Published : 02 Jan 2019 10:24 AM
Last Updated : 02 Jan 2019 10:24 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 15: விளக்குக்கு ஒளி தரும் வாயு

பிப்பெட்: என்ன பியூ. இன்னைக்கு இவ்வளவு லேட்?

பியூரெட்: புத்தாண்டுக்கு ராத்திரி முழிச்சு கேக் வெட்டினேன் இல்லையா, அதனால தூங்கல.

பிப்.: அது முந்தின நாள்தானே?

பியூ.: ஆமா, அன்னைக்குத் தூங்காததுனால இன்னைக்குத்தான் நல்லா தூங்கினேன், அதான் லேட்.

பிப்.: ஓ! 2019-க்கு ஏதாவது புதுசா தீர்மானம் எடுத்திருக்கியா?

பியூ.: ம்... எடுத்திருக்கேன்! முதல் நாள் மட்டும் கொண்டாட்டத்துக்காக ராத்திரி முழிச்சேன், அடுத்து வர்ற 364 நாளும் ராத்திரில ஒழுங்கா தூங்கணுங்கிறதுதான் என்னோட தீர்மானம். அதை இரண்டாவது நாளே ஒழுங்கா கடைப்பிடிச்சிட்டேன்.

பிப்.: உடம்புக்கு நல்ல தூக்கம் ராத்திரில ரொம்ப அவசியம். சரி, இந்த வாரம் எந்தத் தனிமத்தைக் கூட்டிட்டு வரப் போற?

பியூ.: புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் போயிருந்தேன் இல்லையா, அங்கே சிவப்பு நிறமா ஒளிர்ற எழுத்துகளைப் பார்த்தேன். அதைப் பத்திதான் சொல்லப் போறேன்.

பிப்.: அதுல என்ன விசேஷம்?

பியூ.: சிவப்பு நிறத்தில் எழுத்துகளை ஒளிரச் செய்கிற அல்லது அணைந்து அணைந்து எரிகிற விளக்குகளை நீ பார்த்திருப்பே.

பிப்.: ஆமா, பார்த்திருக்கேன்.

பியூ.: நிறுவனப் பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகளில் எழுத்துகள் இரவில் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் மின்னி மின்னி மறையுமே.

பிப்.: ஆமா, அதுக்கு என்ன காரணம்னு சொல்லு?

பியூ.: இந்தச் சிவப்பு-ஆரஞ்சு நிறத்துக்குக் காரணம் நியான் வாயு.

பிப்.: வாயுவா? கண்ணாடிக்கு கலர் அடிச்சிருப்பாங்கன்னுல்ல நான் நினைச்சேன்.

பியூ.: இல்ல, சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் அது ஒளிர்வதற்குக் காரணம், விளக்குக்குள் இருக்கும் வாயுவுக்குள் மின்சாரம் பாய்ந்து வெளியேறுறதாலதான்.

பிப்.: இதுதான் விஷயமா? ஆச்சரியமா இருக்கே.

பியூ.: அலங்கார விளக்குகள்ல அதிகம் பயன்படுத்தப்படுறது நியான் விளக்குதான். அதேபோல, இப்போ சாலைகள்ல எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படுறதுக்கு முன்னாடி, தெருவிளக்குகளும் நியான் விளக்குகளாகவே இருந்தன.

பிப்.: ஆமால்ல, நான்கூடப் பார்த்திருக்கேனே.

பியூ.: அதேநேரம் நியான் வாயு பயன்படுத்தப்படாத மற்ற நிறங்களைத் தரும் விளக்குகளையும் நியான் விளக்குன்னே பொதுவாக அழைச்சாங்க.

பிப்.: அப்படி அழைச்சதுக்கு என்ன காரணம்?

பியூ.: அந்த விளக்குகள் எல்லாமே நோபல் வாயுக்களைப் பயன்படுத்தியவை.

பிப்.: நோபல் வாயுக்களா, ஹீலியமும் அதில்தானே வரும்?

பியூ.: ஆமா, நல்லா ஞாபகம் வெச்சிருக்கியே. இந்த வாயுக்கள் மணமற்றவை, நிறமற்றவை, அதிகம் வினைபுரியாதவை. இப்படித் தனித்தன்மை கொண்டிருப்பதால, நோபல் வாயுக்கள்னு அழைச்சாங்க.

பிப்.: ஹீலியம் மஞ்சள் நிற ஒளியை வெளியிட்டது பத்தியும் பேசினோமே.

பியூ.: நிறமாலைமானியில் பிரகாசமான சிவப்பு நிற ஒளி மூலமாகவே நியானையும் கண்டறிஞ்சாங்க.

பிப்.: சிவப்புதான் நியானோட அடையாளம்.

பியூ.: ஸ்காட்டிய வேதியியலாளர் வில்லியம் ராம்சே, பிரிட்டன் வேதியியலாளர் மோரிஸ் டிராவர்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து 1898-ல நியானை அடையாளம் கண்டாங்க.

பிப்.: அப்ப இந்த நியான் விளக்கெல்லாம் எப்ப வந்துச்சு?

பியூ.: ராம்சேயும் டிராவர்ஸும் கண்டறிஞ்சு நாலே வருஷத்துல வணிகப் பயன்பாட்டுக்கு நியான் வந்திடுச்சு. அதுக்குக் காரணம் பிரெஞ்சுப் பொறியாளர் ஜார்ஜஸ் கிளாடு.

பிப்.: இவ்வளவு சீக்கிரமாவா?

பியூ.: அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு ராம்சேவுக்கு நோபல் பரிசும் கிடைச்சது.

பிப்.: பல ஆச்சரியங்களை நிகழ்த்திய வாயுவா இருக்கே!

பியூ.: நோபல் பரிசு வாங்குனது நியானுக்காக மட்டுமில்ல. முன்னாடி அவர் கண்டறிஞ்ச ஆர்கான், நியானோடு சேர்த்துக் கண்டறிஞ்ச ஸெனான், கிரிப்டான் எல்லாத்துக்கும் சேர்த்துத்தான்.

பிப்.: இந்த வாயுவெல்லாம் என்ன பண்ணுது?

பியூ.: கிரிப்டான் வாயு விளக்குகளோட ஆயுளை அதிகரிக்கப் பயன்படுது. அதாவது மின்விளக்கு இழையைப் பாதுகாக்குது. ஸெனான் பத்தி பின்னாடி சொல்றேன்.

பிப்.: சரி, அடுத்த வாரம் பார்ப்போம், பை பை பியூ.

பியூ.: பை பை பிப்.

 

neon-2jpgleft

இந்த வாரத் தனிமம் - நியான்

குறியீடு - Ne

அணு எண் - 10

கிரேக்க வார்த்தையான ‘நியோஸ்’ என்பதற்குப் புதியது என்று அர்த்தம். அதிலிருந்தே நியான் என்ற பெயர் வந்தது. பிரபஞ்சத்தில் அதிகமுள்ள ஐந்தாவது தனிமம் நியான். ஆனால், பூமியில் இது அரிதாகவே காணப்படுகிறது.

பூமியும் மற்ற கோள்களும் தோன்றிய பெருவெடிப்பின்போது நட்சத்திரங்களில் இருந்து இது உருவாகியிருக்கலாம். காற்றைவிட எடை குறைந்ததாக இருப்பதால், பூமியின் வளிமண்டலத்தில் இருந்து நியான் வெளியேறி இருக்கலாம்.

எளிதில் ஆவியாகக் கூடிய வாயுவாக இருந்தாலும், மற்ற தனிமங்களுடன் நியான் அதிகம் வினைபுரிவதில்லை. காற்றில் இது அரிதாக இருப்பதற்கு, இந்தத் தன்மையே காரணம். வணிக ரீதியில் திரவக் காற்றிலிருந்து காய்ச்சி வடித்தல் முறையில் நியான் பிரித்தெடுக்கப்படுகிறது. காற்று மட்டுமே இதற்கு ஒரே மூலாதாரம்.

அரிய தனிமமாக இருப்பதால், இதன் விலையும் சற்று அதிகம். திரவ நியானை உற்பத்தி செய்வதற்கான செலவு, திரவ ஹீலியத்தை உற்பத்தி செய்வதற்கான செலவைப்போல 55 மடங்கு அதிகம்.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x