Published : 26 Dec 2018 11:21 AM
Last Updated : 26 Dec 2018 11:21 AM
இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு நாள் விடிகாலை நேரம், திடீரென்று இந்தியா உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டது. எனக்கு இந்தியா என்று பெயர் வைத்தது யார்? அதன் அர்த்தம் என்ன? யாருக்காவது தெரியுமா?
புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு தேடத் தொடங்கியது இந்தியா. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் ஒன்றுவிடாமல் படித்துப் பார்த்தது. இந்தியா என்னும் பெயர் எங்குமே இல்லை. அடுத்து, பவுத்தர்களின் பதிவுகளை வாசித்தது. அதிலும் இல்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, ஓலைச்சுவடி முதல் கல்வெட்டுவரை எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்தது. ம்ஹூம், காணவில்லை.
ஜைனர்களிடம் சென்று விசாரித்தது. ஆன்றோர்களையும் சான்றோர்களையும் சந்தித்தது. “இதோ பார், குழந்தை. சின்ன வயதில் உன்னை ஆர்யவர்த், பாரத்வர்ஷ், ஜம்புத்வீப் என்று பல பெயர்களில் இங்குள்ளவர்கள் அழைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள இந்தியா என்னும் பெயரை இங்குள்ளவர்கள் யாரும் வைத்ததுபோல் தெரியவில்லை!”
இதென்ன விசித்திரம்? இந்தியாவில் உள்ள ஒருவருமே எனக்கு இந்தியா என்று பெயர் வைக்கவில்லையா? அப்படியானால் வெளியிலிருந்து இந்தப் பெயர் வந்திருக்குமோ? ஒரு பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பக்கத்து நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது இந்தியா.
“உன் பெயரை எங்கோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் போனால், பாரசீகத்தில் பெர்சிபோலிஸ் என்றொரு இடம் வரும். அங்குள்ளவர்களுக்கு உன்னைத் தெரிந்திருக்கலாம்” என்றார் தாடி வைத்த ஒரு பெரியவர்.
இந்தியாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அங்குள்ள மக்கள் வரவேற்று தேநீர் அளித்தார்கள். ஒரு புத்தகத்தையும் எடுத்துக் காட்டினார்கள். “சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் டாரியஸ் என்பவர் பாரசீகத்தை ஆண்டுவந்தார். அவர் எந்தெந்த நாடுகளோடு போரிட்டார், எந்தெந்த இடங்களைக் கைப்பற்றினார் என்பது பற்றி எல்லாம் பதிவுகள் இருக்கின்றன. அதில் உன் பெயரும் இருக்கிறது, இதோ பார். “இந்தியா எட்டிப் பார்த்தது. ‘ஹிந்து’ என்றொரு பெயர் அதில் இருந்தது.
அட இது சமஸ்கிருதப் பெயர்போல் அல்லவா இருக்கிறது? தன்னுடைய பையிலிருந்து சமஸ்கிருத அகராதியைத் தேடி எடுத்தது இந்தியா. நினைத்தது சரிதான்! ஹிந்து என்றால் நதி. வேதத்தில் இந்தப் பெயர் இருக்கிறது. பஞ்சாபை அவர்கள் ‘சப்த சிந்து’ என்று அழைத்திருக்கிறார்கள். அதாவது, ஏழு நதிகளின் நிலம். இந்த ஏழுமே சிந்துவின் துணை நதிகள். சிந்துதான் பிரதானம்.
அப்படியானால் என்னைச் சிந்து என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்? “ஆமாம். ஆனால் டாரியஸுக்கும் சரி, அவருக்குப் பிறகு வந்தவர்களுக்கும் சரி, சிந்து என்று வாயில் வரவில்லை. எனவே ஹிந்து ஆக்கிவிட்டார்கள்.” இந்தியா புன்னகை செய்தது. இது இப்போதும் நடப்பதுதான். சென்னையிலிருந்து வசந்தி கொல்கத்தாவுக்குச் சென்றால் அங்கிருப்பவர்கள், வாம்மா பொஷொந்தி என்பார்கள். வித்யா, பித்யா ஆகிவிடுவார்.
சிந்து, ஹிந்து ஆனதில் வியப்பில்லை. சரி, ஹிந்து எப்படி இந்தியா ஆனது? அதற்கு நீ கிரேக்கத்துக்குப் போக வேண்டும் என்று ரொட்டியும் பழமும் கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள் பாரசீகர்கள்.
கிரேக்கர்கள் இந்தியாவைப் பார்த்ததும் கட்டியணைத்துக் கொண்டார்கள். ‘பார்த்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது வா, இண்ட். எப்படி இருக்கிறாய்?’ என்றார்கள். “என்னது இண்டா? சிந்து அல்லது ஹிந்து என்றல்லவா என்னை நீங்கள் அழைப்பீர்கள் என்று நினைத்தேன்?” “அது உங்கள் ஊரில். எங்களுக்கு நீ இண்ட். சில நேரம் இண்டஸ் என்றும் அழைப்போம்.”
ஓ, அப்படியா! என்று இந்தியா புன்னகை செய்தது. அதே வசந்தி கதைதான். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்று நான் பாடினால் பாரசீகர்கள், ‘ஹிந்து நதியின் மிசை’ என்று திருப்பிப் பாடுவார்கள். கிரேக்கர்களோ, ‘இண்ட் நதியின் மிசை...’ அல்லது ‘இண்டஸ் நதியின் மிசை’ என்பார்கள். நன்றி சொல்லிவிட்டு, ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து சில பழங்களைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியது இந்தியா.
வீடு திரும்புவதற்குள் முழு விடையும் கிடைத்துவிட்டது. சிந்து ஹிந்துவாகி பிறகு இண்ட் அல்லது இண்டஸ் ஆகிவிட்டது. இண்டஸ் பகுதியைச் சேர்ந்த நாடு, இண்டியா. ஹிந்து என்று நதியை அழைத்த பாரசீகர்கள் நிலத்தை ஹிந்துஸ்தான் என்று அழைத்தார்கள். துருக்கியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இந்தப் பெயர் பிடித்துவிட்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் மீண்டும் இண்டியா ஆகிவிட்டது. பிரிட்டிஷார் வெளியேறிச் சென்ற பிறகும் இண்டியாவாகவே நீடிக்கிறது. (வசந்திக்கும் வித்யாவுக்கும் இந்தியா). இதுதான் என் கதை.
ஆனால், கதையில் ஒரு திடீர் திருப்பம். என்னுடைய பெயர் தோன்றுவதற்குக் காரணமான சிந்து நதியைச் சந்தித்து கை குலுக்கி, நன்றி சொல்லலாம் என்று வந்ததும் வராததுமாக ஓடினேன். அங்கே போனால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? சிந்து நதி இந்தியாவிலேயே இல்லையாம். புதிதாக பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை உருவாக்கி, சிந்துவின் பெரும் பகுதியை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டார்களாம்.
ஆ! இந்த மனிதர்களை நினைத்தால் நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பெயரை மட்டுமா அவர்கள் மாற்றுகிறார்கள்? பக்கத்தில் ஒரு நடை போய்விட்டுத் திரும்புவதற்குள் ஒரு நதியையே இடம் மாற்றிவிட்டார்களே!
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT