Published : 11 Dec 2018 05:38 PM
Last Updated : 11 Dec 2018 05:38 PM
பிப்பெட்: வணக்கம் பியூ.
பியூரெட்: வணக்கம் பிப்.
பிப்.: டிசம்பர் மாசமும் வந்திடுச்சு.
பியூ.: ஆமா, அரைப் பரீட்சைக்குத் தயாராயிட்டியா?
பிப்.: தயாராயிட்டே இருக்கேன். நடுநடுல மழை பேஞ்சு பள்ளிக்கூடம் போக முடியலேல. அதனால, பாடமெல்லாம் தொடர்ச்சியா படிக்க முடியல.
பியூ.: நீ எப்பவும் படிப்புல கலக்குவியே!
பிப்.: ஆமா, என்னமோ எந்த வேலையையும் வேகமாச் செய்ய முடியல. ஏதோ மந்தமா இருக்கிற மாதிரியே இருக்கு.
பியூ.: அப்படியா, முதல்ல டாக்டரப் பாரு.
பிப்.: இப்ப எதுக்கு டாக்டர பார்க்கச் சொல்லுற?
பியூ.: எல்லாம் ஒரு காரணமாத்தான்.
பிப்.: அப்படியென்ன காரணம்?
பியூ.: உடலுக்கு அவசியம் தேவைப்படும் சத்துகள்ல முக்கியமானது அயோடின். தைராய்டு ஹார்மோன் சுரப்பில் அயோடின் பெரும் பங்காற்றுது. அயோடின் பற்றாக்குறை பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.
பிப்.: என்னோட மந்த நிலைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்ல வர்றியா?
பியூ.: ஆமா.
பிப்.: ஆனா, கழுத்து வீங்கினாத்தானே அயோடின் பற்றாக்குறைன்னு சொல்லுவாங்க?
பியூ.: நீ சொல்றது முன்கழுத்துக் கழலை. உடலில் போதுமான அளவு அயோடின் இல்லைன்னா, கழுத்தில் உள்ள தைராய்டு தசை வீங்கிடும்.
பிப்.: ஓ!
பியூ.: ஆனா, அது மட்டுமில்ல. அதீதக் களைப்பு, அறிவுச் செயல்பாடு மந்தம், மன அழுத்தம், எடை அதிகரிப்பு போன்றவற்றுக்கும் அயோடினுக்கும் தொடர்பு உண்டு.
பிப்.: எனக்கும் அப்படிப்பட்ட பிரச்சினைன்னு சொல்றியா?
பியூ.: உலக அளவுல அயோடின் பற்றாக்குறை 200 கோடி பேரைப் பாதிச்சிருக்குன்னு ஒரு கணிப்பு சொல்லுது. நம் உடல்ல, தைராக்சின் (T4), டிரைஅயோடோதைரோனைன் (T3) என ரெண்டு ஹார்மோன்கள் சீரா சுரக்க அயோடின் அவசியம்.
பிப்.: வேற என்ன பிரச்சினையெல்லாம் வரும்?
பியூ.: அயோடின் குறைபாடு அதிகமா இருந்தா குழந்தைகளோட அறிவு வளர்ச்சியையும் பாதிக்கும்.
பிப்.: இதுக்குத் தீர்வு என்ன, மருந்து மாத்திரை தானா?
பியூ.: ஆமா, அதோட அயோடின் குறைபாட்டைத் தடுக்க உப்புல அயோடின் சேர்த்தாவே போதும்.
பிப்.: ரொம்ப எளிய தீர்வா இருக்கே!
பியூ.: ஆனா அதேநேரம், தேவையற்ற அயோடின் உடலில் சேர்வதும் பிரச்சினைதான். அளவோட இருக்கணும்.
பிப்.: அது சரி. அப்புறம் ஹார்மோன் சுரப்புக்கு மட்டும்தான் அயோடின் பயன்படுதா?
பியூ.: அறுவைசிகிச்சை அரங்குகளிலும் அயோடின் பயன்படுது. காயம் பட்டால் கிருமித்தொற்று ஏற்படாம இருக்கிறதுக்கு வைக்கும் மருந்தான டின்சரில் அயோடினும் எதனாலும் இருக்கு.
பிப்.: காயம் காக்கும் அயோடின் வாழ்க.
இந்த வாரத் தனிமம்: அயோடின் குறியீடு: I அணு எண்: 53 1811-ல் பிரெஞ்சு விஞ்ஞானி பெர்னார்டு கோர்டோய் அயோடினைக் கண்டறிந்தார். கிரேக்கச் சொற்களான Iode, Iodis என்பதற்குக் கத்தரிப்பூ நிறம் என்று அர்த்தம். திட வடிவத்தில் கருநீல நிறத்தில் இருக்கும் அயோடினை வெப்பப்படுத்தினால், கத்தரிப்பூ நிற வாயுவாக மாறும். அதனால்தான் அயோடின் என்ற பெயரை இதற்கு வைத்தார் மற்றொரு பிரெஞ்சு விஞ்ஞானி ஜோசப் லூயி கே லுசாக். பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தனிமங்களில் 61-வது இடத்தில் அயோடின் உள்ளது. நீரில் கரையக்கூடியது என்பதால் கடலில் அதிகமிருக்கிறது. சிலியன் காலிஷே என்ற கனிமத்தில் இருந்தும் அமெரிக்க எண்ணெய்க் கிணற்று நீரிலிருந்தும் அயோடின் உற்பத்தி செய்யப்படுகிறது. சிலியும் ஜப்பானும் அதிகம் உற்பத்தி செய்கின்றன. மருந்துத் தயாரிப்பில் அயோடின் அதிகம் பயன்படுகிறது. கிருமி அழிப்பு மருந்து, எழுதும் மை, சாயங்கள், வேதி வினையூக்கி, ஒளிப்பட வேதிப்பொருட்கள், கால்நடை உணவு போன்றவற்றில் அயோடின் பயன்படுகிறது. |
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT