Published : 06 Feb 2019 10:47 AM
Last Updated : 06 Feb 2019 10:47 AM
இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரம். கி.பி. 1489. சிறுவன் ஒருவன் சிறிதும் கவனம் பிசகாமல் ஒரு சிலையைச் செதுக்கிக்கொண்டிருந்தான். மார்பிள் கல்லில், அவன் கையிலிருக்கும் உளி லாகவமாக விளையாட, முகம் ஒன்று உயிர் பெற்றுக்கொண்டிருந்தது. சிலர் அங்கே நின்று அவன் செதுக்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
‘இவனுக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்குமா? இப்போதே இவன் இவ்வளவு அருமையாகச் செதுக்குகிறானே!’ – அங்கே நின்றுகொண்டிருந்த பெரியவர் ஒருவர் ஆச்சரியத்தில் வாய்பிளந்தார். அவன் செதுக்கிக்கொண்டிருந்த முகத்தின் வாயும் புன்னகையுடன் பிளந்தபடிதான் இருந்தது.
அது ரோமானியப் புராணக்கதைகளில் வரும் ஒரு கடவுளின் முகம். மரங்களையும் கிராமங்களையும் காக்கும் அந்தக் கடவுளின் பெயர் ஃபான் (Faun). ஆட்டின் கண்கள், மான்களுக்கு இருப்பது போன்ற கொம்புகள், நீண்ட மனிதக் காதுகள், அகலமான மூக்கு, மூடியிருக்கும் வாய், அடர்த்தியான புருவம், தொங்கும் மீசை - தாடி, கழுத்திலிருந்து இடுப்புவரை மனித உடல், அதற்குக் கீழ் புசுபுசுவென ரோமம் கொண்ட ஆட்டின் உடல். இதுதான் ஃபானின் கற்பனை உருவ அமைப்பு.
அந்தச் சிறுவன் பழைய ஃபானின் சிலை ஒன்றைப் பார்த்துப் பார்த்து, புதிதாக ஃபானின் முகத்தை மட்டும் அப்போது செதுக்கிக் கொண்டிருந்தான். கடவுள் ஃபான் இளமையானவர். சிறுவன் செதுக்கிய ஃபானின் முகம், கிழவருடையது போன்றிருந்தது. கடவுள் ஃபானின் வாய் மூடியிருக்கும். சிறுவனோ வாய் பிளந்த புன்னகையுடன், நிறைய பற்களுடன் அந்த முகம் இருப்பதுபோலச் செதுக்கி முடித்தான். அப்போது அங்கே ஃப்ளோரன்ஸ் அரசர் லொரென்ஸோ டி’ மெடிஸி வந்தார். அவர் கலைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர்களை ஆதரித்தவரும்கூட.
அந்தச் சிறுவன் செதுக்கிய ஃபானின் முகம் லொரென்ஸோவை கவர்ந்தது. அவரது புருவங்கள் அனிச்சையாக உயர்ந்தன. ‘பழைய சிலையைப் பார்த்து அப்படியே செதுக்காமல், தன் கற்பனையையும் கலந்து செதுக்கியிருக்கிறான். ஃபானைக் கிழவனாக, புன்னகை நிறைந்த முகத்துடன் படைத்திருப்பது அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று லொரென்ஸோ, அசந்து நின்றார்.
அதேநேரம் அவருக்குள் ஒரு கேள்வியும் எழுந்தது. அந்தக் கேள்வியைச் சிறுவனிடம் கேட்டார். ‘‘தம்பி, இந்தக் கிழட்டு ஃபானுக்கு எப்படி இத்தனைப் பற்கள் இருக்கின்றன? ’’. அந்தச் சிறுவன் யோசிக்கவே இல்லை. தன் உளியைக் கொண்டு அந்தச் சிலையின் மேல் தாடைப் பல் ஒன்றைத் தட்டி எடுத்தான். இப்போது பொக்கை வாய்ச் சிரிப்புடன் அந்தச் சிலை மேலும் அழகாக, அர்த்தத்துடன் தெரிந்தது. லொரென்ஸோ, அந்தச் சிறுவனுக்குள் மாபெரும் கலைஞன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டார்.
கி.பி. 1475-ல் இத்தாலியில் பிறந்த அந்தச் சிறுவனின் பெயர் மைக்கேலாஞ்சலோ. அவன் செதுக்கிய முதல் சிலை அது. சான் மார்கோ என்பது லொரென்ஸோ உருவாக்கிய கலைப்பள்ளி. அங்கே சேர்ந்து படிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் மைக்கேலாஞ்சலோ படிப்பதற்கான ஏற்பாடுகளை லொரென்ஸோ செய்தார்.
மைக்கேலாஞ்சலோ மென்மேலும் தன் திறமையைக் கூர்தீட்டிக் கொள்ள பல உதவிகளைச் செய்தார். பின்பு, இத்தாலியின் மிகச் சிறந்த சிற்பியாக, ஓவியராக, கட்டிடக்கலை நிபுணராக, கவிஞராக மைக்கேலாஞ்சலோ புகழ்பெற்றார்.
லியானார்டோ டா வின்சியும் மைக்கேலாஞ்சலோவும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து இத்தாலியக் கலைப்படைப்புகளில் புதுமையைப் புகுத்தி மறுமலர்ச்சியை உண்டாக்கினர். அதில் மைக்கேலாஞ்சலோவின் படைப்புகளான பியேட்டா சிலை, டேவிட் சிலை, சிஸ்டின் ஆலய மேற்கூரை ஓவியங்கள், சிஸ்டின் மண்டப பலிபீடத்தில் கடைசித் தீர்ப்பு சுவரோவியம் போன்றவை இன்றைக்கும் உலகப் புகழுடன் திகழ்கின்றன.
மைக்கேலாஞ்சலோ தனது முதல் ஓவியத்தை வரையத் தொடங்குவற்கு முன்பாக, சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் மனிதனின் உடற்கூறு இயல் (Anatomy) குறித்துப் படித்தார். அதனால்தான், இவரது ஓவியங்களில் மனிதனின் எலும்பு, தசை, தோலின் நிறம் உள்ளிட்ட ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக, இயற்கைத்தன்மை மாறாமல் அமைந்திருக்கின்றன.
மைக்கேலாஞ்சலோ செய்த சிற்பங்கள், வரைந்த ஓவியங்கள் உள்ளிட்ட பெரும்பாலான படைப்புகள் இன்றைக்கும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அந்த ஒன்று மட்டும் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. எந்த ஒன்று?
மைக்கேலாஞ்சலா முதன் முதலில் செதுக்கிய ஃபானின் முகம். பல காலமாக ஃப்ளோரன்ஸ் நகரத்தின் பார்கெல்லோ அருங்காட்சியகத்தில்தான் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜிகள் பல நாடுகளிலும் புகுந்து கலைச்செல்வங்களைக் கொள்ளையடித்தனர். அப்போது பார்கெல்லோ அருங்காட்சியத்திலிருந்த பல்வேறு கலைப்பொருட்களை, இத்தாலியின் போப்பி நகரத்தின் கோட்டைக்கு இடம் மாற்றி வைத்தனர்.
இருந்தாலும் நாஜிப்படையினர், போப்பி கோட்டையிலிருந்து கலைப்பொருட்கள் பலவற்றையும் கொள்ளையைடித்துச் சென்றனர். அதில் ஃபானின் முகம், பத்தாவது எண் கொண்ட டிரக்கில் ஏற்றப்பட்டது. இத்தாலியின் ஃபோர்லி நகரத்துக்கு அந்த டிரக் சென்றது. பின்பு அந்த டிரக்கிலிருந்த கலைப்பொருட்கள் என்னவாயின, மைக்கேலாஞ்சலோ செதுக்கிய ஃபானின் முகம் என்னவாயிற்று என்பதைக் கண்டறியக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரிய அளவில் விசாரணைகள் நடத்தப்பட்டன. கண்டுபிடிக்க முடியவில்லை.
மைக்கேலாஞ்சலோ, ஃபான் முகத்தைச் செதுக்குவது போன்ற சிலை ஒன்றை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸோச்சி என்ற சிற்பி உருவாக்கினார். அது ஃப்ளோரன்ஸ் நகரத்தின் இன்னோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தவிர, மைக்கேலாஞ்சலோ செதுக்கிய ஃபான் முகத்தின் நகல் ஒன்று பார்கெலோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அசல் ஃபான் கிழவர் பொக்கை வாயுடன் எங்கே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT