Last Updated : 06 Feb, 2019 10:47 AM

 

Published : 06 Feb 2019 10:47 AM
Last Updated : 06 Feb 2019 10:47 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: என்னை மன்னித்துவிடுங்கள்

‘‘இந்தப் படத்தில் இருப்பவரை எங்காவது பார்த்த நினைவு இருக்கிறதா? நான் அவர் வகுப்பில் படித்த மாணவன். இது அவருடைய பெயர். அந்தப் பள்ளியின் பெயர் இது. இவரைப் பற்றி உங்களுக்குத் தகவல் தெரிந்தால் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்.’’

இப்படி ஒரு கடிதம் எழுதி நாலாபுறமும் அனுப்பி வைத்தார் ஒரு மாணவர். நீண்ட நாட்கள் கழித்து எங்கோ ஒரு மூலையிலிருந்து பதில் வந்தது. ‘‘நீங்கள் குறிப்பிடும் நபர் என் தெருவில்தான் இருக்கிறார். வந்தால் பார்க்கலாம்.’’ மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார் மாணவர். சரியான முகவரியைக் கண்டுபிடித்து, பதைபதைப்புடன் கதவைத் தட்டினார்.

வயதான ஒரு மனிதர் கதவைத் திறந்தார். ‘‘நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும்’’ என்று தள்ளாடியபடியே கேட்டார். மாணவருக்குத் தெரிந்துவிட்டது. ‘‘ஐயா, நான்தான். என்னைத் தெரிகிறதா? ஒருநாள் உங்கள் மூக்குக் கண்ணாடி வகுப்பறையில் தொலைந்துவிட்டது, அன்று நீங்கள் வகுப்பு எடுக்காமல் திரும்பிவிட்டீர்கள். நினைவிருக்கிறதா? அன்று அதை எடுத்துச் சென்றது நான்தான்.’’

தாத்தாவின் கைகள் நடுங்கின. ‘‘சரி, அதற்கு இப்போது என்ன? எதற்காக என்னைத் தேடிக்கொண்டு வந்தாய்? ’’. மாணவர் அவர் கைகளைப் பற்றிக்கொண்டார். ‘‘நான் அன்று செய்தது தவறு என்பதை மிகவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். நடந்ததை ஒப்புக்கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் நீங்கள் கிடைத்தீர்கள். என்னை மன்னிப்பீர்களா?’’

கொஞ்சம் இந்த மலையைத் தூக்கி அந்தப் பக்கம் வைக்க முடியுமா என்றால்கூட, முயற்சி செய்து பார்க்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒருவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் உலகப் போரில் மாட்டிக்கொண்டதைப்போல் நடுங்குவார்கள். உலகிலுள்ள எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும், மன்னிப்பு என்னும் வார்த்தைதான் இதுவரை உச்சரிப்பதற்குக் கடினமானதாக இருக்கிறது. அதற்குக் காரணம் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நமக்கு நிஜமாகவே தெரியாது.

‘‘நான் உங்கள் காலை மிதித்துவிட்டேன். வலித்திருந்தால், மன்னித்துவிடுங்கள்’’ என்பார்கள் சிலர். அப்படி என்றால் என்ன? காலை மிதித்தால் தவறில்லை. அவருக்கு வலித்தால் மட்டும்தான் தவறா? ஒருவேளை அவருக்கு வலி இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லையா? இன்னும் சிலரோ, ‘‘நான் உங்களை வேண்டுமென்றே மிதிக்கவில்லை’’ என்பார்கள். அப்படியானால் வேண்டும் என்றேகூட குறி பார்த்து மிதிப்பார்களா? அவ்வாறு செய்தால் மட்டும்தான் மன்னிப்பு கேட்பார்களா?

இவர்கள்கூடப் பரவாயில்லை. ‘‘ஏன் காலை அப்படிக் குறுக்கில் வைத்திருந்தீர்கள்? நீங்கள் ஒழுங்காகக் காலை மடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தால் இப்படி நான் வந்து மிதித்திருப்பேனா? அடுத்த முறையாவது அடக்கஒடுக்கமாக இருங்கள்’’ என்று சிலர் காலையும் மிதித்துவிட்டு, தவித்துக்கொண்டிருக்கும் நபரைப் பார்த்துச் சிடுசிடுக்கவும் செய்வார்கள்.

இவர்கள் தெரிவிக்கும் செய்தி என்ன தெரியுமா? நான் உன்னை மிதித்ததற்குக் காரணம் நானல்ல, நீ. அதனால் என்னிடமிருந்து மன்னிப்பு, கின்னிப்பு எதையும் எதிர்பார்க்காதே. வேகமாக ஓடிக்கொண்டிருந்த உங்கள் கால்களுக்குக் கீழே என் காலைக் கொண்டுவந்தது என் தவறு என்று வேண்டுமானால் சொல். மன்னிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

மன்னிப்பு கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சிலர் இன்னொரு வரியையும் சேர்த்துக்கொள்வார்கள். ‘‘நீங்கள் இங்கே அமர்ந்திருப்பதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நான் ஏன் மிதித்திருக்கப் போகிறேன்?’’ அல்லது ‘‘எனக்கு வண்டி பிடிப்பது முக்கியம் என்பதால் உங்களைக் கவனிக்கவில்லை.’’ அல்லது ‘‘இதுவரை நான் இப்படி யாரையும் மிதித்ததில்லை.’’

சும்மா வாய் வார்த்தையாக இல்லாமல், மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நடந்த தவறுக்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும். பூசி மெழுகக் கூடாது. நான் ஏன் அப்படிச் செய்தேன் தெரியுமா என்று விளக்கம் அளிக்கக் கூடாது. காரணம், பாதிக்கப்பட்டவர் நிச்சயம் உங்களிடமிருந்து மேடைப் பேச்சை எதிர்பார்க்க மாட்டார்.

அவருக்கு வேண்டியது சுருக்கமான, அழுத்தமான, உண்மையான மன்னிப்பு மட்டுமே. ‘நான் செய்தது தவறு, உங்கள் காலை மிதித்திருக்கக் கூடாது’ என்று நேரடியாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அவர் வேதனையைப் பரிவோடு அணுக வேண்டும். ‘‘உங்கள் கால் இப்போது எப்படி இருக்கிறது? வலிக்கிறதா?’’ என்று விசாரிக்க வேண்டும்.

மூன்றாவதாக, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். ‘‘தயவு செய்து உங்களுக்கு ஒரு புதிய மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக்க என்னை அனுமதியுங்கள்’’ என்று சொல்லலாம். இதன் மூலம், நான் செய்த தவறைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்னும் செய்தியை நீங்கள் அவருக்குத் தெரிவிக்கிறீர்கள். நான்காவது, உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி. ‘‘இந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டேன்.’’

நாம் இழைக்கும் ஒவ்வொரு தவறும் இரண்டு காயங்களை ஏற்படுத்துகிறது. ஒன்று, நம்மால் பாதிக்கப்பட்டவருக்கு. இரண்டு, நமக்கு. அதனால்தான், எப்போதோ சிறு வயதில் செய்த குறும்புக்கு மனம் வருந்தி 40 ஆண்டுகள் காத்திருந்து, வீடு தேடிச் சென்று மன்னிப்பு கேட்டார் அந்த மாணவர். ‘‘நான் நெகிழ்ந்துவிட்டேன்.

நானும் எத்தனையோ பேரிடம் இப்படி மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது’’ என்றார் அந்த ஆசிரியர். மாணவருக்கும் பெரிய பாரத்தை இறக்கி வைத்த திருப்தி. இரு காயங்களும் ஆறிவிட்டன. நிச்சயம் இருவருமே அன்று நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கியிருப்பார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x