஓட்டிக்கொள்ள வேண்டும். வண்டிக்காரர் பின்னால் நடந்துவருவார்.
வழியில் தாகம் ஏற்பட்டபோது தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று அம்பேத்கர் வண்டிக்காரரிடம் கேட்டார். அதோ அங்கே பார் என்று அவர் கை காட்டிய திசைக்குச் சென்று பார்த்தபோது, ஒரு குட்டையில் அழுக்குத் தண்ணீர் தேங்கிக்கிடந்தது. அம்பேத்கரின் முகம் கருத்துப் போனது. கண்கள் கலங்கின. ஒரு மகருக்கு இந்தத் தண்ணீர் போதும் என்று நினைத்துவிட்டாரா? புதிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம், புதிய ஊர்களைப் பார்க்கப் போகிறோம் என்று பல நாட்கள் உறங்காமல் ஏக்கத்தோடு காத்திருந்த எனக்குக் கிடைத்த பரிசு இந்த அழுக்கு நீரும் அழுகையும்தானா?
நான் ஒரு மகர் என்றதும் என் புத்தம் புதிய பட்டாடை, மினுமினுப்பான சட்டை, அழகிய தொப்பி எல்லாமே அழுக்காகிவிட்டனவா? எனில் என் உடலில்தான் சாதி ஒளிந்துகொண்டிருக்கிறதா? ஆம் எனில் எங்கே? அதை நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்? எப்படி வெளியேற்றுவேன்? நான் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே என் சாதியும் என்னோடு சேர்ந்து புறப்பட்டு வந்துவிட்டதா? நான் எங்கே போனாலும் அது என்னைப் பின்தொடருமா? அப்படி என்றால் நான் என்னதான் செய்வேன்? என்னோடு வராதே, என்னைப் பார்ப்பவர்களின் கண்களுக்கு உன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதே என்று எப்படிச் சொல்வேன் அதனிடம்?
நான் ஒரு மகர் என்பதைச் சொல்லாமல் போயிருந்தால் அந்த அதிகாரி என்னைப் பரிவோடு நடத்தியிருப்பாரா? வாருங்கள் குழந்தைகளே என்று வரவேற்று வண்டிக்காரர் தனது வண்டியில் எங்களை ஏற்றி உட்கார வைத்திருப்பாரா? குறைவான பணம் வசூலித்திருப்பாரா? தாகம் என்று சொன்னால் நல்ல தண்ணீர் வாங்கிக் கொடுத்திருப்பாரா? அப்படியென்றால், நான் பொய் பேசியிருக்க வேண்டுமா? ஆனால் ஏன்? ஏன் இவர்களால் என்னை உள்ளவாறே இந்தக் குதிரையைப்போல் கேள்விகள் இன்றி ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
என்னை மட்டுமா அவமானப்படுத்துகிறது சாதி? உன்னைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பெருமிதம்கொள்ளும் இந்த வண்டிக்காரரையும் அல்லவா அது வியர்க்க விறுவிறுக்க வண்டி பின்னால் ஓடிவருமாறு செய்திருக்கிறது? தண்ணீரில் கலந்திருக்கும் அழுக்கைப்போல் நம் மூளைகளில் படிந்திருக்கும் சாதியை நாம் ஏன் ஒன்று சேர்ந்து சுத்தப்படுத்தக் கூடாது? நம் கண்ணுக்கே தெரியாத எதிரிக்கு நாம் எல்லாம் ஏன் பயப்பட வேண்டும்?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT