Published : 03 Sep 2014 10:00 AM
Last Updated : 03 Sep 2014 10:00 AM
கடியூர் நாட்டு அரசர், போர் என்று கேட்டாலே பயந்து நடுங்குபவர். இதுவரை, ஒரு நாள்கூட அவர் வாளெடுத்து வீசியதில்லை. ஈட்டி, கேடயம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது.
எறும்புகடிக்கே பயந்தவர் என்றால் பாருங்களேன். அரண்மனைக்குள் ஒரு எறும்பைப் பார்த்து விட்டால் போதும். காவலனைக் கூப்பிட்டுக் கேள்வி மேல் கேள்வி கேட்பார்.
“யாரங்கே? எறும்புக்குப் பதிலாக, உன்னைக் கீழே படுக்க வைத்து நசுக்கி விடுவேன்” என்று மிரட்டுவார். எறும்புகளைச் சித்திரவதை செய்து, உடனடியாகக் கொல்லச்சொல்லிக் கட்டளையிடுவார். இல்லையேல், காவலனை வேலையை விட்டு அனுப்பிவிடுவார். கடியூர் நாட்டு மன்னனின் இந்த இழிவான செயலைக் கண்டு, எறும்புகள் எதிர்த்து நிற்க விரும்பின. ஒருநாள் அவை ஒன்று கூடித், தங்களது ராணியிடம் புகார் செய்தன.
மறுநாள், எறும்புராணி தலைமையில் லட்சக்கணக்கான எறும்புகள் அரண்மனைக்குப் படையெடுத்து வந்தன. சாரை சாரையாக வந்த எறும்புக் கூட்டத்தைப் பார்த்து, காவலர்கள் பதறினார்கள். கோட்டையின் வாயிலை மூடி வைத்தார்கள்.
கதவுக்குக் கீழிருந்த சந்து வழியாக எறும்புகள் கோட்டைக்குள் நுழைந்தன. அவை படை வீரர்களைப் போல அணிவகுத்து நின்றன. அங்கிருந்த காவலர்களைக் கடித்து வைத்தன. அரசனுக்கு அடங்காத கோபம். பாதாள அறை சிங்கத்துக்கு எறும்புகளை இரையாக்கச் சொன்னார். எறும்புகளை மண்வாரியால் அள்ளி, காவலர்கள் சிங்கத்தின் கூண்டில் வீசினர். எறும்புகள், சிங்கத்தை மொய்த்துக் கடித்தன. சிங்கத்தைச் சாகடித்தன.
அடுத்ததாகப் பட்டத்து யானைகளை அரசர் அவிழ்த்துவிடச் சொன்னார். எறும்புக்கடி தாங்காமல் பட்டத்து யானைகள் பிளிறி ஓடின. எறும்புகளைக் கொல்ல மந்திரிகள் ஒன்றுகூடிச் சென்றார்கள். எறும்புகள் மந்திரிகளைக் கடித்து வைத்தன. அதைப் பார்த்து அச்சப்பட்ட அரசர், அரண்மனைக்குள் கட்டிய தெப்பத்தில் குதித்தார். இடுப்பளவு தண்ணீர் இருந்த இடம் பார்த்துப் பாதுகாப்பாக நின்று கொண்டார்.
“அரசரைக் காப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்.” என்று நாட்டு மக்களுக்கு முரசறிவிக்கச் சொன்னார்.
அரசருக்கு ஆலோசனை தர வந்தவர்கள் கோட்டை வாயிலில் கூட்டமாகத் திரண்டனர். ஒருவர், ஆயிரம் கிலோ எறும்புப்பொடி வாங்கி அரண்மனை அறைகளில் தூவிவிடச் சொன்னார். மற்றொருவர், தண்ணீரைப் பீச்சி அடிக்கச் சொன்னார். மூன்றாமவர், எறும்புகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவ வேண்டுமென்றார்.
கடைசியாக ஒரு முதியவர் வந்தார். நீண்ட நாட்களாக அவருக்கு, நாட்டு மன்னனைத் தைரியமுள்ள வீரனாகப் பார்க்க ஆசை. அதை, மன்னனிடம் நேரடியாகச் சொன்னால் வம்பை விலைக்கு வாங்கியது போல் ஆகிவிடும். கடுமையான தண்டனைக்கு ஆளாக வேண்டும். மன்னன் குழம்பும்படியாக முதியவர் பேசினார்.
“எதிரி நாட்டு மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மலைகளும், காடுகளும் உள்ளன. அந்த நாட்டின் மீது படையெடுக்க வேண்டும்.” என்றார். “முதியவரே! எறும்புக் கடியிலிருந்து தப்பிக்க வழிகேட்டால், எமனிடம் அனுப்ப வழி சொல்கிறீரே” என்றார் அரசர்.
முதியவர் சற்றும் தளராமல் பேசினார்.
“எதிரி நாட்டு மலைகளிலும், காடுகளிலும் அதிகமான எறும்புத் தின்னிகள் உள்ளன. ஆகவே, எதிரி நாட்டின் மீது படையெடுத்து வென்று, எறும்புத்தின்னிகளைப் பிடித்து வர வேண்டும்.” என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
ஒரு நாள் கழித்து, முதியவரை அரசர் அழைத்து வரச்சொன்னார். தமக்கும், படை வீரர்களுக்கும் அவரையே போர்ப் பயிற்சி தரும்படிக் கேட்டார். தண்ணீரில் பத்திரமாக நின்றிருந்த மன்னருக்குப் போர்ப்பயிற்சி தரப்பட்டது.
எதிரி நாட்டின் மீது படையெடுக்கப் போவதாய் ஓலை அனுப்பப்பட்டது. போரும் நடந்தது. கடியூர் அரசர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் காடுகளிலிருந்து எறும்புத்தின்னிகளைப் பிடித்து வந்தனர்.
அவை ஒவ்வொன்றும் பதினாறு அங்குல நாக்கை நீட்டி, அரண்மனைக்குள் ஓடின. எறும்புகள், அவைகளின் நாக்கில் ஒட்டிக் கொண்டன. ஒரு எறும்புத்தின்னி, கால் கிலோ எறும்புகளை விழுங்கித் தீர்த்தது.
எறும்புத்தின்னிகளின் உடம்பிலிருந்த அடுக்கடுக்கான பட்டைகள், இயற்கை தந்த கேடயமாக இருந்தன. துப்பாக்கிக் குண்டுகூட துளைக்க முடியாத உடம்பை, எறும்பு களால் கடிக்க முடியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக, எறும்புகள் காலியாயின. அரசர் வெற்றியைக் கொண்டாடினார். கடியூர் நாட்டுக்கொடியில் எறும்புத்தின்னி இடம் பெற்றது.
அதன் பிறகுதான் எறும்புகள் அரண்மனைக்குள் ஏன் புகுந்தன என்ற விஷயத்தையும் அரசர் தெரிந்துகொண்டார். அன்று முதல் எறும்புகளை மட்டுமல்ல எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டத் தொடங்கினார். ஒரே சமயத்தில் அரசரை நல்லவராகவும், முழு வீரராகவும் பார்த்த முதியவர் மகிழ்ச்சியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT