Published : 05 Dec 2018 11:37 AM
Last Updated : 05 Dec 2018 11:37 AM
பிளாஸ்டிக் கழிவை மொத்தமாக அள்ளி எடுத்து தராசில் போட்டுப் பார்த்தார்கள். ஆறு கிலோ வந்தது. தனித்தனியே பிரித்தார்கள். பிளாஸ்டிக் கோப்பைகள் 115 கிடைத்தன. பிளாஸ்டிக் பைகள், 25. பிறகு கிழிந்துபோன தார்பாலின் பைகள் ஓர் ஓரத்தில் பந்துபோல் சுருண்டுகிடந்தன. இந்தோனேஷியாவில் கரை ஒதுங்கிய ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில் கிடைத்த பொருட்கள் இவை.
சீனாவில் கணவாய் மீன் ஒன்றை ஆசையோடு பிடித்திருக்கிறார் ஒரு மீனவர். மூன்று அடி நீளமுள்ள பளபளப்பான மீனைக் கண்டதும், அடடா இன்று நல்ல வேட்டை என்று மகிழ்ந்திருக்கிறார். அதன் வயிறு வீங்கியிருந்ததைப் பிறகுதான் கவனித்திருக்கிறார். நல்ல விருந்தை உண்டு முடித்திருக்கிறது போலிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தார்.
பின்னர் பரிசோதித்துப் பார்த்தபோதுதான், மீனின் வயிற்றுக்குள் ஒரு முழு வெடிகுண்டு சத்தம் போடாமல் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. அதுவும் வெடிக்காத குண்டு. பதறியடித்துக்கொண்டு காவல் துறையை அழைத்திருக்கிறார். அவர்கள் மிகக் கவனமாக வெடிகுண்டை எடுத்து ஆளில்லாத இடத்தில் வெடிக்க வைத்து, அப்பாடா என்று மூச்சுவிட்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் ஒரு பன்றி தெரியாத்தனமாகக் கொஞ்சம் தும்மிவிட்டது. அவ்வளவுதான். ஐயோ, பன்றிக்காய்ச்சல். நமக்கும் பரவிவிடும். ஊரே அழிந்துவிடும், பிரபஞ்சமே பிய்ந்துவிடும். வாருங்கள் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம் என்று கையில் தடியோடும் விஷ ஊசியோடும் ஒரு பெரிய கூட்டம் கிளம்பிவிட்டது. ஹச்சு என்று தும்முவது பெரும் குற்றமல்ல.
மருந்து, மாத்திரை கொடுத்து சரிசெய்ய முடியும் என்பதை அவர்கள் உணர்வதற்குள் பல லட்சக்கணக்கான பன்றிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஐயய்யோ, எனக்கு இருமல் வருவதுபோல் இருக்கிறதே, என்ன செய்ய என்று எத்தனை குட்டிகள் பதறினவோ தெரியவில்லை!
நாகரிகமான, பளபளப்பான அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்னமும் பெரிய பண்ணைகளில் ஆயிரக்கணக்கான பன்றிகளை நெருக்கமாகப் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். ”இந்த இரண்டு கால் விலங்குகள்தான் ஒட்டுமொத்த பூமியையும் எடுத்துக்கொண்டுவிட்டனவோ. நமக்குக் கொஞ்சம் கூடுதல் இடம் கொடுத்தால் என்ன? சும்மா வாலாட்டாதே என்று நீங்கள் சொல்லிச் சொல்லி இப்போது பாருங்கள் அம்மா.
என் வால் ஒட்டிக்கொண்டிருக்கிறதா இல்லையா என்றுகூடத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. ஐயோ, அந்தப் பன்றி என் மூஞ்சி மேலேயே உட்கார்ந்திருக்கிறது, கொஞ்சம் எழுந்திருக்கச் சொல்லேன்! அப்பா, ஒரே ஒருமுறை பாட்டுப் பாடவேண்டும் போலிருக்கிறது. என்னை வெளியில் அழைத்துப் போவாயா, மாட்டாயா?”- இது ஒரு பன்றியின் குரல்
கோழிகளும் இப்படிதான் மூட்டைகளைப்போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சிறகுகளும் கை கால்களும் கழுத்து எலும்புகளும் முறிந்து வலியால் துடித்தே கோழிகள் இறந்து போவது இன்னமும் தொடர்கதைதான்.
மாடுகளுக்கும்கூட இதே மாதிரியான சிறைச்சாலைகள்தாம். ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு, அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ என்று பாட்டெல்லாம் ஜோராகத்தான் இருக்கிறது. ஆனால் எங்களை மேயவும் விடுவதில்லை, துள்ளவும் அனுதிப்பதில்லை!
குரங்கு அலப்பும், சிங்கம் முழங்கும், ஆந்தை அலறும், மயில் அகவும், யானை பிளிறும், எருது எக்காளமிடும், வண்டு முரலும், புறா குனுகும் என்றெல்லாம் வகை வகையாக நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா? இந்த உயிரினங்கள் எல்லாம் பெரும்பாலான நேரம் எதற்காகக் குரல் கொடுக்கின்றன தெரியுமா?
”அன்புள்ள இரண்டு கால் விலங்கே! நானும் உன்னைப் போன்ற ஓர் உயிரினம்தான். நான் ஒரு பன்றியாக இருக்கலாம். வண்டாக இருக்கலாம். திமிங்கிலமாக இருக்கலாம். நாயாகவோ எறும்பாகவோ யானையாகவோ கோழியாகவோ இருக்கலாம். எப்படியிருந்தாலும், என்னைவிட உனக்கு அறிவு அதிகம். என்னைவிட உனக்குப் பலம் அதிகம். அறிவியல், தொழில்நுட்பம் என்று என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறாய். இப்படி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் உனக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்.
எனக்கும் மூளை இருக்கிறது. எனக்கும் இதயம் இருக்கிறது. எனக்கும் யோசிக்கத் தெரியும். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. நீ வளர்க்கும் இரண்டு கால் குட்டியை நீ பாதுகாப்பதுபோல் நான் வளர்க்கும் குட்டியை நான் பாதுகாக்கத் துடிக்கிறேன். எனக்கும் குடும்பம் உண்டு. நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்களும் உங்களைப்போல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்.
எங்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து கண்ணாடித் தொட்டிக்குள் போடாதீர்கள். கூண்டுக்குள் அடைக்காதீர்கள். வேலி போட்டு அடைக்காதீர்கள். கட்டிப் போடாதீர்கள். எங்கள் நிலத்தை, எங்கள் குளத்தை, எங்கள் ஆற்றை, எங்கள் உணவை, எங்கள் காற்றை, எங்கள் சுதந்திரத்தை ஆக்கிரமிக்காதீர்கள். எங்கள் இயல்பை, எங்கள் அழகை, எங்கள் பாடலை, எங்கள் மகிழ்ச்சியை, எங்கள் துள்ளலைச் சிறைப்படுத்தாதீர்கள். ”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT