Published : 05 Dec 2018 11:36 AM
Last Updated : 05 Dec 2018 11:36 AM
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்த அபிசீனிய ராஜ்ஜியத்தின் மன்னராக, கி.பி. 1855-ல் பதவிக்கு வந்தவர் இரண்டாம் தியடோர் (அவரது எத்தியோப்பியப் பெயர், டெவோடிராஸ். அபிசீனியப் பேரரசு என்பது இன்றைய எத்தியோப்பியாவின் ஒரு பகுதி.) தியடோர் பதவிக்கு வந்தபோதே பல பிரச்சினைகள் இருந்தன.
அவரது ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள், அருகிலுள்ள சின்ன மன்னர்கள் எல்லாம் தியடோருக்கு எதிராக நின்றனர். எல்லோரையும் அடக்கி, வீழ்த்தி எத்தியோப்பியாவை வலிமையான ராஜ்யமாக மாற்ற வேண்டும், அதன் கடவுளாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்று தியடோர் கனவு கண்டார். அதற்காகத் தொடர்ந்து போர்களை நடத்திக்கொண்டிருந்தார்.
தியடோர் தன் லட்சியத்தை அடைய கூடுதலாகப் படைகளும் ஆயுதங்களும் தேவைப்பட்டன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ரஷ்ய சாம்ராஜ்யம், பிரான்ஸ் சாம்ராஜ்யம், ஆஸ்திரிய சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு எல்லாம் படை உதவி கேட்டுக் கடிதம் அனுப்பினார். பிரான்ஸிலிருந்து மட்டும் பதில் வந்தது. பிரிட்டிஷ் பேரரசியான விக்டோரியா, வேறு சில அரசியல் காரணங்களால் எத்தியோப்பியாவுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. ஆகவே, அந்தக் கடிதத்தைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டார்.
பிரிட்டிஷிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராதது தியடோருக்குக் கடும் கோபத்தை வரவழைத்தது. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் அங்கே முகாமிட்டிருந்த மிஷனரி ஆட்களை எல்லாம் தியடோர் சிறைபிடித்தார். பிரிட்டிஷ் தூதுவர்களையும் சிறையில் அடைத்தார். அவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
தியடோரின் இந்தச் செயலால் பிரிட்டிஷார் ஆத்திரமடைந்தனர். எத்தியோப்பியாவை நோக்கி ராபர்ட் நேப்பியர் தலைமையில் பிரிட்டிஷ் படைகள் அணிவகுத்தன. உடன், பிரிட்டிஷ்-இந்தியப் படைகளும் சேர்ந்துகொண்டன. வரலாற்றில் பதிவான அதிகப் பொருட்செலவு கொண்ட படையெடுப்புகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1868-ல் பிரிட்டிஷ், பிரிட்டிஷ்-இந்தியப் படைகளை எதிர்கொள்ள முடியாத தியடோரின் படைகள் சரணடைந்தன. தியடோரின் அரண்மனை அமைந்திருந்த மக்டாலா கோட்டையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அவர்களிடம் போர்க்கைதியாகச் சிக்க விரும்பாத மன்னர் தியடோர், துப்பாக்கியைக் கையில் எடுத்தார். தன் வாய்க்குள் தானே சுட்டுக் கொண்டு உயிரைவிட்டார்.
பிரிட்டிஷார், எத்தியோப்பியாவின் செல்வங்களை எல்லாம் நிதானமாகக் கொள்ளையடித்தனர். அதில் முக்கியமான பொருள் எத்தியோப்பியாவின் கிரீடம். இது தங்கம், வெள்ளி, தாமிரத்தால் அப்போஸ்தலர்களின் உருவம் பதித்து இழைக்கப்பட்ட மிக அழகான கிரீடம். (1740-ல் மெண்டெவ்வாப் என்ற அரசி, எத்தியோப்பிய மன்னராகப் பதவியேற்ற தன் மகன் இரண்டாம் இயாசுக்காகச் செய்து கொடுத்தது என்கிறார்கள்.) இன்னொரு பொருள் தங்கத்தாலான திராட்சை ரசம் அருந்தும் கிண்ணம்.
இவை தவிர நிறைய ஆபரணங்கள், பூஜைக்குரிய பொருட்கள், கலைப்பொருட்கள், மன்னர் குடும்பத்தினரது விலை உயர்ந்த ஆடைகள், பகட்டான திருமண ஆடை போன்றவை கொள்ளையடிக்கப்பட்டன.
பிரிட்டிஷார் தாம் கொள்ளையடித்தவற்றை 15 யானைகள், 200 கோவேறு கழுதைகள் மீது ஏற்றிச் சென்றனர். தியடோரின் மகன் இளவரசன் அலேமேயேகு. அப்போது அவனுக்கு வயது ஏழு. அவனையும் பிரிட்டிஷார் தங்களோடு அழைத்துச் சென்றனர். எத்தியோப்பியாவின் கிரீடம், திராட்சை ரசக்கோப்பை உள்ளிட்ட பொக்கிஷங்கள் அரசி விக்டோரியாவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
பின் அவை லண்டனில் இருக்கும் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டன. உலகின் மிகப் பெரிய கலைப்பொருள் அருங்காட்சியகம் இதுதான். பிரிட்டன், தன் காலனி நாடுகளில் கொள்ளையடித்த பல்வேறு பொக்கிஷங்களை இங்குதான் பாதுகாத்துவருகிறது.
இளவரசன் அலேமேயேகுவை அரசி விக்டோரியாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனை அங்கே ஒரு மாளிகையில் வைத்து வளர்க்கச் சொன்னார். இளவரசனுக்கு ரக்பி ஸ்கூலில் கல்வி வழங்கப்பட்டது. வேறு பல விஷயங்களும் கற்று வளர்ந்த எத்தியோப்பிய இளவரசனுக்கு ஆயுள் கம்மியாகத்தான் இருந்தது. பத்தொன்பதாவது வயதில் மீண்டும் எத்தியோப்பியாவைக் காணாமலேயே அவர் இறந்து போனார். அவரது தலையில் அந்தக் கிரீடம் சூட்டப்படவே இல்லை.
இன்றைக்குவரை அந்த எத்தியோப்பியாவின் கிரீடம், விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில்தான் இருக்கிறது. இன்றைய எத்தியோப்பிய அரசாங்கம், தன் தேசத்தில் இருந்து பல்வேறு நாடுகள் கொள்ளையடித்துப் போன செல்வங்களை மீட்கும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன்படி பிரிட்டிஷ் அரசிடமும் எத்தியோப்பியக் கிரீடம், திராட்சை ரசக் கோப்பை உள்ளிட்ட பிற செல்வங்களைத் திருப்பித் தருமாறு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறது.
2018-ல் விக்டோரியோ & ஆல்பர்ட் அருங்காட்சியகம், எத்தியோப்பியாவின் கிரீடத்தையும், திராட்சை ரசக் கோப்பையும், பகட்டான திருமண உடை ஒன்றையும் எத்தியோப்பியாவுக்கே திருப்பித் தருவதாகச் சொல்லியிருக்கிறது. 2019 ஜூன்வரை அருங்காட்சியகத்தில் அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும், பின் எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பொக்கிஷங்களை மீட்பதற்கான தொகையை, நீண்ட காலக் கடனாக எத்தியோப்பியா திருப்பிச் செலுத்தினால் போதும் என்றும் அருங்காட்சியகம் அறிவித்திருக்கிறது.
‘கிரீடமும் மற்ற செல்வங்களும் எத்தியோப்பிய தேசத்தின் சொத்து. அதை பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். முறையாக மன்னிப்புக் கேட்டு, அவற்றைத் திருப்பித் தர வேண்டியது பிரிட்டிஷாரின் கடமை. பிரிட்டிஷாரின் எந்தச் செல்வத்தையும் ஆப்பிரிக்கர்கள் கொள்ளையடித்ததாக வரலாறு கிடையாது’ – இது பெரும்பான்மையான எத்தியோப்பியர்களின் கருத்து.
1937-ல் முசோலினியின் இத்தாலியப் படைகள், எத்தியோப்பியாவில் இருந்து பெரிய ஸ்தூபி ஒன்றை (Obelisk of Axum) கொள்ளையடித்துச் சென்றன. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த, 160 டன் எடையும், 79 மீ உயரமும் கொண்ட பழமையான ஸ்தூபி அது.
2005-ல் இத்தாலி அந்த ஸ்தூபியை எத்தியோப்பியாவுக்குத் திருப்பித்தர ஒப்புக்கொண்டது. அது மீண்டும் எத்தியோப்பியாவில் நிறுவப்பட்டது. அதேபோல, பிரிட்டனும் எத்தியோப்பியாவின் கிரீடம், திராட்சை ரசக்கிண்ணம் உள்ளிட்ட அதன் பொக்கிஷங்களைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT