Published : 13 Mar 2019 10:46 AM
Last Updated : 13 Mar 2019 10:46 AM
1992. கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ நகரம். டெரி ஹோர்டன் என்ற பெண் பழைய கலைப்பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார். தன் தோழியின் பிறந்தநாளுக்குப் பரிசு வாங்கிக் கொடுக்க நினைத்த அவர், பழைய ஓவியம் ஒன்றைக் கண்டார். அளவில் பெரியதாக இருந்தது. வண்ணங்களால் நிறைந்திருந்தது.
8 டாலர்கள் என்று கடைக்காரர் சொல்ல, பேரம் பேசி 5 டாலர்களுக்கு வாங்கிவந்தார் டெரி. தோழிக்கு ஓவியம் பிடித்திருந்தாலும், ‘‘மன்னித்துக்கொள். என் வீட்டுச் சுவற்றில் இவ்வளவு பெரிய ஓவியத்தை மாட்ட இடமில்லை. நீயே இதை வைத்துக்கொள்’’ என்று, டெரியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
டெரியும் அந்த ஓவியத்தைத் தன் வீட்டு மூலையில் போட்டு வைத்துவிட்டார். ஓவிய ஆசிரியர் ஒருவர் டெரியின் வீட்டுக்கு வந்தார். அந்தப் பழைய ஓவியத்தைப் பார்த்தார். ‘‘ஜாக்சன் போலாக் ஓவியமா இது?’’ என்று அவர் கேட்க, டெரிக்கு ஒன்றும் புரியவில்லை.
ஜாக்சன் போலாக், இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மிக முக்கியமான ஓவியர். வண்ணங்களை விசிறியடித்து ஓவியங்களைத் தீட்டுவதில் வல்லுநர். அவருடைய ஓவியங்கள் பல மில்லியன் டாலர்களுக்கு விலை போயிருக்கின்றன.
‘‘இதன் மதிப்பு நிச்சயம் 50 மில்லியன் டாலர்களாவது இருக்கும்’’ என்று அந்த ஆசிரியர் சொன்னபோது, டெரி ஆச்சரியத்தில் வாய்பிளந்தார். ஓவியங்களை ஆராய்ந்து அவை அசல்தானா என்று நிரூபிக்கும் வல்லுநர் ஒருவரை வரவழைத்தார். அந்த வல்லுநர் ஓவியத்தில் ஜாக்சன் போலாக்கின் விரல் ரேகைப் பதிவு இருப்பதை உறுதிசெய்தார். விஷயம் வெளியில் தெரிந்ததும், இரண்டு மில்லியன் டாலர்கள் தருகிறேன், ஐந்து மில்லியன் டாலர்கள் தருகிறேன் என்று கலை ஆர்வலர்கள் ஓவியத்தை விலைக்குக் கேட்டுவந்தார்கள்.
டெரி ஒப்புக்கொள்ளவே இல்லை. ஐந்து டாலர்களுக்கு வாங்கிய ஓவியத்தை ஐம்பது மில்லியன் டாலர்களுக்குக் குறைவாக விற்கவே மாட்டேன் என்று தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.
அன்றைக்கு அந்த அமெரிக்கர், மாஸ்டர்பீஸ் என்ற போர்டு கேம் விளை யாடிக்கொண்டிருந்தார். ஓவியங்களை ஏலம் கேட்பது, ஏலம் விடுவது என்பது அந்த விளையாட்டின் அடிப்படை. அப்போது கார்டில் ஓர் ஓவியத்தைக் கண்டார். பொன்னிற வெல்வெட் துணி ஒன்றில், வெள்ளை நிற மக்னோலியா மலர்கள் வைக்கப் பட்டிருப்பது போன்ற ஓவியம். இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தபோது, பளிச்சென தனது வீட்டில்தான் அந்த ஓவியம் தொங்கவிடப்பட்டிருப்பது நினைவுக்குவந்தது.
வீட்டுச் சுவரில் ஓட்டை விழுந்திருந்தது. அதைச் சரிசெய்ய அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று யோசித்த அந்த அமெரிக்கர், பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் 29 டாலர்களுக்கு அந்த ஓவியத்தை வாங்கித் தொங்கவிட்டிருந்தார். பல வருடங்களாக வீட்டுச் சுவரின் ஓட்டையை அந்த ஓவியம் மறைத்துக்கொண்டிருந்தது.
‘‘இது என்ன ஓவியம்?’’ என்று கேட்டார் அவர். உடன் விளையாடிக் கொண்டிருந்த விவரம் அறிந்த நண்பர், ‘‘Magnolias on Gold Velvet Cloth” என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற அமெரிக்க ஓவியரான மார்ட்டின் ஜான்ஸன் ஹெடெ என்பவர் வரைந்தது. அவர், பல்வேறு விதமான பூக்களைத் தத்ரூபமாக வரைவதில் கில்லாடி.
தன் வீட்டில் இருப்பது அசல் மேக்னோலியா மலர்கள் ஓவியமா என்று அறிய மன்ஹாட்டன் நகரத்திலிருக்கும் கென்னடி அருங்காட்சியகத்துக்கு ஓவியத்தின் புகைப்படங்களை மெயிலில் அனுப்பினார் அந்த அமெரிக்கர். அது அசல் ஓவியம் என்று நிரூபிக்கப்பட்டது. ஹூஸ்டன் நகரத்திலிருக்கும் அருங்காட்சியத்தைச் சேர்ந்தவர்கள், அந்த மக்னோலியா மலர்கள் ஓவியத்தை வாங்கிக்கொண்டார்கள்.
பழைய கடையில் 29 டாலர்களுக்கு வாங்கப்பட்ட அந்த ஓவியம், பல ஆண்டுகள் சுவற்றின் ஓட்டையை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட அந்த ஓவியம், இறுதியில் 1.25 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது. அந்தப் பணத்தைக் கொண்டு வீட்டின் சுவர் ஓட்டையைச் சரிசெய்துகொண்டார் அவர்.
1911, ஆகஸ்ட் 12 அன்று, ஓவியரான லூயி பிரவுட் பாரிஸின் லூவர் அருங்காட்சியத்துக்குச் சென்றார். லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா அங்குதான் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு லூயி சென்று பார்த்தபோது, ஓவியம் தொங்கிக்கொண்டிருந்த இடத்தில் ஆணிகளே இருந்தன. மோனலிசா ஆகஸ்ட் 11 அன்றே திருடப்பட்டிருந்தது.
அன்றைக்கு ஓவியத்தைப் படம் எடுக்க சிலர் வந்து போயிருந்தார்கள். அவர்கள் திருடியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு கவிஞர், ஓர் ஓவியர் என்று பலர் மீதும் சந்தேக வலை வீசப்பட்டது. ஆனால், அவர்கள் யாருமே திருடவில்லை என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் பலரும் விசாரிக்கப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகள் தேடியும் மோனலிசா சிக்கவில்லை. இனி மோனலிசா கிடைக்கவே மாட்டார் என்று பிரெஞ்சு மக்கள் பெரும் துக்கத்தில் இருந்தனர். அப்போது பிரான்ஸின் இன்னோர் அருங்காட்சியகத்தில் மோனலிசா ஓவியத்தை ரகசியமாக விலைபேசி விற்க வந்த வின்செஸோ பிடிபட்டார். அவர், லூவர் அருங்காட்சியத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றியவர். ஓவியத்தைத் திருடி, அதைப் பெரும் தொகைக்கு விற்பனை செய்ய இயலாமல், தன் வீட்டிலேயே இரண் டாண்டுகள் மறைத்து வைத்திருந்தார். பொறுமை இழந்து அதை விற்க முற்பட்டபோது மாட்டிக்கொண்டார்.
வின்செஸோவுக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தாலியிலும் பிரான்ஸிலும் காட்சிக்கு வைக்கப்பட்ட மோனலிசா ஓவியம், 1913-ல் மீண்டும் லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
இன்றைக்கும் அதே அருங்காட்சி யகத்தில், குண்டு துளைக்காத கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அசல் மோனலிசாவை, வருடந்தோறும் சுமார் 60 லட்சம் பேர் பார்வையிட்டுச் செல்கின்றனர். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியம் பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமானது. இதன் விலை மதிப்பிட முடியாதது.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT