Published : 06 Mar 2019 10:19 AM
Last Updated : 06 Mar 2019 10:19 AM
அவர் ஆழ்கடலில் குதித்து முத்துக்குளிக்கும் நபர்தான். ஆனால், அன்றைக்கு என்னவோ தவறாகிவிட்டது. கடலுக்குள் மாட்டிக் கொண்டார். மிகப் பெரிய Tridacna என்ற ராட்சச சிப்பிக்குள் அவரது கால் ஒன்று வசமாகச் சிக்கிக் கொண்டது. மீள முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து உடன் சென்ற சகாக்கள், அவரது உயிரற்ற உடலை மீட்டுக் கரைக்குக்கொண்டு வந்தார்கள். அவரது காலை அந்தப் பெரிய சிப்பி இறுகக் கவ்வியிருந்தது.
அது பிலிப்பைன்ஸின் பலாவான் தீவிலிருக்கும் ப்ரூக்’ஸ் பாயிண்ட் கடல் பகுதி. அந்தத் தீவில் வாழும் பழங்குடி மக்களின் தலைவர், அந்தச் சிப்பியை அகற்றினார். அதை அகலத் திறந்தார். அதனுள் இருக்கும் சதைப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உள்ளே பளபளக்கும் வெண்ணிற முத்து ஒன்றைக் கண்டார். அவரது வாய் ஆச்சரியத்தில் சிப்பியைவிட அகலமாகத் திறந்தது. மிகப் பெரிய முத்து. அவ்வளவு பெரிய முத்தை அவர்கள் யாரும் அதுவரை கண்டதில்லை.
அந்த மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியவர்கள். அந்த முத்தின் வளைவிலும் நெளிவிலும் இறைத்தூதரான முகம்மது நபியின் முகம் தெரிவதுபோலப் பழங்குடித் தலைவருக்குத் தோன்றியது. எனவே, அந்த முத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கத் தொடங்கினார்.
1934. பிலிப்பினோ - அமெரிக்கரான வில்பர்ன் கோப், பெரிய முத்து ஒன்று பலாவான் பழங்குடித் தலைவரிடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டார். தேடி வந்தார். முத்தைப் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். நல்ல தொகைக்கு விலைக்குக் கேட்டார். ‘இது இறைவன் அளித்த முத்து. தியாகத்தின் அடையாளம். இறைவனின் பொருளை ஒருபோதும் பணத்தால் வாங்க முடியாது’ என்று பழங்குடித் தலைவர் மறுத்துவிட்டார்.
சில மாதங்கள் கடந்திருக்கும். பழங்குடித் தலைவரது மகன் மலேரியாவால் பாதிக்கப்பட்டான். வில்பர்ன் கோப், அந்தச் சிறுவனுக்கு மருந்து அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார். நன்றிக்கடனாக பழங்குடித் தலைவர், வில்பர்ன் கோப்புக்கு முத்தைப் பரிசாகக் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குத் திரும்பினார்.
இந்தத் தகவல்களை எல்லாம் 1939-ல் Natural History என்ற இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் வில்பர்ன் கோப் குறிப்பிட்டிருக்கிறார். Pearl of Allah என்று பெயரிட்டு அந்த முத்தை, சில காலம் காட்சிக்கும் வைத்திருந்தார். அது ‘உலகின் மிகப் பெரிய முத்து’ என்று அழைக்கப்பட்டது.
1969-ல் Mensa என்ற அமைப்புக்குரிய இதழில் வில்பர்ன் கோப் இன்னொரு கட்டுரை எழுதினார். அதில் அல்லாவின் முத்து குறித்த கூடுதல் தகவல்களுடன், சீன தேசத்துக் கதை ஒன்றும் புதிதாகச் சேர்ந்திருந்தது. அதென்ன கதை?
சீன தேசத்துச் செல்வந்தரான லீ, நியூயார்க் கண்காட்சியில் அல்லாவின் முத்தைக் கண்டார். துள்ளிக் குதித்தார். விழுந்து வணங்கினார். தன்னிலை மறந்து கண்ணீரும்விட்டார். ‘இது அல்லாவின் முத்து’ என்றார் வில்பர்ன் கோப். ‘இல்லை, இது தொலைந்துபோன லாவோவின் முத்து!’ என்றார் லீ.
லாவோட்சு, சீனாவின் முக்கியமான மெய்யியலாளர். கி.மு. 604-ல் பிறந்தவர். இவரது தத்துவங்கள் தாவோயிஸம் என்றழைக்கப்படுகிறது. தாவோயிஸக் கோட்பாட்டின் முதன்மையான கடவுளாக லாவோ வணங்கப்படுகிறார். லாவோ, தான் வாழ்ந்த காலத்தில் சிறிய வெள்ளை முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அதில் புத்தர், கன்பூசியஸ் முகங்களுடன் தனது முகத்தையும் செதுக்கினார்.
அதை மோதிரம் ஒன்றில் பொருத்தி, ‘மூன்று நண்பர்கள்’ என்று பெயரிட்டார். பின் லாவோ, அந்த முத்து மேலும் வளர வேண்டும் என்பதற்காக அதைச் சிப்பி ஒன்றில் வைத்து மூடினார். அந்த முத்து வளர வளர வேறு பெரிய சிப்பிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரியதாக வளர்ந்திருந்த அந்த முத்தை, Tridacna வகை ராட்சசச் சிப்பிக்குள் மாற்றி வைத்துப் பாதுகாத்தார்கள். அந்த மிகப் பெரிய முத்தை அபகரிக்கும் நோக்குடன் வெவ்வேறு காலகட்டங்களில் போர்களும் நடந்திருக்கின்றன.
லீயின் முன்னோர்கள் லாவோவின் வழியின் வந்தவர்கள். அவர்கள் அந்த முத்துக்கு Pearl of Lao Tzu என்று பெயரிட்டுப் பாதுகாத்து வந்தார்கள். கி.பி. 1750. எதிரிகள் அந்த முத்தை அபகரிக்கத் திட்டமிட்டபோது, லாவோவின் முத்தை, சீனாவிலிருந்து கப்பலில் ஏற்றி, பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது.
பலாவான் பழங்குடியினர் அந்த முத்தை ஆழ்கடலில் கண்டெடுக்க, பின் அது வில்பர்ன் கோப் வசம் செல்ல, நியூயார்க்கில் அதை லீ பார்க்க என்று அந்தக் கதைக்கு ஒரு வடிவம் உண்டானது. ‘3.5 மில்லியன் டாலர் தருகிறேன். லாவோ முத்தைத் தந்துவிடுங்கள்’ என்று லீ கேட்டதாகவும், வில்பர்ன் கோப் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பின் அந்த லீ என்ன ஆனார் என்று தெரியவில்லை.
1979-ல் வில்பர்ன் கோப் இறந்து போனார். லாவோ முத்தை 2 லட்சம் டாலர்கள் கொடுத்து பீட்டர் ஹாஃப்மேன், விக்டர் பார்பிஷ் என்ற இருவர் வாங்கினர். இதற்காக விக்டர் பார்பிஷ், ஜோசப் போனிசெல்லி என்பவரிடம் குறிப்பிட்ட தொகை கடனும் வாங்கியிருந்தார்.
அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாததால் ஜோசப், விக்டர் மீது வழக்கு பதிவுசெய்தார். பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு ஒரு முடிவு எட்டப்பட்டது. அதன்படி லாவோவின் முத்தில் பீட்டர் ஹாஃப்மேன், விக்டர் பார்பிஷ், போனிசெல்லி ஆகிய மூவருக்கும் சம உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சரி, இன்றைக்கும் அல்லாவின் அல்லது லாவோவின் முத்துதான் உலகின் மிகப் பெரிய முத்தா?
இல்லை. அது 24 செ.மீ. சுற்றளவும் 6.4 கிலோ எடையும் கொண்டது. 2005-ம் ஆண்டு அதே பலாவான் தீவில் ஒரு மீனவர், ஆழ்கடலில் மிகப் பெரிய வெள்ளைக்கல் ஒன்றைக் கண்டெடுத்தார். அது அதிர்ஷ்டக்கல் என்று கருதி தன் படுக்கையின் கீழ் வைத்து, பத்து வருடங்கள் பாதுகாத்தார்.
அடிக்கடி வீடு மாற்றிக்கொண்டிருந்த காரணத்தால், அதற்கு மேல் கல்லை வைத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்து, 2016-ல் சுற்றுலாத் துறையில் பணியாற்றிய தன் உறவுக்காரப் பெண்ணிடம் கொடுத்தார்.
சிந்தியா என்ற அந்தப் பெண் அது வெள்ளைக்கல் அல்ல, முத்து என்று கண்டுகொண்டார். 34 கிலோ எடை கொண்ட அந்த முத்தின் தோராய மதிப்பு 130 மில்லியன் டாலர்கள். Pearl of Puerto என்று பெயரிடப்பட்ட அதுவே இன்றைக்கு உலகின் மிகப் பெரிய முத்து.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT